பத்ரிநாத் - விஷ்ணுவின் இருப்பிடம்! இந்த இடத்தின் சிறப்பை சத்குருவின் வார்த்தைகளில் இக்கட்டுரையின் மூலம் அறிவோம்...

சத்குரு:

குழந்தையைத் தொடாதே...

பத்ரிநாத் குறித்தொரு புராணக் கதை உண்டு. சிவனும் பார்வதியும் இங்குதான் வசித்தார்கள். இமயமலையில் 10,000 அடி உயரத்தில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. ஒருநாள், சிவனும் பார்வதியும் வெளியே உலாச்சென்று திரும்பியபோது, வீட்டு வாசலில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. கதறி அழுகிற குழந்தையைப் பார்த்ததும் பார்வதியின் தாய்மை உணர்வு விழித்துக் கொள்ள, அந்தக் குழந்தையை அள்ளியெடுக்கப் போனார். சிவன் தடுத்தார். “குழந்தையைத் தொடாதே” என்றார்.

சிவனுக்கிருந்தது இரண்டே வழிகள். ஒன்று, அந்த வீட்டை எரித்து விடுவது அல்லது, அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவது.

அதிர்ச்சியடைந்த பார்வதி, “இவ்வளவு கல் மனம் படைத்தவரா நீங்கள்?” என்று சினந்து கொள்ள, சிவன் சொன்னார், “இது நல்ல குழந்தையில்லை. நம் வீட்டு வாயிலில் ஏன் கிடக்க வேண்டும்? இதை விட்டுச் சென்றவர்கள் காலடித் தடமெதுவும் பனித்தடத்தில் பதியவேயில்லை. இத்தனை உயரமான மலையில் தானாக இந்தக் குழந்தை முளைத்ததா என்ன?”

சிவன் எவ்வளவு சொல்லியும் பார்வதி கேட்பதாயில்லை. குழந்தையை உள்ளே தூக்கிக் கொண்டு போனார். அந்தக் குழந்தை பார்வதியின் மடியில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு சிவனை கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. “நடப்பது நடக்கட்டும்” என்று சிவனும் விட்டு விட்டார்.

யார் இந்தக் குழந்தை?

குழந்தைக்கு உணவூட்டிய பார்வதி, அதை உறங்கச் செய்துவிட்டு அருகிலிருந்த வெந்நீர் ஊற்றில் நீராட சிவனுடன் சென்றார். திரும்ப வந்து பார்த்தபோது அவர்களின் வீடு உட்புறமாக இறுகத் தாழிடப்பட்டிருந்தது. பார்வதி அதிர்ந்தார். “இது யார் செய்த வேலை?” என்றார். “நீ ஆசையாகத் தூக்கி வளர்த்த குழந்தையின் வேலை. எவ்வளவோ சொன்னேன். நீ கேட்கவில்லை” என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“என்ன செய்யலாம்?” என்றார் பார்வதி. சிவனுக்கிருந்தது இரண்டே வழிகள். ஒன்று, அந்த வீட்டை எரித்து விடுவது அல்லது, அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவது. “சிவனும் பார்வதியும் அந்த இடத்தை விட்டு மெல்ல அகன்றார்கள். குழந்தை வடிவில் வந்த திருமால் பத்ரிநாத்தில் கோவில் கொண்டார், சிவனும் பார்வதியும் கேதார்நாத்தில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள்.

வந்தது திருமால் என்பது சிவனுக்குத் தெரியவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். சில விஷயங்கள் தெரிந்தாலும் நடப்பதற்கு அனுமதிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஆதிசங்கரரின் மகத்தான பணி

இங்கிருக்கும் கோவிலை உருவாக்கியவர் ஆதிசங்கரர் என்பது பத்ரிநாத்திற்கு இருக்கும் இன்னொரு சிறப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் உள்ள காலடி என்னும் இடத்தில் தோன்றியவர் ஆதிசங்கரர். கருவிலேயே திருவுடைய ஆதிசங்கரர் மகத்தான மேதைமையும், அதிமானுட இயல்புகளும் கொண்டவர், இரண்டு வயதிலேயே சமஸ்கிருதத்தில் சரளமாக எழுதவும் பேசவும் செய்தார். நான்கு வயதுக்குள் நால்வேதங்களும் அவருக்கு மனப்பாடம். பன்னிரண்டு வயதில் சந்நியாசம் மேற்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அந்த மலைத் தொடர்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

அந்தச் சிறிய வயதிலேயே அவருக்கு நிறைய சீடர்கள் சேர்ந்தனர். தேசமெங்கும் நடந்தே சென்று ஆன்மீக விஞ்ஞானத்தை மறு நிர்மாணம் செய்தார். ஆதிசங்கரரின் வழிகாட்டி கௌடபாதர். கௌடபாதரின் நெறிப்படுத்துதல்படி இந்த மகத்தான பணியை ஆதிசங்கரர் மேற்கொண்டார். கௌடபாதர் ஒரு மகத்தான குருவாக விளங்கினார். கௌடபாதருக்கு நம்முடைய மரபிலும் ஒரு முக்கியமான பங்குண்டு.

பல்லாயிரம் பேர்களுக்கு போதித்திருந்தாலும் அவை எதுவும் எழுதப்படவில்லை. எழுதப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் கௌடபாதர். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அவர் போதித்திருந்தாலும், எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக, ஆன்மீக விஞ்ஞானத்தை மறுநிர்மாணம் செய்யக்கூடிய அற்புதமான மனிதர்கள் பதினைந்து இருபது பேர்களை உருவாக்கினார். புதிய சமயம் எதையும் தொடங்காமல் மிக அமைதியாக ஆன்மீக விஞ்ஞானத்தை அவர்கள் வாழ்க்கை முறையாகவே உருவாக்கினார்.

ஈஷாவின் நோக்கமும் அதுதான். புதிய சமயம் எதையும் உருவாக்காமல் புதிய புனித நூல்களை உருவாக்காமல், ஆன்மீக விஞ்ஞானத்தை வாழ்க்கை முறையாக மனிதர்களின் உள்தன்மையில் நிலைநிறுத்துவதே நமது பணி.

பத்ரிநாத் ஆலயம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. தன்னைச் சார்ந்தவர்களையே அவர் அங்கு குடியமர்த்தினார். அவர் அங்கு குடியமர்த்திய நம்பூத்ரிகளின் வழித் தோன்றல்களே அந்த ஆலயத்தில் இன்றளவும் பூஜைகளை நிகழ்த்துகிறார்கள். பத்ரிநாத், கண்ணுக்கும் மிக அழகான இடம். நகரம் தூய்மையாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலும் அதன் சுற்றுப்புறங்களின் பேரழகு, கண்கொள்ளாக்காட்சி. கோவிந்த் காட் என்னும் பகுதியிலிருந்து பத்ரிநாத் வரையிலான அந்த 25 கிலோ மீட்டர்கள், காரோட்டிச் செல்வதற்கு மிக உகந்த இடம்.

நான் உலகின் பல பகுதிகளிலும் காரோட்டிச் சென்றிருக்கிறேன். ஆனால், இது போல் அற்புதமான இடம் வேறெங்கும் இல்லை. அந்த மலைத் தொடர்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. காலடியிலிருந்து பத்ரிநாத்திற்கான நடை தூரம் மூவாயிரம் கிலோமீட்டர்கள்! ஆதிசங்கரர் தேசத்தின் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி மட்டும் நடந்தவரல்ல. தேசத்தின் கிழக்கெல்லையிலிருந்தும் மேற்கு நோக்கி நடந்திருக்கிறார். தேசம் முழுவதும் தெற்கு வடக்காக மூன்று முறைகளும் கிழக்கு மேற்காக ஒருமுறையும் நடந்தே யாத்திரை செய்திருக்கிறார்.

தாயின் மரணம்!

ஒருமுறை வடநாட்டில் அவர் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, அவருடைய தாய் மரணப் படுக்கையில் இருப்பதை உள்ளுணர்வால் உணர்ந்தார். தன் மரணத்தின் போது உடனிருக்க வேண்டும் என்னும் உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டுதான் பன்னிரண்டாவது வயதில் ஆதிசங்கரரின் சந்நியாசத்திற்கு அவருடைய தாய் அனுமதியளித்திருந்தார். அந்தச் சொல்லைக் காக்க அத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்தே வந்து அன்னையின் மரணத் தறுவாயில் உடனிருந்தார் ஆதிசங்கரர். சிலநாட்கள் உடனிருந்துவிட்டு அன்னையின் மரணத்திற்குப்பின் மீண்டும் வடநாடு நோக்கி நடந்தே சென்றார்.

நீங்கள் இமயமலைப் பக்கம் பயணம் செய்கையில் இவ்வளவு தொலைவை ஒருவர் எப்படி நடந்து கடந்திருக்க முடியுமென்று அதிசயிப்பீர்கள். அதற்கு எவ்வளவு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். வாகனப் பயணங்கள், யாத்திரைகளின் மகிமையைக் குறைத்துவிட்டது. நடந்தே யாத்திரை செய்திருந்தால் உங்கள் வாழ்வு நல்லவிதமாய் வகை பெற்றிருக்கும்.

குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 30-அக் 10 வரை நடைபெறும் இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 123 777/111
வலைதளம்: www.sacredwalks.org