Question: யோகா செய்தால், உடலளவில், மனதளவில், ஆன்மீக ரீதியாகக் கூட நிறைய பலன்களை அனுபவிக்க முடியும் என்று சொல்கிறீர்கள். உண்மையில் யோகா செய்யும்போது என்ன நடக்கிறது? ஒரு மனிதனின் முழு அமைப்பில் யோகா எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்க முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

யோகா என்றால்...

யோகா என்ற சொல்லுக்கு ஒருமை என்று பொருள். உங்கள் விழிப்புணர்வில் எல்லாவற்றையும் ஒன்று என்று உணர்ந்தீர்களேயானால் அதுதான் யோகா. இந்த நிலை உங்களுக்குள் வர பலவழிகள் உண்டு. உதாரணத்திற்கு ஹடயோகா என்பது உடலிலிருந்து ஆரம்பிப்பது. உடலுக்கென்று தனி அணுகுமுறை, அகங்காரம் இவையெல்லாம் இயல்பாகவே உண்டு. மனதுக்கு மட்டுமின்றி உடலுக்கென்றும் தனியாக அகங்காரம் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிப் பேசினால் ஒன்று நம்புவீர்கள், அல்லது நம்பாமல் இருப்பீர்கள்.
அதற்கென்று சில அணுகுமுறை உண்டு. அதை நீங்கள் ஏற்றாக வேண்டும். உதாரணத்திற்கு நாளையிலிருந்து காலை 5 மணிக்கு எழுந்து கடற்கரையில் நடப்பேன் என்று அலாரம் வைக்கிறீர்கள். அலாரம் அடிக்கிறது. நீங்கள் எழ முயற்சிக்கிறீர்கள். உடல் சொல்கிறது, "பேசாமல் தூங்கு" என்று. நடக்கிறதா இல்லையா? எனவே உடலிலிருந்து ஆரம்பிக்கிறோம். ஹடயோகாவின் முதல்நிலை, பயிற்சிகள் தந்து உடலைத் தூய்மைப்படுத்தி மேல்நிலைச் சக்திகளுக்குத் தயார் செய்வது. நாம் எல்லோரும் உயிரோடிருக்கிறோம், மனிதர்களாக இருக்கிறோம். ஆனால் வாழ்க்கையை எல்லோரும் ஒரே தீவிரத்தில் உணர்வதில்லை. ஏனென்றால் நம்முடைய சக்திநிலைகள் ஒன்றாக இல்லை. நம் பிராணசக்திகளின் நிலை வெவ்வேறாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வாழ்க்கையின் தீவிரத்தை உணர்கிறார்கள்.

உடலில் ஆரம்பமாகும் யோகா...

சிலர் ஒரு மரத்தைப் பார்க்கிறார்கள். அது ஒரு மரம்தான், பலர் அதைப் பார்ப்பதேயில்லை. சிலர் அதை ஆழ்ந்து பார்க்கிறார்கள். ஒரு ஓவியர், அதன் பல நிறங்களின் பலநிலைகளையும் கவனிக்கிறார். வேறு சிலர் அதை மரமாக மட்டுமல்ல, இறைத்தன்மையின் வடிவமாகப் பார்க்கிறார்கள். ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் பார்க்கும்விதம் வித்தியாசமாக உள்ளது. ஏனென்றால் வாழ்க்கையை நீங்கள் உணர்கிற தீவிரம் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறது. எனவே உடலின் தொடர்பில் ஆரம்பிக்கிறோம். ஏனெனில் அது உங்களுக்குத் தெரிந்த ஒன்று. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைப் பற்றிச் சொல்லிப் பிறகு தெரியாத ஒன்றை நோக்கி அழைத்துச் சென்று விளங்கவைப்பது எளிது. யோகாவின் நோக்கமும் இந்த வழிமுறையில்தான் இருகிறது.

உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிப் பேசினால் ஒன்று நம்புவீர்கள், அல்லது நம்பாமல் இருப்பீர்கள். கடவுளைப் பற்றிப் பேசினால் சிலருக்கு நம்பிக்கை வரும். சிலருக்கு நம்பிக்கையிருக்காது. இது உங்களை ஒரு விதமான கற்பனையில் கொண்டு சேர்க்குமே தவிர வளர்ச்சியை வழங்காது. எனவே இப்போது உடல் பற்றிப் பேசுகிறேன். அது உங்களுக்குத் தெரியும். உடல் இருக்கிறதென்று தெரியும். இப்போது மனம் பற்றி பேசுகிறேன். அது குறித்தும் உங்களுக்கு சிறிதளவு தெரியும். அதனை உச்சத்துக்குக் கொண்டு சென்று அதன் அடுத்த நிலைக்கு அழைத்துப் போவதுதான் யோகா. நாம் இருக்கும் நிலையிலிருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதன் மூலம்தான் அதனை உணர முடியும்.

எனவே யோகாவின் ஆரம்பம் இப்படித்தான். உடலோடு, சுவாசத்தோடு, மனதோடு தொடங்குகிறது. இப்போது யோக அறிவியலை பொருள் தன்மையின் அறிவியல் போலவே ஆக்கியிருக்கிறோம். உதாரணத்திற்கு, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களையும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவையும் கலந்தால் தண்ணீர் கிடைக்கும். இதை ஒரு விஞ்ஞானி கலந்தாலும் தண்ணீர்தான் கிடைக்கும். முட்டாள் கலந்தாலும் தண்ணீர்தான் கிடைக்கும். அதைப்போல யோகாவை அறியாமையில் இருப்பவர் செய்தாலும் அது நிகழ்ந்தே தீரும். நம் ஆத்ம சாதனைகளை ஒழுங்காகச் செய்தால் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும். எனவே யோகாவில் தொடக்கத்தில் உடலில் சில பயிற்சிகள் செய்து, பிறகு சுவாசத்திற்கு சென்று, பிறகு மனதை அணுகி, அதன்பின் உங்கள் உள்தன்மையை அணுக வேண்டும். இப்படிப் பல படிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வெறும் உடலளவு பயிற்சி செய்து கொண்டிருப்பது ஆரம்பநிலைதான். எனவே நீங்கள் சொல்வது போல் அவை பிரிவுகள் இல்லை. யோகாவின் பல்வேறு படிநிலைகள்.