யோகா என்றாலே எண்ணற்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுவது இயல்புதான். இப்படி யோகாவைப் பற்றி சத்குருவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவருடைய பதில் இங்கே...

Question: யோகா என்றாலே எதிலும் முழுமையாக கவனம் செலுத்துவதுதான் என்கிறார்களே, அது எப்படி சத்குரு?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான், ஒவ்வொருவரையும், குறிப்பாக பிரம்மச்சாரிகளை, ஆசிரமத்தில், ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்த சொல்வேன். அது சுத்தம் ஆகட்டும், அழகு ஆகட்டும், எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி. நேற்று அப்படி இருந்த கல் இன்று இப்படி சிறிது திரும்பியிருக்கிறது, அதுகூட உங்கள் கவனத்திலிருந்து தப்பக்கூடாது. இங்கு அந்தக் கல் எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை, உங்கள் கவனத்தை எந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இந்த கவனத்தை நீங்கள் உச்சத்திற்கு கொண்டுவந்தால், பிறகு ஆன்மீகத்திற்காக எந்த சாதனை செய்தாலும் அது ஜொலிக்கும். பிறகு எப்போதும் முன்னேற்றம் தான். அந்த ஒரு நிலையை நீங்கள் அடைந்துவிட்டால் பிறகு அதை எப்படி பயன்படுத்துவது என்பதை நாம் உங்களுக்கு சொல்லித் தருவோம்.

Question: ஈஷாவில் வழங்கப்படும் ஷாம்பவி தியானம் விழிப்பு உணர்வாய் இறப்பதற்கு உதவி செய்யுமா?

சத்குரு:

ஷாம்பவி இறப்பை மட்டுமல்ல, முழு வாழ்க்கையையே அணுகுவதற்குரிய வழி. ஒரு முறை நீங்கள் இந்த பூமியில் பிறந்து விட்டால், இறப்பதற்கு முன் இந்த உயிரின் எல்லா பரிமாணத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் பிறந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். அந்த பரிமாணங்களை அறிய ஷாம்பவி உங்களுக்கு உதவும். ஆணிப்படுக்கையில் படுக்க வேண்டியதில்லை, தலைகீழாகத் தொங்க வேண்டியதில்லை, இமயமலைக்கு போக வேண்டியதில்லை. நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருந்து கொண்டே இந்த பரிமாணங்களை அறிய உங்களுக்கு ஷாம்பவி ஒரு வரப்பிரசாதம். மலைகளில் சில நபர்களுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டு வந்த இந்த வாய்ப்பு இப்போது அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.

Question: சத்குரு, விலங்குகள் க்ரியா என ஒருவகை க்ரியா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் முக்கியத்துவம் என்ன?

சத்குரு:

பரிமாண வளர்ச்சியில், ஒன்றிலிருந்து இன்னொரு நிலைக்கு நகரும்போது உங்கள் விழிப்புணர்வில்லாத மனதில் பழையவற்றின் கசடுகள் இருக்கும். உங்கள் விழிப்புணர்வில் இல்லாத மனதில், இந்த கசடுகள் நிரம்பியிருக்கும். உங்கள் மனதின் இந்தப் பகுதியை நாம் திறந்தால் உங்களால் நம்ப இயலாத பல விஷயங்கள் அதில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். எனக்குள் இத்தனை இருக்கிறதா என்று உங்களுக்கு ஆச்சரியம் மிகும் அளவுக்கு அது இருக்கும். பரிபூரணமாக நம் கட்டுப்பாட்டில் உள்ள சம்யமா போன்ற சூழ்நிலையில், மிகத் தீவிரமான நிலையில், இதனை நாம் மிக மிக சக்தியாக உங்களுக்கு உணர்த்த முடியும்.

இரண்டு நிமிடங்கள் நீங்கள் நாயாகவும், இரண்டு நிமிடங்கள் நீங்கள் பறவையாகவும் மற்றொரு இரண்டு நிமிடங்கள் நீங்கள் பாம்பாக ஊர்ந்து செல்வதையும் உங்களால் உணர முடியும். அதில் சொல்லிக் கொடுக்கப்படும் பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம், ஒரு காலகட்டத்தில் உங்களை யாராலும் தூண்டிவிட முடியாத நிலைக்கு நீங்கள் வளர்ந்துவிடுவீர்கள். உங்கள் மிருக நிலைக்குள் நீங்கள் விழமாட்டீர்கள். இது இயல்பாகவே உங்களுக்குள் நிகழும். இதுபோன்ற நிலை, போதிப்பதால் வராது; யோசிப்பதால் வராது; மனதளவில் தீவிரமாக முயற்சிப்பதால் வராது; நாகரீகம் அடைவதாலோ கல்வி கற்பதாலோ வரவே வராது; உங்கள் சக்தி நிலையில் தேவையான சாதனாவை செய்தால் மட்டுமே இந்த நிலையை அடைய முடியும்.