தமிழகத்தையும் அம்மன் வழிபாட்டையும் பிரித்து பேச முடியாத அளவிற்கு அன்பிற்குரிய அன்னையாய், பாசத்திற்குரிய சகோதரியாய், உயிர் காக்கும் தெய்வமாய் தன் அருள் பார்வையில் பலரையும் உய்வித்து வரும் பெண் தெய்வங்கள் இங்கு ஏராளம். இதோ இந்த ஊர் மக்களை தன் அருட் கடாட்சத்தால் ஆட்டிப் படைத்த தாயின் கதை இது...


மஹேஷ்வரி:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தம் என்பது பலருக்கும் தெரியும். இனி அலங்காநல்லூர் என்றால் பைரவியின் அழகுதான் என்று சொல்லும் அளவிற்கு அங்கே தேவியின் ஆடி மாத வைபவமும் அலங்காரமும் அமைந்திருந்தது.

கோவை வெள்ளியங்கிரி லிங்கபைரவி திருத்தலத்தில் பௌர்ணமி பூஜைக்கு சென்றிருந்தார் திரு.யுவன். தேவியை தரிசித்தவர் அவளை அப்படியே தன் இதயத்தில் சுமந்து அலங்காநல்லூர் வந்து சேர்ந்தார். பௌர்ணமி அதிர்வுகளில், தேவியின் அன்பில் திளைத்த இவரது இதயம் பாடாய் படுத்த அன்னையை எப்படியும் தன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என விரும்பினார்.

வீட்டில் பைரவி புண்ணிய பூஜாவிற்கு ஏற்பாடு செய்தவர், பெரும்பாலும் ஈஷாவைப் பற்றி தெரியாத பொதுமக்களுக்கு அதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். பைரவி புண்ணிய பூஜையில் தேவியின் சக்தி வெள்ளத்தில் யுவன் அவர்களின் வீடு நிரம்ப அந்த சக்தி சூழ்நிலையில் பலராலும் உட்கார முடியவில்லை, அந்த சக்தி அனைவரையும் சற்றே அசைத்துப் பார்த்தது.

தேவியின் அதிர்வுகளில் மலர்களின் மென்மையையும் தாய்மையின் அரவணைப்பையும் காளியின் தீவிரத்தையும் ஒரே இடத்தில் உணர்ந்த மக்கள், இதனை வார்த்தைகளால் சொல்ல இயலாமல் “யார் இந்த சாமி! சாமியின் படம் கிடைக்காதா? ”என இவரிடம் கேட்கத் துவங்கிவிட்டனர்.

சில மாதங்களுக்குள் அந்த வீதியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் லிங்கபைரவியின் படம் அருள் வழங்கத் துவங்கியது. தேவி இங்கே நிரந்தரமாய் குடிபுகப் போகிறாள் என்பதை உணர்ந்த யுவன், இனி கருவியாய் செயல்படும் பாக்கியத்தை பைரவி தனக்கருளியதை உணர்ந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"இனி தூங்குவதுதான் எப்படி? ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை,” என்னும் நிலையில் இருந்தார். பக்தி என்னும் பைத்திய நிலை பிடித்துவிட்டதால் செய்யும் ஒவ்வொரு செயலும் அவருக்கு போதையாகத்தான் இருந்தது.

மூச்சிலும் பேச்சிலும் தேவிதான்!

அலங்காநல்லூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய நிர்வாகியிடம் சென்று பைரவியின் திருவுருவ படத்தைக் காட்டி, “இதை தங்கள் ஆலயத்தில் வைத்துக் கொள்ள அனுமதி கிடைக்குமா?” என்று கேட்ட யுவனிற்கு காத்திருந்தது அந்த ஆச்சர்யம். எந்த எதிர்ப்பும் இல்லாமல் பக்தியுடன் தேவியை வரவேற்ற அந்த ஆலய நிர்வாகி தேவிக்கென ஆலயத்தில் தனியிடத்தை ஒதுக்கிக் கொடுத்தார்.

குங்கும மேனியில் தன் வெளிர் கண்களை திறந்து பார்த்த வண்ணம், ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் நிலையாக அமர்ந்த லிங்கபைரவியின் திறந்திட்ட கண்கள் ஊடுருவாத உள்ளங்களே இல்லை எனலாம். காண்பவரையெல்லாம் ஒருவித சிலிர்ப்புக்குள்ளாக்கிய அவள் சர்வ மங்களியாய் ஆலயத்தின் சக்தி நிலையையே மாற்றினாள்.

பக்தி நிலையில் தாகம் அத்தனை எளிதாக தீர்ந்து விடுவதில்லை. தேவிக்கு அலங்காரம் செய்து ஆரவாரமாய் கொண்டாட ஆசை கொண்டனர் நம் தன்னார்வத் தொண்டர்கள். கோவில் நிர்வாகியிடம் மீண்டும் பேச, அவர் "ஓ செய்து விடுவோமே!" எனக் கூற... ஆடி வெள்ளி அமர்க்களப்பட்டது. முதல் வார வெள்ளிக்கிழமை 108 விளக்குகள் ஏற்றி பூஜை செய்யத் திட்டமிட்டனர்.

ஆனால் அதற்கு 108 பேர் கூட வேண்டுமே? எந்த விளம்பரமும் இல்லை. ஆர்பாட்டமும் இல்லை. கூப்பிடாமலே அங்கே ஆயிரம் பேருக்கு மேல் கூட, திக்கு முக்காடிப் போயினர் ஆலய நிர்வாகத்தினர்.

அடுத்த வாரம் பூ அலங்காரம் செய்து, பூஜை செய்துவிடலாம் என முடிவு செய்தனர்.

“மூன்றாவது வாரம் பைரவிக்கு பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யலாமா?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் தருவாயில் “100 கிலோ பழம் நான் வாங்கி தருகிறேன்,” என்று ஒருவர் திடீரென ஒப்புக் கொள்ள “நான்காவது வாரம் வளையல் அலங்காரம் செய்யலாம். அதற்கு வளையல் வாங்கும் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று இன்னொருவர் வந்துவிட்டார்.

இவர்கள் அனைவரும் ஈஷா யோகா வகுப்பு செய்யாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதம் என்றால், அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் தங்களுக்கு வழக்கமான கோவில்களுக்கு மக்கள் செல்வதே வாடிக்கை. இப்படியிருக்கையில் ஒரு புது தெய்வத்தை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிந்தது? திடீரென பைரவி பக்திக் காய்ச்சல் ஊரெங்கிலும் தொற்றிக் கொண்ட அதிசயம் எப்படி நடந்தது?

பலர் மனதிலும் இதே கேள்விதான்!

“நடப்பதெல்லாம் நம் சிந்தனைக்கு மேலே தான் இருக்கிறது! இதெல்லாம் எப்படி நடக்கிறது என்றே புரியவில்லை! பைரவியின் படத்தை பார்த்து இந்த மாற்றம் நிகழ்கிறதா என்றும் புரியவில்லை!’ என்றே இவர்களிடமிருந்து பதில் வருகிறது.

“யார் இந்த சாமி?”
“பார்த்தா பயமா இருக்கு?”
“ரொம்ப வித்தியாசமா இருக்கு?”
“ஆனா பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு!”
“இந்த சாமி படம் இருந்தா கொஞ்சம் குடுங்க நாங்க எங்க வீட்ல வெச்சிக்கறோம்!”

“சாமி தரிசனம் செய்ய வெள்ளியங்கிரிக்கு எப்ப எங்கள கூட்டிட்டு போவப் போவப் போறீங்க,” என்று பைரவி ஃபேன் கிளப் அமர்க்களமாக பெரிதாகிக் கொண்டே போக, ஐந்தாவது வாரம் கூழ் காய்ச்சி ஊரெல்லாம் அமர்க்களப் படுத்திவிடலாம் என்று காத்திருக்கும் இவர்களுக்கு, “எங்க ஊர்ல லிங்கபைரவி கோவில் கட்டணும்," “எங்க ஊருக்கு சத்குரு வரணும்,” என்பதுதான் வாழ்வின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

பத்திரகாளியும் இவளே
பைத்திய நிலையும் இவளே
உக்கிர நிலையும் இவளே
மலரின் மென்மையும் இவளே
பூஜை செய்திட போதை தருபவள் இவளே
சேவை செய்திட அன்பைப் பொழிபவள் இவளே
உந்தன் குங்கும மணம் எங்கள் ஊரில் கமழ
எங்கள் குருவின் திருவடி எங்கள் ஊரில் நடந்திட
அருள் தருவாய்! அருள் தருவாய்!

என இவர்களைப் போல உலகெங்கிலும் பல ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் பைரவி தேவி!