சத்குரு சொல்லும் குட்டிக் கதைகளில் இரு கதைகள் இங்கே உங்களுக்காக...

சத்குரு:

விலைமாதைத் தேடிப் போனவனே மேல்!

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு அழகிய கதை சொல்வார். அவருடைய இரண்டு பக்தர்கள் ஒரு கீதை உபன்னியாசத்துக்குப் போக முடிவு செய்தார்கள். அவர்கள் போகும் வழியில் ஒரு விலைமாது வீட்டைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த மாதின் வீடு ஆட்டம், பாட்டம் என ஒரே அமர்க்களமாக இருந்தது. எனவே நண்பரில் ஒருவர் அதனால் கவரப்பட்டு நண்பரிடம் சொல்லிக் கொண்டு விலைமாதின் வீட்டிற்குப் போய்விட்டார். அடுத்தவரோ தான் முன்னமே தீர்மானித்தபடி உபன்னியாசத்தில் போய் உட்கார்ந்தார். விலைமாதைத் தேடிப் போனவர் சிறிது நேரத்திலேயே தனது செய்கைக்காக வருந்தி, ‘ஓ, அவன் உபன்னியாசத்திற்குப் போய் நல்ல கருத்துக்களை கேட்டுக் கொண்டிருப்பான், நான் கேவலம் இங்கு வந்துவிட்டேனே’ என்று நினைத்தார். உபன்னியாசத்தில் உட்கார்ந்தவரோ ‘ம், அவன் பரவாயில்லை, வாழ்க்கையை அனுபவிக்கிறான், நான் ஏன் இங்கு வந்தேன்’ என்று நினைத்தார். எனவே ராமகிருஷ்ணர் சொல்வார், ‘விலைமாதின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உபன்னியாசத்தைப் பற்றி நினைத்தவன் நிலை உண்மையிலேயே உபன்னியாசத்தில் உட்கார்ந்து கொண்டு, ஆனால் விலைமாதைப் பற்றி நினைத்தவனை விட எவ்வளவோ மேல்’ என்று.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குட்டிக்கரணம் அடிக்கும் யோகி

குட்டிக்கரணம் அடிக்கும் யோகி, Kuttikkaranam adikkum yogi

ஒரு அழகிய கிராமத்தில் ஒரு தாய் தன் ஏழு வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த பையனுக்கு யோகிகளின் மேல் அலாதியான ஈர்ப்பு. நமக்கு தான் இந்திய கிராமங்களைப் பற்றி தெரியுமே! யோகிகள் வருவதும், பிட்சை எடுத்து உண்டு விட்டு அடுத்த ஊருக்கு செல்வதும் ஒரு காலத்தில் நமக்கு மிக பரிச்சயமானதாக இருந்ததல்லவா?

ஊர் ஊராய் செல்லும் இந்த யோகிகளுக்கு வீடு இல்லை, வாசல் இல்லை, குலம் இல்லை, குட்டி இல்லை. யோகியரின் மேல் மரியாதை கொண்ட கலாச்சாரம் என்பதால் அதை பயன்படுத்திக் கொண்ட போலிகளுக்கும் பஞ்சம் இல்லை.

உலாவிக் கொண்டே இருக்கும் இந்த யோகிகளின் சுதந்திரமான வாழ்க்கை முறையும், அவர்களின் கதை சொல்லும் பாங்கும் இந்த கிராமத்து சிறுவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. கிராமக் குழந்தைகளை போலிகளிடமிருந்து காப்பாற்ற அவர்களின் பெற்றோரும் பிரயத்தனப்பட்டனர்.

ஆனால் இப்படி வந்தவர்களில் உண்மையான யோகிகளும் இருந்தனர். உணவிற்காக காவி அணிந்துகொண்ட போலிகளும் இருந்தனர். இதனால் அவனது தாய், போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொள்ளாமல் அவனைக் காப்பாற்ற விரும்பினாள். இப்படிப்பட்ட நிலையில் அந்த கிராமத்திற்கு புதிதாய் ஒரு யோகி வந்தார்.

பஞ்சு மிட்டாயைக் கண்டால் தொற்றிக் கொள்ளும் பரவசத்தை போல் சிறுவர்களுக்கு யோகியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது.

அதே சமயத்தில் நீர் இறைக்க சென்றிருந்த அந்த தாய், யோகியைச் சுற்றி குழந்தைகள் கூடியிருந்ததை பார்த்தார். அங்கு நடந்து கொண்டிருப்பதைப் பார்த்த அந்த தாய்க்கு அதிர்ச்சி. அவ்வளவு பெரிய மனிதர், அந்த யோகி குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருந்தார்.

தன் மகன் இதைத் தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காக விரைவாக வீடு திரும்பிய அந்த தாய், “டேய், ஊருக்குள் ஒருவர் வந்திருக்கிறார், குழந்தைகளுடன் குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருக்கிறார், நல்ல யோகி அவர், நீயும் போய் விளையாடு,” என்றார்.

உங்களில் ஒரு சிலர் இருக்கிறீர்கள், வேலையை சீரியஸாக மட்டும்தான் உங்களுக்கு செய்யத் தெரியும். உங்கள் திருமணமோ, வியாபாரமோ, வாழ்க்கையோ எதுவாய் இருந்தாலும் அதனை சீரியஸாக மட்டும்தான் உங்களுக்கு செய்யத் தெரியும். இதனை டெட் சீரியஸ் என்பார்கள். இப்படி டெட் சீரியஸாக வாழ்வதற்கு இறந்து போவதே மேல்தானே?