விதியைப் பற்றி பலவித கதைகள் உலவி வருகின்றன. சில நேரங்களில் அது என்ன என்றே தெரியாமல் அந்த வார்த்தை பலவாறாக பிரயோகிக்கப்படுகிறது. விதியைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...

சத்குரு:

உங்களுக்குள் நீங்கள் சேகரித்த பதிவுகள் எல்லாம் ஒருவிதமான இயல்புகளாக உங்களுக்குள் உருவெடுக்கின்றன. ஐம்புலன்களின் மூலமாக உங்களுக்குள் சென்றவை எல்லாம் பதிவுகளாக உள்ளே இருக்கின்றன. இந்த பதிவுகள் தங்கள் இயல்புகளை உருவாக்கத் தொடங்குகின்றன. இந்த இயல்புகள் உங்களை இப்படியும், அப்படியும் எடுத்துச் செல்கின்றன. வெவ்வேறு மனிதர்களை வெவ்வேறு திசைகளில் அவை எடுத்துச் செல்கின்றன. ஆனால் உங்களுடைய வாழ்வின் செயல்முறைகளை நீங்கள் விழிப்புணர்வோடு உருவாக்கினால் உங்களுக்கு விதி என்பதே இல்லை. விதி என்பது 100% உங்களுடைய உருவாக்கம். இப்போதும் கூட அப்படித்தான். ஆனால் நீங்கள் அதை விழிப்புணர்வு இல்லாமல் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விழிப்புணர்வுடன் அதை உருவாக்க முடியும். எந்த அளவிற்கு என்றால் நீங்கள் எப்படி வாழவேண்டும், எப்படி இறக்க வேண்டும் என்பதைக் கூட நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். எந்தக் கருவில் நீங்கள் பிறக்க வேண்டும் என்பதைக்கூட நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். அந்த அளவிற்கு விதியை உங்களுடைய கைகளில் நீங்கள் எடுக்க முடியும்.

உங்களுடைய வாழ்க்கையை வேறு வழியேயில்லாமல் நடக்க அனுமதித்தால் நீங்கள் விதியின் வசமாகதான் இருக்கிறீர்கள்.

நான் ஆன்மீக பாதையில் இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவதின் பொருள் என்னவென்றால் என்னுடைய விதியை என் கைகளில் எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய கர்மவினை எப்படிப்பட்டதாக இருந்தாலும், என்னுடைய சமூகம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், என்னுடைய பெற்றோர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்கு அது ஒரு பொருட்டில்லை. நான் விடுதலையை நோக்கிச் செல்கிறேன், அவ்வளவுதான். நான் ஆன்மீகப்பாதையில் இருக்கிறேன் என்று சொல்லும்போது உங்கள் விதியை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றுதான் பொருள்.

நீங்கள் ஒருமுறை மனிதராகப் பிறந்துவிட்டால் நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்கிறீர்களோ அதற்கேற்ற மனிதராகவே ஆகிவிடக்கூடாது. நீங்கள்தான் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கத்தில் வாழ்வது விலங்கின் தன்மை. மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை உருவாக்குவதுதான் இல்லையா?
உங்களுடைய வாழ்க்கையை வேறு வழியேயில்லாமல் நடக்க அனுமதித்தால் நீங்கள் விதியின் வசமாகதான் இருக்கிறீர்கள். உங்களுக்குள் உள்ள சேகரிக்கப்பட்ட பதிவுகளே உங்கள் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட திசையில் எடுத்துச் செல்கின்றன. அந்த பதிவுகளையே விதி என்கிறோம். ஆனால் நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற பாதையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.