சமூகத்தின் பார்வையில், குறிப்பாக நம் தேசத்தில், விபச்சாரம் என்பது ஒரு இழிவான செயலாகத்தான் பார்க்கப் படுகிறது. விபச்சாரம் சரியானதுதானா? - இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

உங்கள் உள்ளத்தில் அன்பில்லாவிட்டால் நீங்கள் ஒழுக்கம் தவறியவர்தான், பிறர்மனை நாடுபவர்தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வசதி வாய்ப்புகளுக்காகவும் சுகங்களுக்காகவும், இதயத்தில் அன்பில்லாமல், உங்களை நீங்கள் இழந்தால் - நீங்கள் விபச்சாரிதான். இது பாலினம் சம்பந்தபட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியானால் நான் விபச்சாரத்திற்கு எதிரானவனா? இந்த வகையில் பார்த்தால், ஆம்.

படைத்தவரே பெருமைப்படும் அளவுக்கு புத்திசாலித்தனமாய் வாழ்ந்தால், அது நல்லது. உங்கள் உடல், மனம், உணர்ச்சி சொல்லும் வழிகளில் சென்று, உங்களுக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால், அது அறிவார்ந்த செயல் இல்லை.

ஆனால், சமூகத்தின் பார்வையில் விபச்சாரம் என்று எதை அழைக்கிறார்களோ அந்த கோணத்திலிருந்து பார்த்தால், இது தனிநபர் சம்பந்தப்பட்டது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், ஒரு பின்விளைவு இருக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராய் இல்லை, ஆனால், அவர்களுக்கு சுகமளிக்கும் விஷயங்களை எவ்வித பின்விளைவுகளும் இன்றி அனுபவிக்க விரும்புகின்றனர். தங்கள் செயலுக்கு எவ்விதமான பின்விளைவு ஏற்பட்டாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள், வெறும் முட்டாள்கள். பல வகையில் பார்த்தால், ஒரு முட்டாள் தனக்கே எதிரானவர்தான்.

உங்கள் உடல் சொல்லும் விதங்களில் ஏதோ ஒன்றிற்கு நீங்கள் பணிந்துபோய், உங்களுக்கு நீங்களே எதிராக செயல்பட்டால், அது சரியல்ல. இது உடலிற்கு மட்டுமல்ல, உணர்விற்கும் பிற விஷயங்களுக்கும் பொருந்தும். ஏதோ காரணத்திற்காக, ஒருவர் தனக்குத்தானே துன்பம் ஏற்படுத்திக்கொள்வதில் அர்த்தம் இருக்கிறதா என்ன?

உங்களுக்கு அர்த்தம் வாய்ந்ததாகத் தோன்றுபவற்றை நீங்கள் செய்ய வேண்டும். இது சரி, அது தவறு என்பதல்ல விஷயம். வாழ்க்கையை புத்திசாலித்தனமாக வாழ்கிறீர்களா? அல்லது எதற்காவது அடிமையாக இருக்கிறீர்களா? என்பதுதான் கேள்வி. அறிவற்ற வாழ்க்கை வாழ்வது பாவச்செயல் இல்லையா? படைத்தவரே பெருமைப்படும் அளவுக்கு புத்திசாலித்தனமாய் வாழ்ந்தால், அது நல்லது. உங்கள் உடல், மனம், உணர்ச்சி சொல்லும் வழிகளில் சென்று, உங்களுக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால், அது அறிவார்ந்த செயல் இல்லை.

இந்த அறிவற்றத்தன்மை தவறானதா? நான் அதனை தவறென்று சொல்லவில்லை. அது மட்டுப்படுத்தப்பட்ட செயல், முட்டாள்தனமான செயல். மட்டுப்படுத்தப்பட்ட முட்டாள்தனமான எதுவுமே வீணானதுதான். அதனால்தான் விபச்சாரம் ஒன்றுக்கும் ஆகாத ஒரு விஷயம் என்று சொல்கிறேன். இன்று பெரிதாய் தோன்றும் ஒன்றிற்காக, எதையாவது செய்வது முட்டாள்தனமானது, அறிவற்றது. நாளையே அது அர்த்தமற்றதாகிப் போகக்கூடும். இப்படி வாழ்வது முட்டாள்தனம் அல்லவா? கடவுளர்களும் பொறாமைப் படக்கூடிய அளவிற்கு நீங்கள் வாழும்விதம் இருக்க வேண்டுமல்லவா? இதுபோன்ற அறிவார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால், உங்கள் வாழ்வில் எது சரி, எது தவறு என்று பகுத்துப் பார்க்கத் தேவையில்லை. வாழ்க்கை இதுபோல் இல்லையென்றால், உங்கள் வாழ்வில் அனைத்துமே தவறுதான்.