“யி” – இந்தியாவை விரும்பும் சீனப் பெண்மணி

yi-indiavai-virumbum-cheena-penmani

“நல்லா இருக்கீங்களா…” என நமக்கு தமிழில் பேசிக்காட்டி தன் பேச்சை தொடங்கினார் ‘யி’. சில மாதங்களுக்கு முன் ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்த ‘யி’ நம்மிடம் ஆங்கிலத்தில் உரையாடக் கிடைத்த வெகு சொற்பமான சீனர்களில் ஒருவர்… இங்கு அவருக்கு பிடித்தது, இரண்டு நாடுகளுக்கும் உள்ள ஒற்றுமை என பல அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார் “யி”. தொடர்ந்து வாசியுங்கள்…

சீனர்கள், இந்தியர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

சீனர்களுக்கு இந்தியர்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது. தாஜ்மஹாலை பற்றியும் இந்திய உடைகள் பற்றி மட்டுமே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். நான், நடுத்தர பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, ஷாரூக்கான் நடித்த “அசோகா” படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு அரசன் புத்தனான கதை அது. அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியாவைப் பற்றி இப்படித்தான் எங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரியவரும். இந்தியர்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள், அவர்கள் எப்பேர்பட்டவர்கள், அவர்கள் பாடும்விதம், ஆடும்விதம் இவற்றை எல்லாம் இப்படித்தான் நாங்கள் தெரிந்து கொள்கிறோம். ஆனால், இந்தியர்கள் மிகுந்த திறந்த மனதுடன் இருக்கிறார்கள் என்பது முக்கியமான ஒரு அம்சம்.

தன்னை சுலபமாய் வெளிப்படுத்திக்கொள்ள இந்தியர்களுக்கு தெரிந்திருக்கிறது. தன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் அவர்களால் அழகாய் வெளிப்படுத்திக்கொள்ள முடிகிறது. தங்கள் உணர்வினை வெளிப்படுத்த அவர்கள் தங்கள் உடலினை பயன்படுத்துகிறார்கள். சீனாவில் இப்படி ஆடிப்பாடும் மக்களை நீங்கள் பார்க்கவே முடியாது. இதனால், எனக்கு இந்தியாவின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து, இந்திய உணவினை சுவைத்துப் பார்க்க, நான் சீனாவில் இந்திய உணவகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆனால், ஈஷாவில் உணவு உண்ட பின்னரே தெரிகிறது நான் சீனாவில் சாப்பிட்டது, உண்மையான இந்திய உணவு அல்ல என்று… அதிக இந்தியர்களுடன் பரிச்சயமாக வேண்டும் என்கிற ஆசை எனக்குள் ஏற்பட்டது. ஆனால், சீனாவில் அது நடக்கவில்லை, வருத்தமாக இருந்தது.

ஈஷா யோக மையத்தில் தங்கியதால் உங்களுக்குள் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

நான் ஈஷா யோக வகுப்பு, 21 நாள் ஹடயோகா வகுப்பு, பாவ ஸ்பந்தனா, சீனர்கள் இங்கு வந்து பங்கேற்ற சீனர்களுக்கான ரெட்ரீட் ஆகியவற்றில் பங்குபெற்றிருக்கிறேன். ஹட யோக வகுப்பு செய்தபோது, அதில் பக்தி பற்றிய வீடியோ இருந்தது. என்னைச் சுற்றியிருந்த அத்தனை விஷயங்களையும் முழு மனத்துடன் வணங்குவது அதில் இருந்தது. 21 நாட்களுக்கு பின்னர், என்னைச் சுற்றியிருந்த அத்தனை விஷயங்களுக்கும் நான் உண்மையிலேயே தலை வணங்கினேன். என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நான் உண்மையிலேயே சிவனை வணங்கினேன். சீனாவில், கடவுள் என்கிற கோட்பாடு பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதிலும் எனக்கு வழிபாடு என்றால் என்னவென்றே தெரியாது. இங்கு வந்தது எனக்குள் ஆழமான மாற்றத்தினை, பக்தியினை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாக அனைத்திற்கும் தலைவணங்கும் மனம் எனக்கு கிடைத்திருக்கிறது.

நீங்கள் ஈஷா மையத்தில் தங்கியபோது நடந்த சுவையான சம்பவம் ஒன்றை நினைவு கூறுங்களேன்…?

என் தோழிக்கு இது நடந்தது. காலையில் பயிற்சிகளை அரக்க பறக்க முடித்துவிட்டு, வந்தவள் உணவு நேரத்தை தவறவிட்டு விட்டாள். பசி பின்னியெடுத்து விட்டது. கிச்சனுக்குள் சென்றவள், அங்கே ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரட் துண்டினைப் பார்த்தாள், அதற்கு தொட்டுக்கொள்ள ஜாம் வேண்டுமே! சாஸினை தேடியவளுக்கு, வெள்ளையாக அங்கே ஏதோ இருந்தது தெரிந்தது. அதனை எடுத்து பிரட்டில் தடவி, வாயில் வைக்கும்போது, அங்கிருந்த அத்தனை பேரும் உரக்க சிரித்துவிட்டார்கள். அவள் சாஸென நினைத்து தடவியது, தோசை மாவு. இதை நினைக்கும் போதெல்லாம் சிரிப்பு வருகிறது. இதனை மறக்கவே முடியாது.

இந்திய உணவு உங்களுக்கு பிடித்திருந்ததா?

சீன உணவை விட இந்திய உணவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடந்த 2 வருடங்களாக நான் சைவ உணவிற்கு மாறிவிட்டேன். பிற உயிர்களை கொன்று சாப்பிடுவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆரம்பத்தில், சைவ உணவு உண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமோ என்கிற எண்ணம் இருந்தது. ஆனால், நான் இத்தாலிக்கு சென்றபோது, அங்குள்ள மருத்துவ கல்லூரி மாணவர்களுடன் பேசிய பின்தான், சைவ உணவு இன்னும் ஆரோக்கியமானது என்பதை தெரிந்து கொண்டேன். இந்தியாவில் ஏகப்பட்ட சைவ உணவு வகைகள் கிடைக்கின்றன; சீனாவில் அப்படி கிடைப்பதில்லை.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள கலாச்சார ஒற்றுமை, வேறுபாடுகளை சொல்ல முடியுமா?

ஒற்றுமை: வடக்கு சீனாவில் நாங்கள் அதிகமாக கோதுமை உணவினை உட்கொள்வோம். தெற்கு சீனாவில், அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படுவது அரிசி உணவு. இந்தியாவிலும் அப்படித்தான் என்று அறிந்தேன்.

வேற்றுமை: சீனாவில், திருமணம் செய்துகொள்ளும்போது, மணமகன் மணப்பெண்ணிற்காக, வீடு, பல்வேறு பொருட்களை வாங்குவதோடு பணமும் தருவார். ஆனால், இங்கு அது தலைகீழாக நடக்கிறது என்பதை அறிந்தேன்.

இந்தியாவிலிருந்து கிளம்பும்முன் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஈஷாவிற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஈஷா யோக மையம் இன்னும் மென்மேலும் விரிவடைய வேண்டும் என்பது என் விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து, உறக்கமில்லாமல் பல இரவுகள் சென்றிருக்கின்றன. மனித நல்வாழ்விற்காக நான் என்ன செய்ய முடியும், என் வாழ்வினை எப்படி சந்தோஷமானதாக, அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்வது என்று நான் நிறைய யோசித்திருக்கிறேன். இப்போது, ஈஷா தான் என் வழி, அது மட்டுமல்ல, இது வாழ்வதற்கான வழி என்பதும் எனக்கு புரிந்தது.

என் கனவினை உணர எனக்கு ஈஷா வழியமைத்துக் கொடுத்தது. என்னைப் போல் சீனாவின் பல இளைய தலைமுறை மக்கள் இப்படி குழப்பத்தில்தான் இருக்கின்றனர். தன் வாழ்வில் ஏதோ அர்த்தமுள்ள ஒன்றினை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. வெறுமனே பகட்டான கார், ஆடம்பரமான வீடு என்று உல்லாசமாய் வாழாமல் தன் வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் ஈஷா தான் வழி என்று நான் நினைக்கிறேன்.

ஈஷாவைப் பற்றி உங்கள் பொதுவான கருத்து…?

சீனாவில் இன்னும் நிறைய பேர் ஈஷா யோகாவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வருங்காலத்தில், நானும் ஒரு ஈஷா யோக ஆசிரியராக ஆவதற்கு ஆவலாய் இருக்கிறேன். முழுநேர ஆசிரியர் பயிற்சியில் இருக்கும் சிலரிடம் பேசிப் பழகியபோது, நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என்ன தேவையோ அதைச் செய்வது, அதனை அவர்கள் செய்யும்விதம், அவர்கள் பேசும் விதம், அத்தனையும் என்மேல் தாக்கம் ஏற்படுத்தியது. அவர்கள் அத்தனை சந்தோஷமாகவும் பரிபூரண ஈடுபாட்டுடனும் உள்ளனர். வருங்காலத்தில் நானும் ஈஷாவில் முழுநேர தன்னார்வத் தொண்டராய் வரலாம் என்றிருக்கிறேன்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert