Question: விதி என்பது உண்டா?

சத்குரு:

ஒவ்வொரு வருடமும், நம் நாட்டில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தவிர்க்கக்கூடிய காரணங்களால் கண்பார்வை இழந்துவருகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் இது இன்னும் அதிகமாகவே இருந்தது. அதே போல், உலகில் பல லட்சம் மக்கள் போலியோவினால் பாதிக்கப்பட்டு, கால்செயல் இழந்து நொண்டிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் இன்று... பெருமளவிற்கு அவற்றைக் குறைத்துவிட்டோம். யாரோ முடமானார்கள், யாரோ கண்பார்வை இழந்தார்கள், இதெல்லாம் அவர்களுடைய விதியா? அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம்... ஆனால் இன்று ஒரேவொரு சொட்டு தடுப்புமருந்தால், நம் விதியை நம் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறோமே!

உங்களுக்கு எது புரியவில்லையோ, அதையே 'விதி' என்று குறிக்கிறீர்கள்.

கண்பார்வை இருப்பதால், எத்தனை எத்தனை காட்சிகள், வர்ணங்கள், அழகினைக் கண்டு நீங்கள் லயித்துப் போகிறீர்கள்? இதோடு, கண் பார்வையற்ற நிலையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இரண்டிற்கும் எத்தனை பெரிய வித்தியாசம் என்பதை நீங்களே உணர்வீர்கள். தேவையான மருந்துகள், தடுப்பூசிகள் கொண்டு 'பார்வையுள்ள நிலை - பார்வையற்றநிலை' இவ்விரண்டையும் நம் கையில் எடுத்துக்கொண்டுவிட்டோம் தானே? இதேபோல் 'வாழ்க்கை- மரணம்' இவற்றையும் நம் கையில் நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஒருவர் சாமான்யமாக 30 வருடங்கள் வாழ்ந்தார். இன்றோஒரு மனிதரின் சராசரி ஆயுட்காலம், 64 வருடங்களாக உயர்ந்துள்ளது. அதாவது இறந்துபோக வேண்டிய ஒருவரை இன்றும் உயிரோடு வாழவைக்க நாம் வழி செய்திருக்கிறோம். இவற்றை எல்லாம் நம் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறோம் தானே?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: புரியாததுதான் விதியா?

சத்குரு:

உங்களுக்கு எது புரியவில்லையோ, அதையே 'விதி' என்று குறிக்கிறீர்கள். ஆனால் அது புரிந்துவிட்ட அடுத்த நொடி, அது உங்கள் கையில் வந்துவிடுகிறது. மனிதனாகப் பிறந்ததன் அழகு இதுதான். நீங்கள் எப்படி படைக்கப்பட்டிருக்கிறீர்கள், இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என, உங்களைப் பற்றி, உங்கள் படைப்பைப் பற்றி முழுமையாய் புரிந்து கொள்ளும் திறன் உங்களுக்கு உண்டு. ஒரு விஷயம் புரிந்துவிட்டால், அதை உங்கள் கையில் எடுத்துக் கொண்டுவிடுவீர்கள். யார் அதைப் புரிந்துகொள்ளாமல் இன்னும் மடமையில் ஆழ்ந்திருக்கிறாரோ, அவரே அதை விதி என்றெண்ணி ஒன்றும் செய்யாமல் சும்மா அமர்ந்திருப்பார். 'வாழ்க்கை' எப்படி நிகழ்கிறது என்று புரிந்து கொண்டவர்கள், கடிவாளத்தை தங்கள் கையில் ஏற்று, தங்கள் வாழ்வை தாங்களே வழிநடத்திச் செல்கிறார்கள். இவ்வளவு ஏன், 'வாழ்க்கை - மரணம்' ஆகியவற்றை நீங்கள் எந்த அளவிற்கு உங்கள் கையில் ஏற்க முடியுமென்றால், நீங்கள் எந்த கருப்பையில் பிறக்க வேண்டும் என்பதைக் கூடநீங்கள் தேர்வு செய்யலாம். இது நிச்சயம் சாத்தியம்தான். இப்போதும் கூட இந்தத் தேர்வுகளை நீங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள்... ஆனால் விழிப்புணர்வின்றி!

விதி, அதிர்ஷ்டம் என்று ஏதேனும் இருந்தால், அவை நிச்சயம் தன் பங்கை ஆற்றும். ஆனால் உங்கள் வேலை உங்கள் முயற்சி மட்டுமே.

'நான் இப்படித்தான்' என்பது போன்ற உங்கள் கட்டுப்பாடுகளினால், சூழ்நிலைகளுக்கு தன்னிச்சையாய் எதிர்செயல் செய்வதை விடுத்து, கொஞ்சம் அதிக கவனம் செலுத்த நீங்கள் தயாராய் இருந்தால், வெகு சுலபமாக உங்கள் விதியை உங்கள் கையில் நீங்கள் எடுத்துக் கொண்டுவிடலாம். விதி என்பது நீங்கள் சுயமாய் உருவாக்கிக்கொண்டுவிட்ட குளறுபடி... என்னவொன்று, அதை நீங்கள்தான் அவ்வாறு உருவாக்கிக் கொண்டீர்கள் என்று ஒப்புக்கொள்ள மனமில்லாமல், அதைக் கடவுளின் தலைமீது ஏற்றுகிறீர்கள்.

ஒருமுறை பார்ட்டி ஒன்றில், ஜம்பமான மனிதர் ஒருவர் 'பர்னார்ட் ஷா' வை நெருங்கி, 'நான் சுயமுயற்சியில் உருவானவன்' என்று பெருமையோடு தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டாராம். அதற்கு பர்னார்ட் ஷா அவரைப் பார்த்து, 'மாபெரும் பழியிலிருந்து அக்கடவுளை விடுவித்து விட்டீர்கள்' என்றாராம்.

இதை நீங்கள் எல்லோரும் கூடச் செய்யவேண்டும். கடவுள்தான் உங்களை இப்படி உருவாக்கினார் என்ற பழியில் இருந்து அவரை நீங்கள் விடுவிக்க வேண்டும். நீங்கள் தான் உங்களை இப்படி உருவாக்கிக் கொண்டுவிட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இப்படியிருப்பதற்கு வேறொருவர் தான் காரணம் என்று நீங்கள் நினைத்துவிட்டால், அதோடு உங்கள் கதை முடிந்துபோகும். 'நான் இப்படி இருப்பதற்கு என் தந்தை சரியில்லாதது தான் காரணம்...' உங்கள் தந்தையை இன்று நாம் மாற்ற முடியாது - காலம் கடந்துவிட்டது. ஆனால் நீங்கள் இப்படி இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று நீங்கள் பார்த்தால், உங்களுக்கு வேண்டிய வகையில் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளமுடியும்.

Question: வாழ்வில் வெல்ல வேண்டும் என்றால் எது மிக முக்கியம் - நல்ல தலையெழுத்தா, கடவுள் அருளா, உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா?

சத்குரு:

நல்ல தலையெழுத்தா, கடவுள் அருளா, உழைப்பா, அதிர்ஷ்டமா... எல்லாமே தேவைப்படலாம், ஆனால் எந்த சதவிகிதத்தில் என்பதைத் தான் பார்க்க வேண்டும். தலையெழுத்து (விதி), கடவுள் அருள், அதிர்ஷ்டம்... இதில் எதுவுமே உங்கள் கையில் இல்லை. உங்கள் கையில் இருப்பது உழைப்பு மட்டும்தான். உங்கள் நூறு சதவிகிதத்தையும் அதில் போடுங்கள். என்ன நடக்கிறதோ, நடக்கட்டும். உங்கள் சக்தியிலும், திறனிலும் ஒரு துளியைக்கூட விதி, கடவுள், அதிர்ஷ்டம், என எதற்குமே விட்டு வைக்காதீர்கள். அது உங்கள் வேலை இல்லை. விதி, அதிர்ஷ்டம் என்று ஏதேனும் இருந்தால், அவை நிச்சயம் தன் பங்கை ஆற்றும். ஆனால் உங்கள் வேலை உங்கள் முயற்சி மட்டுமே. அதுவும் திட்டவட்டமான, தெளிவான, முழுமையான முயற்சி. ஏதோ செய்தேன் என்று செயலில் ஈடுபடுவது மடமை. கஷ்டப்பட்டு வேலை செய்தால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான செயலை செய்ய வேண்டும். இது எல்லாமே முக்கியம்.

இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தையும், நுண்ணுணர்வையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். 'என் புத்திசாலித்தனத்தை எப்படி வளர்த்துக் கொள்வது?' அதைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். உங்கள் உள்வாங்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வழி செய்யுங்கள். வாழ்வை அதன் இயல்பில், அது இருக்குமாறே பார்க்கத் துவங்கினால், உங்கள் வாழ்வை சரியாக நிகழ்த்திக் கொள்ளத் தேவையான புத்திசாலித்தனம் உங்களில் மலரும். இல்லையெனில், உங்கள் புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக வேலை செய்யும். இன்று பலரும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பெரிதும் முயற்சிசெய்து வருகிறார்கள். இது சமுதாயத்தில் அவர்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தாலும், வாழ்வில் உண்மையான வெற்றியை அவர்களுக்குப் பெற்றுத்தராது. வாழ்வில் உண்மையான வெற்றி பெறவேண்டுமெனில், எல்லாவற்றையும் 'உள்ளவை உள்ளதுபோல்' எவ்வித திரிபும் இன்றி பார்க்க நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.

அப்படி இருந்தால் வாழ்க்கை ஒரு விளையாட்டு போலாகிவிடும். அதை சந்தோஷமாக, ஆனந்தமாக விளையாடினால், நிச்சயம் நன்றாகவும் விளையாடுவீர்கள். நன்றாக விளையாடினால்... வெற்றிகரமாக இருப்பதாகவே எல்லோரும் வழங்குவர்.