ஈஷா ருசி

விநாயகருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பிடித்த சிற்றுணவு கொழுக்கட்டை. வெளியே தூய வெள்ளை நிறத்தில் லேசான உவர்ப்புச் சுவையோடு, உள்ளே பொன்னிறத்தில் நாவில் நீர் ஊற வைக்கும் பூர்ணத்தோடு தித்திக்கும் கொழுக்கட்டையை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பாதவர் யார்? இதோ உங்களுக்காக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபிகள் இரண்டு...

பனை ஓலைக் கொழுக்கட்டை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்

சுமார் 10 பேருக்கு
சிவப்புப் பச்சரிசி - 1 கிலோ
வெள்ளை சர்க்கரை/கருப்பட்டி - 1 கிலோ
தேங்காய் - 2 மூடி
ஏலக்காய் - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
தேவையான பனை ஓலைகள்

செய்முறை

  • சிவப்புப் பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, துணியில் பரப்பி உலர வைத்து, பின்பு பொடித்து சலித்துக் கொள்ளவும்.
  • இதற்கிடையே, பனை ஓலையின் மடிப்பான பகுதிகளை ஒரு அடி நீளத்தில் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டு பக்கமும் முனைகளை வெட்டவும்.
  • பின்பு மாவை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதில் துருவிய தேங்காய், பொடித்த ஏலம், சுக்குப் பொடி, சர்க்கரை அல்லது கருப்பட்டி இவற்றுடன் தண்ணீர் தெளித்து கட்டியில்லாமல் பக்குவமாக பிசைய வேண்டும்.
  • துண்டு துண்டாக வெட்டப்பட்ட பனை ஓலையில் மடிப்பான பகுதியில் நடுவில் மாவை வைத்து ஓலையை சேர்த்து மூடவும்.
  • அதன் மேல் இன்னொரு பனை ஓலையை வைத்து இரண்டையும் சேர்த்து மாவு வெளியே தெரியாதவாறு ஓலை நாரில் கட்டி விட வேண்டும்.
  • குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையில்லாத ஓலைகளை தண்ணீரில் போட்டு (வாசனைக்காக), கட்டப்பட்ட ஓலைகளை உள்ளே நிறுத்தி வைக்கவும்.
  • இந்த கொழுகட்டைகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • இந்த பனை ஓலைக்கொழுக்கட்டை 3 நாள் வரை கெடாமல் சுவையாகவும், பனை ஓலையின் வாசத்துடன், சத்துமிக்கதாகவும் இருக்கும்.
  • பரிசுப் பொருளைப் போல் பிரித்து திறந்து உண்ண வேண்டிய பலகாரம் என்பதால் பார்க்கும்போதே உற்சாகமூட்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு.

காராமணி கொழுக்கட்டை

, Vinayaka chathuthi special recipe kolukattai

தேவையான பொருட்கள்

வறுத்து அரைத்த அரிசி மாவு - 1 கப்
காராமணி - 1 கைப்பிடி அளவு
பொடியாக நறுக்கிய தேங்காய் 1/2 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை

காராமணியை வறுத்து குக்கரில் வேகவைக்கவும். வெல்லத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேங்காய், நெய், வேக வைத்த காராமணி, ஏலக்காய் தூள், வறுத்த மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். ஆறியதும் சிறு கொழுக்கட்டையாகத் தட்டி ஆவியில் வேக வைக்கவும்.

இந்த கொழுக்கட்டை ரெசிபிகளை செய்து சாப்பிட்டுப் பார்த்து, உங்கள் விநாயக சதுர்த்தி கொண்டாட்ட அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்!