தொலைத் தொடர்பு சாதனங்களில் தற்போது பலவித வசதிகளுடன்கூடிய ஸ்மார்ட் ஃபோன் உலகை நம் கைக்குள் அடக்கிவிடுகிறது; ஆனால், பலருக்கும் அதுவே சிக்கலாகியும் விடுகிறது! வெளி உலகை மறந்து அலைபேசியிலேயே சிக்கித் தவிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதை சத்குரு நினைவூட்டுகிறார்!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அலைபேசி உங்களுக்கொரு கவனச் சிதறல் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், கைலாயத்தில் மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணத்தில் ஆதியோகியைப் போல் அமர்ந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள். செல்போனைவிட மிகப் பெரிய கவனச்சிதறலை உருவாக்கக்கூடிய ஒரு சூழ்நிலை அல்லவா அது?

அலைபேசி உங்கள் வசதி கருதி உருவாக்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லமையை உங்களுக்குத் தருவதன் நோக்கமே, உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத்தான்.

அலைபேசி உங்கள் வசதி கருதி உருவாக்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லமையை உங்களுக்குத் தருவதன் நோக்கமே, உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத்தான். உங்கள் வேலைகள் எளிதாகவும் விரைவாகவும் முடிந்தால் தியானத்திற்கு அதிக நேரம் கிடைக்கும்.

முன்னரெல்லாம், இந்தியாவில் தொலைதூர தொலைபேசி அழைப்புகள் செய்வது எவ்வளவு சிரமமென உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஈஷா அறக்கட்டளை ஆரம்ப நிலையில் இருந்த காலகட்டத்தில் நான் நகரம் விட்டு நகரம் பயணம் செய்து கொண்டே இருந்தேன். வாரம் ஒருமுறை நாட்டின் பல பகுதிகளுக்கும் அயல்நாடுகளுக்கும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் செய்ய வேண்டி வரும்.

கொட்டை எழுத்தில் எஸ்.டி.டி என எழுதப்பட்டிருக்கும் தொலைபேசி நிலையங்களில் காரை நிறுத்துவேன். அதன் உரிமையாளரிடம் நல்ல ஒரு தொகையை முன்னமே கொடுப்பேன். பின்னர் தொலைபேசி அழைப்புகளைத் தொடங்குவேன். எல்லா அழைப்புகளையும் முடிக்கும்போது என் விரல்கள் “விண் விண்” என வலிக்கும். சுகாதாரமற்ற அந்தத் தொலைபேசி நிலையத்தில் நெடுநேரம் நின்ற வண்ணம் பேசி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

இப்போதெல்லாம் நான் தொலைபேசி எண்களை அழுத்தக்கூட வேண்டியதில்லை. ஒருவர் பெயரை நான் சொன்னால் போதும், அலைபேசியே அவரை அழைத்துவிடுகிறது.

இத்தகைய அருமையான வசதியை அனுபவிக்காமல் அது குறித்து புகார் சொல்கிறீர்கள். ஏனென்றால், ஒன்றை செய்யத் தொடங்கியபின், அதனை எப்படி நிறுத்துவது என்று உங்களுக்கு தெரிவதில்லை. நீங்கள் சாப்பிடத் தொடங்கினால் எப்போது நிறுத்துவதென உங்களுக்குத் தெரியாது. இது வசதிகளால் வருகிற சிக்கல் அல்ல. விழிப்புணர்வு இன்மையால் வருகிற சிக்கல். நம் வாழ்வை மேம்படுத்துவதற்காக வருகிற வசதிகளை நாமே சிக்கலாக்கிக் கொண்டால் அது அறியாமையின் விளைவேயன்றி வேறல்ல.

மனிதர்களோடு நீங்கள் பெரிதாகப் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் சுமூகமாகத்தான் இருப்பார்கள். எல்லா நேரமும் உங்களால் வாட்ஸப்பை பார்த்துக்கொண்டே இருக்கமுடியுமா என்ன? சிறிதுநேரம் அலைபேசியை நீங்கள் அணைத்து வைத்துவிட்டாலும் உங்கள் தலையீடு இல்லாமல் இந்த உலகம் நன்றாகத்தான் இயங்கும். உங்கள் அலைபேசியை அணைத்து வைத்துப் பழகினால் அந்த நேரங்களில் பல அர்த்தமுள்ள காரியங்களைச் செய்ய முடியுமென்பதை அனுபவரீதியாக உணர்வீர்கள்.

இருக்கும் வேளையில் மற்றவர்களோடு மோதல்களை வளர்த்துக் கொள்ளாமல் இருந்தால், எல்லோரும் உங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். எல்லோருடனும் பெரிய மோதல்களை வளர்த்துக் கொண்டால், உங்களுக்கு மரணம் நேரும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். எனவே, மகிழ்ச்சியை உங்கள் இருப்பின் மூலமாக பரப்பப் போகிறீர்களா, இறப்பின் மூலமாகப் பரப்பப் போகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.