இந்திய நதிகளைக் காப்பாற்றுவதற்கும் மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்குமான திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பல்வேறு விவசாய சங்கங்களிலிருந்தும் 101 தலைவர்கள் ஈஷா யோக மையத்தில் ஒன்று திரண்டனர்.

சத்குருவுடன் நிகழ்ந்த இந்த சந்திப்பில் பங்கேற்ற தலைவர்கள் பல்வேறு அம்சங்கள் குறித்து உரையாடினர்; விவசாயத்தின் முக்கிய அங்கங்களான மண் வளம் மற்றும் நீர் வளம் பாதுகாப்பது குறித்தும், அதனால் தேசத்தின் உணவு மற்றும் நீர் ஆதாரம் எவ்விதம் மேம்படுகிறது என்றும் விவாதித்தனர். மேலும், விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்கான நடைமுறை சாத்தியங்கள், விவசாய உற்பத்திப் பெருக்கம், இயற்கைமுறை விவசாயத்தை ஊக்குவிப்பது, மற்றும் விவசாயிகளின் இலாபகரமான சந்தை நிலவரத்தை பலப்படுத்துவது போன்றவையும் பேசப்பட்டன.

உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் திரு.கே.செல்லமுத்து அவர்கள், தமிழ் நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் திரு.க.சுப்பிரமணியம் அவர்கள், காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் பிரதிநிதி திரு.ஆர்.தண்டபாணி அவர்கள், திரு. காந்திபித்தன் அவர்கள், திரு. கே.வி. இளங்கீரன் அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதி திரு.நல்லசாமி அவர்கள், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி திரு.கே. வி. ராஜ்குமார் அவர்கள், தமிழக காவேரி விவசாய சங்கம் திரு. டி.பி.கே. இராஜேந்திரன் அவர்கள், இயற்கை விவசாய புரமோடர் மற்றும் எழுத்தாளர் திரு.தூரன் நம்பி அவர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

'உழவர் விற்பனையாளர் சங்கங்கள்', விவசாயிகளுக்கு எவ்விதம் ஊக்கமளிக்க முடியும் போன்ற விஷயங்கள் உள்ளிட்ட பலவற்றையும் சத்குருவும், மற்ற தலைவர்களும் கலந்தாலோசித்தனர். தேசத்தின் மிக முக்கியமான பங்களிப்பாளர்களுள் விவசாயிகளும் இடம்பெற்றுள்ளதைக் குறித்து பல உண்மைகளை சத்குரு முன்வைத்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"65% மக்கள் விவசாயிகளாக இருக்கும் நிலையில், தமிழ் நாட்டின் 40% நிலத்திற்கு உரிமையாளர்களாக இருந்துகொண்டு, ஒட்டுமொத்த ஜனத்தொகையினருக்கும் உணவு வழங்குகின்றனர். விவசாயிகள் ஒன்று திரளும்போது, நாட்டின் எந்தத் தொழில்துறையையும் அல்லது நிறுவனத்தையும் விட, அவர்களே பெரிய நிறுவனமாக இருக்கின்றனர்", என்று தலைவர்களுக்கு நினைவுபடுத்தினார்.

"நாற்பது சதவிகித நிலத்துக்கும், மக்களின் உணவுக்கும் பொறுப்பாளர்களாக இருக்கும் நாம் ஏன் மறியல் செய்யவேண்டும்? விவசாயிகளின் சக்தியை நாம் வெளிப்படுத்தவேண்டும். இவ்வளவு சக்தியும் ஒன்றுதிரண்டால் வருங்காலத்தில் அரசு விவசாயிகளின் அரசாகத்தானே இருக்கும்? நாம் ஒன்றுதிரளாத காரணத்தால் பலவீனமானவர்களாக இருக்கிறோம்",என்ற உண்மையை வெளிப்படுத்தினார். தனியாக நின்று பாடுபட்டு உழைப்பதை விடுத்து, ஒரு சீரான முறையில் விவசாயிகள் ஒன்றுபட்டால், அவர்கள் அதிக உற்பத்தியைப் பெருக்குவதோடு மட்டுமின்றி, விளைபொருளை விற்பதிலும், சந்தைபடுத்துவதிலும் எப்படி அதிக பலனடையலாம் என்றும் சத்குரு எடுத்துரைத்தார்.

மேலும், "விவசாயிகள் இணைந்து செயல்பட்டால், சந்தையைத் தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை, சந்தை உங்களை நாடி வரும்", என்பதை விவசாயிகளுக்கு அவர் நினைவூட்டினார். விவசாயிகளை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குள் கலந்துபேசி, விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு விவசாயக் கொள்கையை வரையறுப்பதற்கு விவசாயத் தலைவர்களுக்கு சத்குரு தூண்டுதல் அளித்தார். அதன் பிறகு, அரசாங்கத்திடம் எடுத்துக்கூறி கொள்கையை நடைமுறைப்படுத்தலாம்" என்றார். தற்போது நாட்டில் தனிப்பட்ட ஒரு விவசாயிக்கு வரிவிதிப்பு இல்லை. ஆனால் உழவர் விற்பனையாளர் சங்கத்திற்கு வரி உண்டு. இது குறித்து நாம் பிரதமரிடம் பேசினோம். இப்போது வரி விலக்கப்பட்டுள்ளது என்பதை சத்குரு தெரிவித்தார்.

"இன்று நீர் மற்றும் நிலம் வளமில்லாமல் இருக்கின்றது. ஆனால் இயற்கை வரம் இருக்கிறது. உலகத்தில் உள்ள எல்லா பயிர்களையும் விளைவிக்கக்கூடிய சீதோஷ்ண நிலை, தென்னிந்தியாவில் இருந்து இமயமலை வரை நமக்கு இருக்கிறது. ஆனால் நீர் ஆதாரம் இல்லாத இடத்தில் கரும்பையும், நெல்லையும் விதைக்கிறோம்.

வியட்னாம் போன்ற நாடுகளில் சில விவசாயிகள் இருக்கின்றனர்.அவர்கள் நமது விவசாயப் பல்கலைக்கழகங்களில் பயின்று, அந்த விஷயங்களைச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். இவை அனைத்தும் நம் முன்னோர்கள் அறிந்த விஷயங்கள். நிலத்தில் தேவையான அளவு கால்நடைகள், மரங்கள் இருக்கவேண்டும். இதனால் மண் வளமாக இருக்கும். இவற்றை நாம் அறிந்திருந்தோம்.

பாரம்பரிய வழி வந்த நம் விவசாயிகளுக்கு எந்தக் கல்வியறிவும் இல்லையென்றாலும், எப்படி விவசாயம் செய்வது என்பதை மிக நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்த அறிவை நாம் வெளி நாட்டிற்கு விட்டுக் கொடுத்தால் நாம் அவர்களுக்கு அடிமைதானே? முன்னர் வெளிநாட்டினர் நம்மை ஆட்சிசெய்தபோது, விவசாயத் தொழில் நுட்பம் நம் கைவசம் இருந்தது. ஆனால் இன்று விவசாயம் வெளி நாட்டினர் கைகளுக்குச் சென்றுவிட்டால், அவர்கள் காலில் நாம் கிடக்கவேண்டியதுதான். இன்றைக்கு விவசாயி இருக்கும் பரிதாப நிலையில், 15 சதவிகித விவசாயிகள் தங்கள் குழந்தைகள் விவசாயத்திற்குச் செல்வதை விரும்பவில்லை. விவசாயிகள் முன்னேற்றத்திற்கான பல வழிகள் எனக்குள் இருக்கின்றன. நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பம்ப் வழங்குதல் பற்றி ஏதாவது செய்யவேண்டும். நாம் அரசாங்கத்திடம் மிக அதிகமாகப் பேசிவிட்டோம். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை நிறுத்த விரும்பினால், இரண்டு விஷயங்களை அரசாங்கம் செய்யவேண்டும் என்று கூறினேன். நீர்ப்பாசனம், பம்ப் மற்றும் மருத்துவத் தேவைகளின் கவனிப்பு போன்றவைகளை முக்கியமாகக் குறிப்பிட்டேன்.

இப்போது மருத்துவத் தேவைகளுக்கு, ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் வரை அரசு கொடுக்கும். இதனால் பெரிய அளவிலான கடன் சுமை குறையும். நாம் இணைந்து நின்று தீர்வு காணவேண்டும். அதற்காக சங்கம், யூனியன் உருவாக்கவேண்டும் என்று நாம் கூறவில்லை. நமது உரிமைகளைப் பெறவேண்டும். நமது நிலத்தில் மரம் வளர்த்தால் அது நமது உரிமை. சொந்த நிலத்தில் சந்தனமரம் நட்டால் அது அந்த மனிதனுக்கே சொந்தம் என்ற சட்டம் வரவேண்டும். இதைப்பற்றி அரசிடம் பேசுவோம். இல்லையென்றால் நீதி மன்றத்தின் வழிகாட்டலை நாடுவோம். அரசின் ஈடுபாடு இல்லாமல் தீர்வு வராது. தீர்வு வரவேண்டும் என்றால் அரசின் ஈடுபாடு தேவை. இதற்கு முதலீடு தேவை. எங்கு பணம் முதலீடு செய்யப்படும்? எங்கு வருமானம் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறோமோ அங்குதான் முதலீடு செய்யப்படும். நம்மிடம் முதலீடு செய்தால் பலன் இருக்கிறது என்பதை நாம் காட்டவேண்டும்", என்று சத்குரு பேசினார்.

விவசாயிகளுக்கு அதிகபட்ச வருமானம் கிடைக்கும் வகையில், விவசாய உற்பத்தியை எப்படி சந்தைப்படுத்தலாம் என்பதைக் குறித்து பலவேறு சாத்தியங்களும் விவாதிக்கப்பட்டன. உள்ளூர் சூழலின் நிலவரத்தின் அடிப்படையில், நடைமுறைப்படுத்தக்கூடிய பற்பல வழிகளும் ஆலோசிக்கப்பட்டன. உழவர் விற்பனையாளர் சங்கங்கள் அமைப்பதற்கு அவர்களுக்கு, தேர்ந்த அறிவுரை வழங்குவதற்கான நிபுணர் குழுவுக்கு ஏற்பாடு செய்யுமாறு பல தலைவர்களும் சத்குருவை கேட்டுக்கொண்டனர். சத்குருவும் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்றுவரும் முயற்சிகளைக் குறித்தும் பல விவசாயிகளும் பேசினார்கள். விழுப்புரத்திலிருந்து வந்திருந்த உழவர் விற்பனையாளர் சங்கம் ஒன்றின் பிரதிநிதியான திருமதி.மித்ரா அவர்கள் பேசியபோது, அவரது சங்கத்திலிருந்து 10 விவசாயிகள் ஈஷா வழங்கிய ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொண்டு, சங்கத்தின் மற்ற 250  விவசாயிகளுக்கும் அதைப் பயிற்றுவித்துள்ளனர் என்றும், இந்த நீடித்த, பொருளாதார நற்பலன் மிகுந்த, விவசாய முறையை தற்போது அனைவரும் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக அந்த நாளில், விவசாயத் தலைவர்கள் கூடி, ஈஷா அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட நதிகள் மீட்பு வரைவுக் கொள்கை குறித்து கலந்தாலோசித்தனர். நமது நதிகளின் நிலையை மேம்படுத்தவும், விவசாயிகளின் நிதி நிலைமையை முன்னேற்றவும் உதவக்கூடிய வகையில், நதிகள் மீட்புக் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் பல முக்கியமான அம்சங்களை அதனுடன் இணைத்தனர்.