"சந்தாரா" - சமண மதத்தில் உபவாசம் இருந்து, விழிப்புணர்வாய் உடலை விடும் ஒரு செயல்முறை. இதற்கு சமீபத்தில் நீதிமன்றம் தடைவிதித்து, பின்னர் தடையை பின்வாங்கிக் கொண்டது. இந்தக் கட்டுரையில், ‘விழிப்புணர்வாய் உடலைவிடும்’ ஒரு செயல்முறை எத்தனை முக்கியம் என்பதைச் சொல்லும் சத்குரு அவர்கள், மெக்காலேவின் ஆதிக்க ஆட்சிமுறையிலிருந்து தோன்றிய சட்டங்களிலிருந்து இதுபோன்ற தீர்ப்புகள் தோன்றுவதையும் சாடுகிறார்.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடலை விழிப்புணர்வாய் துறக்கும் செயல்முறை சமண சமூகத்தில் மட்டுமல்ல, யோகப் பாரம்பரியத்திலும் வழக்கிலுள்ள ஒரு விஷயம்தான். இந்து முறையிலும் இது வழக்கிலுள்ளது. தன் உடலை விழிப்புணர்வாய் பலரும் நீத்தனர் என்பதற்குப் போதுமான வரலாற்று, புராணச் சான்றுகள் நிரம்பவே உள்ளன. இப்படி உடல் நீப்பதை ஞானத்தின் உச்சமாக இங்கு கண்டனர் அல்லது மனிதனது அழியும் தன்மையை ஏற்றுக்கொள்வதாகப் பார்த்தனர்.
உபவாசம் என்பது நீரில்லாமல், உணவில்லாமல் ஒருவரை வாட்டுவதல்ல, ஒருவர் இந்த பூமியின் பாகமான தன் உடலுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவினை விழிப்புணர்வாய் கவனிப்பது அவசியம். அதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முறை உபவாசம். யோகப் பாரம்பரியத்தில், ஒருவர் தன் உடலுடனான தன் அடையாளத்தை சில மணி நேரங்களில் துண்டிக்க, சில வழிமுறைகள் உள்ளன. விழிப்புணர்வாய் உடல் நீப்பதே இதன் பின்னணியில் உள்ள அடிப்படைப் புரிதல். ரோகியாய் (நோயாளியாய்) அல்லாமல், யோகியாய் உடல் நீப்பதே இந்தச் செயலின் சாராம்சம்.

மனிதர்களை விடுங்கள், விலங்குகள்கூட தனக்கு உண்டான நேரம் வரும்போது உணவு, நீர் விடுத்து, சரியான நேரத்தில் உயிர்விடுகிறது. சில நாகப்பாம்புகள் விருப்பத்துடன் உணவைத் தவிர்த்து, மிக அமைதியாக, தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உயிர் விடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

கர்நாடகாவில் ஸ்வாமி நிர்மலானந்தா என ஒருவர் இருந்தார். அவரது கடைசி சில வருடங்களில் அவருடன் நெருக்கமாய் இருப்பதற்கான வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர் தன் உடலை விழிப்புணர்வாய் நீத்தபோது, அவருக்கு வயது 72. அதற்குச் சில வாரங்களுக்கு முன், தான் 1997-ம் வருடம் ஜனவரி மாதம் உடலை விட்டு நீங்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். செய்தித் தாள்கள் இது குறித்து விமர்சித்தன, தர்க்கவாதிகள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என அவர்மீது வழக்கு தொடர்ந்தனர். இதனால், அவரது ஆசிரமத்தில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

அவரது ஆசிரமம் வெறும் 14 ஏக்கர் மட்டுமே; அதைவிட்டு அவர் வெளியே வந்ததும் கிடையாது. அங்கு நிறைய கனி கொடுக்கும் மரங்கள் இருந்தன. ஆனால் அவர், ஒருமுறை கூட அங்கிருந்த கனிகளைப் பறித்தது கிடையாது. மரங்களைத் துன்புறுத்த அவர் விரும்பியதில்லை. பழங்கள் கீழே விழுந்தால், அவற்றை எடுத்து உண்டார். கீழே விழும் பூக்களைப் பறித்து பூஜைக்கு பயன்படுத்தினார். மிக மென்மையான வாழ்க்கை வாழ்ந்தார். 1996-ம் வருடம் டிசம்பர் மாதம் நான் அவரை, அவரது ஆசிரமத்தில் பார்க்கச் சென்றபோது, என்னை ஆரத் தழுவி அழுதார். “என் ஆசிரமத்தில் காவலர்களை நிறுத்தியிருக்கிறார்களே...” என்றார். தன் ஆசிரமத்தில் காவலர்கள் இருப்பது, அவருக்கு அவமானகரமான ஒரு விஷயமாக இருந்தது.

ஒரு நாள், அவர் உபவாசம் இருக்கத் துவங்கினார். சர்ச்சை துவங்கியது. தன் உயிரை நீப்பேன் என அவர் அறிவித்திருந்த நாளில் ஸ்வாமியைக் கைது செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த நடவடிக்கைகளால் அலுத்துப் போயிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னமே, தன் ஆசிரமத்தில் உள்ள சிறிய மேடையில் அமர்ந்து, காவலர்கள் உட்பட கிட்டதட்ட 40 பேர் முன்னிலையில், அமைதியாக தன் உடல் நீத்தார். இதுபோல், நேரம் வரும்போது தன் உடலை நீத்தவர்கள், கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் உள்ளனர். இதுபோன்ற பல உதாரணங்களை இந்த தேசத்தில் நம்மால் சொல்ல முடியும். மனிதர்களை விடுங்கள், விலங்குகள்கூட தனக்கு உண்டான நேரம் வரும்போது உணவு, நீர் விடுத்து, சரியான நேரத்தில் உயிர்விடுகிறது. சில நாகப்பாம்புகள் விருப்பத்துடன் உணவைத் தவிர்த்து, மிக அமைதியாக, தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உயிர் விடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

துரதிருஷ்டவசமாக, பல மருத்துவ அறிஞர்களும் தங்கள் மேற்கத்திய சகாக்களையே பின்பற்றுகிறார்கள். அதனால், அனைவருமே தங்கள் கைகளாலேயே, பெரும் பொருட்செலவில் இறக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உடலுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படுகிற இந்த அடையாளம் மேற்கத்தியத் தாக்கத்தினால் உண்டானது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு உரிய அத்தனை மரியாதையுடனும் இதனை நான் சொல்கிறேன். அவர்கள் சட்டம் சார்ந்த விளக்கத்தினை மட்டுமே அளிக்கிறார்கள். இந்தச் சட்டங்களும், இந்திய தண்டனைச் சட்டமும், 1857-ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போராட்டங்கள், கலகங்களுக்குப் பின்னர் 1860-களில் வரையப்பட்டன. இந்தத் தீர்ப்பு, கிழக்கத்திய ஞானத்தின் மீது மெக்காலே போடும் ஆட்டம் என்று சொல்லலாம்.