சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 2

தீவிரத்தின் முழு உருவாய் வாழ்ந்து, தன்னைப் பார்ப்பவர்கள், தன்னைப் பற்றிக் கேட்பவர்கள் என அனைவரையும் தம்பால் ஈர்த்தவர் சிவன். இவர் முதன்முதலில் எங்கு தோன்றினார்? நமக்கு இவர் எப்படி அறிமுகமானார்? இவரின் வாழ்க்கை பற்றி நமக்கு என்ன தெரியும்?

சத்குரு:

முதன்முதலில் சிவனை மனிதர்கள் அறிந்தது இமாலய மலையில். அவர் எங்கிருந்து வந்தார், அவர் தாய் தந்தையர் யார் என யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட 15,000 ஆண்டுகளுக்கு முன் சிவன் இமயமலைகளிலே பரவசத்தில் மிகத் தீவிரமாக ஆடத் துவங்கினார். அவரது பரவசமான நிலை, ஆட அனுமதித்த போது மிகத் தீவிரமாக ஆடினார். ஆனால் அதையும் தாண்டி தீவிரமான போது, நிலையாய், எவ்வித அசைவுமின்றி சிலைவார்த்தார் போல் ஆகிவிடுவார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சிவன் கொழுந்துவிட்டு எரியும் தீயைப் போல் அப்படியொரு தீவிரத்தில் இருந்தார்.

யாரும் இதுவரை அறிந்திராத ஏதோ ஒன்றை அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டாலும், அது என்னவாக இருக்கும் என்று அவர்களுக்குப் புலப்படவில்லை. அது என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவல் மேலோங்கி, சிவனைச் சுற்றி எல்லோரும் குழுமினர். ஆனால் அவரருகில் செல்ல யாருக்குமே தைரியம் வரவில்லை. சிவன் கொழுந்துவிட்டு எரியும் தீயைப் போல் அப்படியொரு தீவிரத்தில் இருந்தார். அதனால், எப்படியும் ஏதேனும் நடக்கும், அப்போது தெரிந்து கொள்வோம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஒன்றும் நடக்கவில்லை.

தன்னைச் சுற்றி இத்தனைப் பேர் இருப்பதை சிவன் அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. ஒன்று தீவிரமாக ஆடினார் அல்லது சுற்றியிருக்கும் எதிலும், சுற்றி நடக்கும் எதிலும் கவனமின்றி எள்ளளவும் அசையாது சிலையாக வீற்றிருந்தார். மக்கள் வந்தனர், சில மாதங்கள் காத்திருந்தனர், ஆனால் தன்னைச் சுற்றி இத்தனைப் பேர் காத்திருப்பது கூட அவருக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை என்பதால் வந்தவர்கள் சென்றுவிட்டனர்.

ஆனால் 'தெரிந்து கொண்டே தீருவோம்' என்ற அசையா உறுதியுடன் ஏழு பேர் மட்டும் அங்கேயே காத்திருந்தனர். இந்த ஏழ்வரும் சிவனிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏங்கித் தவித்தாலும், சிவன் அவர்களை புறக்கணித்துக் கொண்டே இருந்தார். அந்த ஏழ்வரும் சிவனிடம் கெஞ்சினர், "நீங்கள் அறிந்ததை நாங்களும் அறிய வேண்டும், தயவுசெய்து எங்களுக்கு கற்றுத் தாருங்கள்," என்று மன்றாடினர்.

சிவன் அவர்களிடம், "முட்டாள்களே! நீங்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதை நீங்கள் அறிய முடியாது. இதை அறிவதற்கு, உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். மிக மிகத் தீவிரமாக உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இது பொழுதுபோக்கல்ல," என்று அவர்களை புறக்கணித்தார்.

#ShivaShiva

அடுத்த பதிவில்...

இந்த ஏழ்வர் தான் இன்று நாம் கொண்டாடும் சப்தரிஷிகளாக உருவாயினர். இப்படி இவர்களை புறக்கணித்த சிவன், இவர்களை சிறிதும் ஏற்காத சிவன், மனம் மாறி இவர்களை சிஷ்யர்களாக எப்படி ஏற்றார்..? அடுத்த பதிவில் வருகிறது...

சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்

ஓவியர் பிரியேந்த்ர சுக்லா அவர்களுக்கு நன்றிகள்