ஈஷா இன்சைட்: வெற்றியின் ரகசியம் - நாள் 1

இந்த தேசத்தின் சரித்திரம் மன்னர்களால் எழுதப்பட்டது. சில நேரங்களில் புலவர்களும் துறவிகளும் இந்த மண்ணின் வரலாறாய் வாழ்ந்து சென்றனர். இனி இந்த தேசத்தின் வரலாறு இதன் வளர்ச்சி அனைத்தும் வர்த்தக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கைகளில். இவர்கள் உலக அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்தும் திறமை கொண்டவர்கள்.

வாழ்வில் வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் வெற்றியின் ரகசியத்தை அளிக்கிறார்கள். இவ்வருடம் இன்சைட் - DNA of Success நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள் இதோ உங்களுக்காக...

திருமதி. அருந்ததி பட்டாச்சார்யா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர், பிரமல் மற்றும் ஸ்ரீ ராம் குழுமத்தின் தலைவர் திரு. அஜய் பிரமல், அமெரிக்காவின் INSTEAD மற்றும் கெல்லாக் மேலாண்மைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் தீபக் ஜெயின், பிரபல ஷாப்பர்ஸ் ஸ்டாப் இன் Non Executive Vice Chairman மற்றும் TRRAIN நிறுவனத்தின் நிறுவனர், திரு B.S. நாகேஷ் இன்னும் பல வெற்றியாளர்கள் குழுமியிருக்க சத்குருவின் இருப்பில் இந்த தேசத்தின் வளர்ச்சியின் மிக முக்கிய மைல்கற்கள் இதோ இங்கே ஈஷா யோக மையத்தில்!

எதற்காக வந்துள்ளீர்கள்!

நாட்டின் பல பாகங்களிலிருந்து பல பங்கேற்பாளர்கள் நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்களை வரவேற்ற நம் குழு எதற்காக இங்கே வந்துள்ளீர்கள் என கேட்க... கிடைத்த பல சுவாரசியமான பதில்கள் இங்கே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
“தோல்வியிலிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? நீங்கள் தோல்வியடைவதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஏன் தோல்வியிலிருந்து வெற்றிக்குச் செல்ல வேண்டும்? ஒரு வெற்றியிலிருந்து இன்னொரு வெற்றியை நோக்கிச் செல்லுங்கள். வாழ்வில் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து ஏன் பாடம் கற்கக்கூடாது?”

"அடுத்த 10 ஆண்டுகளில் என் நிறுவனத்தை மிகப் பெரிய அளவில் உயர்த்த வேண்டும் என்ற நோக்கம்தான். அதற்கு சத்குரு வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார் மலேசியாவிலிருந்து வந்த மாட்ரிக்ஸ் ஒலியோகெம்மின் மேனேஜிங் டைரக்டர் கீதா.

ஹெட் ஃபீல்ட் இன் CEO திரு. குனால் ஜகி கூறும்போது, "எனக்கு வாழ்வில் தேவையானது அனைத்தும் கிடைத்துவிட்டது. இப்போது வாழ்வின் ஆழ்ந்த பொருளை தேடும் விருப்பத்தில் இங்கே வந்துள்ளேன்," என்றார்.

"சென்ற மாதம் சத்குருவை கோல் இந்தியா ஃபௌண்டேஷனில் பார்த்தேன். அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே வந்துள்ளேன். என் வியாபாரத்தை விரிவாக்க சிறந்த வழியை சத்குருவிடமிருந்தும் பல நிறுவன வெற்றியாளர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள வந்தேன்," அபிமன்யு ஷராஃப், டைரக்டர், விகாஸ் குரூப்

வெற்றியிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!

யாரேனும் தோல்வியடைந்தால் மன ஆறுதலுக்காக தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்ற அறிவுரைதான் கிடைக்கும்.

“தோல்வியிலிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? நீங்கள் தோல்வியடைவதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஏன் தோல்வியிலிருந்து வெற்றிக்குச் செல்ல வேண்டும்? ஒரு வெற்றியிலிருந்து இன்னொரு வெற்றியை நோக்கிச் செல்லுங்கள். வாழ்வில் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து ஏன் பாடம் கற்கக்கூடாது?” என்று சத்குரு தன்னுடைய தொடக்க உரையில் பேசினார்.

சத்குருவின் இந்த வித்தியாசமான உரை பங்கேற்பாளர்களை பெரிதும் ஈர்த்தது. உரை மட்டுமல்ல, யோக மையத்தின் சூழலும், மையத்தின் தூய்மையும் தன்னார்வத் தொண்டர்களின் பணிவும் தம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாக பலரும் பகிர்ந்துகொண்டனர்.

நீயா? நானா?

"வெற்றி பெறுவது யார்? நீயா? நானா? இப்படித்தான் வர்த்தக உலகம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நடைமுறை தற்போது இல்லை. போட்டிகளின் காலம் முடிந்துவிட்டது. கூட்டாக சேர்ந்து (Collaboration) தொழில்புரியும் புதிய நடைமுறையே தற்போது பெரும் வெற்றியை அளிக்கும் வழி. வரும் நாட்களில் புதிய பொருட்களை உருவாக்குவதைவிட புதிய வியாபார முறைகளை (business models) உருவாக்குவதே வெற்றியை அளிக்கும்.

தொழிலில் வளர்ச்சி ஏற்படுத்த புதிய யோசனைகளை உருவாக்கலாம். ஆனால் வெற்றிக்கு பல புதிய யோசனைகள் தேவை இல்லை. ஒரே ஒரு யோசனை போதும். ஆனால், அதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வெற்றிக் கனியைப் பறிக்கலாம்," என்றார் தீபக் ஜெயின்.

வெற்றியின் புதிய ஃபார்முலாவுடன் மேடையை அலங்கரித்த திரு. தீபக் ஜெயினின் பேச்சை பலரும் வரவேற்றனர். இறுதியாக, "சத்குரு உலகத்தில் மாற்றம் கொண்டுவர விரும்புகிறார். அதில் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்," என்று கூறி முடித்தார்.

வெற்றிப் பாதையில் நீங்கள்! ஆனால், உங்களைச் சுற்றியிருப்பவர்கள்?!

நேற்று பங்கேற்பாளர்களை மிகவும் கவர்ந்தது அருந்ததி பட்டார்ச்சார்யாவின் வாழ்க்கை அனுபவம். நீங்கள் வெற்றியை நோக்கிச் செல்லும்போது உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் எப்படி உங்களுடன் அழைத்துச் செல்வது?

"நீங்கள் வெற்றிப் பாதையை நோக்கி மிக வேகமாகச் செல்லலாம். ஆனால், அது போலவே உங்களைச் சுற்றியிருப்பவர்களும் செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது தவறு," என்றார்.

அருந்ததி அவர்களின் நிர்வாகத் திறமையை பாராட்டிய சத்குரு, "இந்திய வங்கிகளிடம் நிலவும் பல பிரச்சனைகளுக்கு இடையிலும் அருந்ததி தன் நிறுவனத்தில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினார்," என்றார்.

"வாழ்வில் முன்னேற்றம் காண வெற்றிப்பெற வேண்டும் எனும் தீவிரமான ஆர்வம் தேவை. உங்களுடன் இருப்பவர்கள் உங்களைப் போலவே வேகமாக நடைபோட மாட்டார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் அன்பாக இருங்கள். “நான்” என்பதைவிட “நாம்” என்ற ஒன்றே வெற்றியைத் தேடித்தரும்," என்று அருந்ததி கூறினார்.

அருந்ததியின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் தமது தொழிலில் மிகவும் உபயோகமாக இருக்கும் என பல பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மேலும், பல சுவாரசியமான வெற்றி ரகசியங்கள் இன்றைய நிகழ்விலிருந்து உங்களுக்காக, வெகு விரைவில்... இணைந்திருங்கள்!