விருப்பத்திலிருந்து கருணைக்கு...

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கருணைக்கும் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கோடிட்டு காட்டும் சத்குரு, நமக்குள் கருணையை உருவாக்க நாம் என்ன செய்யலாம் என்பதையும் விளக்குகிறார். கருணையை செயல் நடப்பதற்கான ஒரு உக்தியாக கையாளாமல், நாமே கருணையின் அம்சமாக மாற, சத்குருவின் ஆசிகள் இங்கே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொதுவாக கருணை என்பது இரக்கம் என்றே நாம் விளங்கிக் கொள்கிறோம். இரக்கம் என்பது, ஒரு மனிதன் ஆதரவற்ற நிலையில் இருக்கும்பொழுதே பொருத்தமானதாக இருக்கும். மனிதர்கள் சுதந்திரமாக இயங்கும்பொழுது இரக்கத்திற்காக ஏங்குவதில்லை. மற்றவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும், மதிப்பளிக்க வேண்டும், அன்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இரக்கமெல்லாம் அவர்களுக்கு வேண்டாம். கருணை என்பது அனைத்தையும் உள்ளடக்கிய தீவிர உணர்ச்சி. இரண்டு பேர் உணர்ச்சிப் பெருக்கில் இருக்கும் பொழுது அவர்களுக்கு உலகம் இல்லாமல் போய்விடுகிறது. உணர்ச்சியின் அழகே அதுதான். இந்த உலகம் உங்கள் உணர்ச்சியின் தீவிரத்தில் மறைந்து போகிறது.

கருணை என்பது அனைத்தையும் உள்ளடக்கிய உணர்ச்சி நிலை. அதாவது அனைத்தையும் இணைத்துக் கொள்ளும் உணர்ச்சி நிலை. இது, உணர்ச்சி என்பதை விட பல மடங்கு மேலானது. கருணை என்பது வறண்டு போன இரக்க உணர்வு அல்ல. இது, "நீங்கள் எல்லோருக்கும் உயர்வானவர், எல்லோரிடமும் இரக்கத்தோடு இருப்பவர்" என்பதுபோல் அல்ல. இது ஒரு விழிப்பான ஈடுபாடு. எதன் மீது உங்கள் பார்வை விழுந்தாலும் அதனோடு விருப்பமாக இருப்பது. நீங்கள் சுவாசிக்கும் காற்று, நடந்து செல்லும் நிலம், உண்ணும் உணவு, பார்வையில் உள்ள, பார்வையில் அல்லாத மக்கள் என அனைத்திலும் விருப்பத்தோடு இருப்பது. உங்கள் விழிப்புணர்வில் உள்ள அனைத்தின் மீதும் முழுமையான விருப்பத்தோடு இருப்பது. இதுவே கருணை. அனைத்தையும் அதன் விருப்பத்துடன தன்னுடன் இணைத்துக் கொள்வதுதான் கருணை. எனவே, விருப்பம் இல்லாத நிலை அல்ல கருணை, விருப்பத்தின் பிரம்மாண்ட அம்சமே கருணை.

Question: அனைத்தையும் உள்ளடக்கிய அந்த உணர்வு நிலையை அடைவது எப்படி? இது ஒரு பெரிய தேவையான தாண்டுதலா? இது ஒருவர் மனநிலையில் ஏதோ ஒன்று நிகழ்ந்து அவருக்கு திறந்த நிலை ஏற்படுத்தும் தந்திரமா?

சத்குரு:

நிச்சயமாக, இது விருப்பம் சிறிது சிறிதாக அதிகமாவது பற்றி இல்லை. இன்று ஒருவரோடு விருப்பமாக இருப்பது, நாளை இருவரோடு, அதற்கு அடுத்த நாள் இருபது அல்லது 25 பேரோடு விருப்பமாக இருப்பது என்பது போல இல்லை. மனதின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கும்பொழுது உங்கள் பிரபஞ்ச இருப்பை விட உங்கள் எண்ணங்களும், உணர்சிகளுமே பிரதானமாக இருக்கும் - இந்த நிலையில் விருப்பத்தை மட்டும்தான் நீங்கள் அதிகபட்சமாக அறிந்து கொள்ள முடியும். துரதிருஷ்டவசமாக பலரும் விருப்பம் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. விருப்பம் என்பது அற்புதமான விஷயம். மனதிற்கு அப்பால் உங்கள் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால், அறிவுபூர்வமாக அல்லாமல், அனுபவபூர்வமாக பார்த்தால், "இங்கு இருப்பது எல்லாமே ஒரே உயிர்தான், நான் அதன் ஒரு சிறிய வெளிப்பாடுதான்" என்று உங்களுக்கு புரியும். எனவே இது திரளான ஒரே உயிர், அதில் நீங்கள் ஒரு குமிழி என்று புரிந்து கொண்டு, அதில் நீங்கள் ஒரு தனித்துவமான குமிழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த தனித்துவம் உங்கள் அனுபவத்தில் கரைந்து போய்விட்டால், கருணை என்பது இயல்பான நிலையாகிவிடும். வேறு எந்த விதமாகவும் உங்களால் இருக்க முடியாது. இது ஏதோ நீங்கள் உருவாக்கும் நன்னெறியோ, கோட்பாடோ இல்லை.

நாம் இங்கே இருக்கிறோம், நாம் வெளிவிடும் காற்றை மரங்கள் சுவாசிக்கின்றன. மரங்கள் வெளிவிடும் காற்றை நாம் சுவாசிக்கின்றோம். வேறு விதமாக சொன்னால் உங்கள் சுவாச உபகரணத்தின் ஒரு பகுதி அங்கே மரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதை நீங்கள் அனுபவரீதியாக உணரும்போது, "அந்த இலையை பறிக்க வேண்டாம்" என்று உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. நீங்கள் அதை ஒரு போதும் செய்ய மாட்டீர்கள். அது உங்கள் தலை முடியை யாரோ பிடுங்குவது போல. இது ஒரு எண்ணமோ, நோக்கம் இல்லை, "நான் இலையை பறிக்க மாட்டேன்" "நீங்கள் இலைகளை பறிக்கக் கூடாது" என்பது போன்ற நெறிமுறையும் இல்லை. இது நீங்கள் இருக்கும் விதம் அவ்வளவுதான். மனித இனத்தின் இயல்பும் இதுதான். எண்ணங்களோடு, உணர்சிகளோடு, உடலோடு அடையாளம் கொள்ளும் பொழுது இயல்பான விழிப்புநிலை தொலைந்து போகிறது.

Love & Grace