நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 5

ஊர்வன, பறப்பன, முட்டை இட்டுக் குஞ்சு பொறிப்பன, குட்டி போட்டுப் பால் கொடுப்பன என்று அழகாக வகைப்படுத்திய மனிதன், அவற்றுக்கும் தனக்கும் உள்ள தொடர்பினை உணர்ந்ததாகத் தெரியவில்லை. மனிதனின் கொலைவெறி ஆட்டத்தால் விளைந்த அவலங்களை நம்மாழ்வார் இங்கே விவரிக்கிறார்...

நம்மாழ்வார்:

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்தது இது... சாலை ஓரங்களில் 'எல்ம்' மரங்கள் வளர்ந்திருந்தன. அவற்றின் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்றன. மரங்களின் அழகு ஜப்பான் வண்டுகளால் குறைந்துபோனதாகக் கருதிய விஞ்ஞானிகள், D.D.T என்ற உயிர்க் கொல்லி நச்சுக் கரைசலை விமானத்தின் மூலம் தெளித்தார்கள். வண்டுகள் செத்துப்போயின. ஆனால், நஞ்சு அங்கு நின்று போகவில்லை.

D.D.T நஞ்சு படிந்த இலைகள் மண்ணில் விழுந்தபோது, அவற்றை மண்புழு உண்டு மடிந்து போயின. போதிய அளவு நஞ்சு உண்ணாத புழுவின் இயக்கம் தொய்ந்தது. நஞ்சு உண்ட மண் புழுவைத் தின்ற ராபின் பறவைகள் மாண்டன. குறைந்த நஞ்சு உண்ட ராபின்கள் கூடு கட்டவில்லை. கூடு கட்டிய அனைத்தும் முட்டை இடவில்லை. இட்ட முட்டைகள் அனைத்தும் குஞ்சாக மாறவில்லை. ராபின் பறவைகள் மலடாகிப்போனதை உணர்ந்தார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தெளித்த நச்சின் ஒரு பகுதி ஆற்று நீரில் கலந்தது. மீன்கள் மெதுவாக நகர்ந்தன. மீன்களைத் தின்ற வழுக்கைத் தலைக் கழுகு (அமெரிக்காவின் தேசியப் பறவை) மலடாகிப்போனது. இதனைப் புத்தகமாக வடித்துள்ளார் கடலியல் விஞ்ஞானி, ராச்சேல் கார்சன்.

ராபின் பறவை, வசந்தம் வரப்போவதைக் கட்டியம் கூறுபவை. அவை மடிந்துபோனதால், வசந்தத்தை வரவேற்க ஆள் இல்லை. அதனால், தான் எழுதிய புத்தகத்துக்கு ‘மௌன வசந்தம்’ என்று பெயர் சூட்டினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் இருந்த பச்சைத் தவளைகளைப் பிடித்து மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பாம்புகளுக்குத் தீனி இல்லாது போயிற்று. பாம்புகள் ஊருக்குள் வந்தன. அங்குதான் சேமிக்கப்பட்ட தானியத்தைத் தின்று எலிகள் பெருகிக்கிடந்தன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டம் போட்டார்கள். தனது தீவனம் குறைந்து போனதால் யானைகள், மனிதர்கள் பயிர் வைத்த கரும்புத் தோட்டங்களுக்கு வருகின்றன. யானைகள் ஊருக்குள் புகுந்து கலாட்டா செய்கின்றன என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன.

செடிகளைத் தின்னும் பூச்சிகளைப் பிற பூச்சிகளும் பறவைகளும் தின்னுகின்றன. தட்டான், சிலந்தி, குளவி, பொறிவண்டு போன்ற உயிரினங்களின் உணவு, தாவர உண்ணிகள். பயிரில் நஞ்சு தெளித்ததால் நன்மை செய்யும் உயிரினங்கள் அழிந்தன. அதனால் பயிர்களில் பூச்சிகளால் ஏற்படும் சேதம் அதிகரித்தது.

கீழைக் கடலில் உள்ள மாலத் தீவு பகுதிக்கு, பணக்கார நாட்டவர் துப்பாக்கிகளுடன் உல்லாசப் பயணம் போனார்கள். அங்குள்ள மரங்களில் எடாடோ பறவை இருந்தது. அந்த அப்பாவிப் பறவைகளுக்கு மனிதர்கள் தங்களைச் சுட்டு, கறி சமைத்து உண்பார்கள் என்பது தெரியாது. அவை பயந்து, ஓடித் தப்பிக்க முயலவில்லை. அவ்வளவு பறவைகளையும் கொன்று தின்றார்கள்.

இப்போது அங்கு, அந்த மரங்களின் இனப் பெருக்கம் அடியோடு நின்றுபோனது. அதற்குக் காரணியாக இருந்த எடாடோ பறவையைத்தான் கொன்று தீர்த்துவிட்டோமே. எடாடோ பறவையின் குடல் வழியாகப் புகுந்து வெளியேறுகிற மரத்தின் விதைகள் மட்டுமே முளைப்பதாக, காலம்போன பிறகு மனிதன் கண்டு கொண்டான்!

ஒரு உயிர் சார்ந்தே மற்றொன்று இந்த உலகத்தில் வாழ முடியும். மனிதனிடம் மட்டும் ஏன் இந்தக் கொலைவெறி...?! மாறுங்கள் மனிதர்களே!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

 

epSos.de; BioDivLibrary @ flickr