வெள்ள நிவாரணப் பணிகளில் ஈஷா நடமாடும் மருத்துவமனை

வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஈஷா தன் நடமாடும் மருத்துவமனைகளின் மூலம் சிறந்த சேவையை வழங்கி வருகிறது. அதைப் பற்றி சில செய்திகள்…

வெயில் வெளுத்து வாங்கிய நாட்களில், எப்போது மழை வரும் என்று காத்திருந்தவர்கள் இன்று அதிர்ந்துபோய்க் கிடக்கிறார்கள். வடகிழக்கு பருவ மழை – கடலூர், சிதம்பரம் மற்றும் சென்னை மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. குதூகலமான குடும்பங்களாக இருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள், வீட்டோடு சேர்த்து உடைமைகளையும் பறிகொடுத்து, சொந்த மண்ணிலேயே அகதிகள்போலப் பல இடங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

உயிரிழப்புகள், பொருள் சேதங்கள் என்று பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. மழை நின்ற பின்னரும் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெள்ளக் காலங்களுக்கே உரிய சாபக்கேடான நோய்களும் மெதுவாகத் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது இன்றைய அவசியத் தேவையாக இருக்கும் பட்சத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “ஈஷா நடமாடும் மருத்துவமனையின்” சேவை ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஈஷா நடமாடும் மருத்துவமனையின் சேவை:

‘ஈஷா மருத்துவ’ குழுவினர் கடலூர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடிப் பயணம் செய்தபோதுதான் நிலைமையின் வீரியம் முழுமையாகப் புரிந்தது. மழை நின்றாலும் நோய் தொடரும் பட்சத்தில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் ஈஷா மருத்துவக் குழுவினர்.

ஈஷா நடமாடும் மருத்துவமனை சார்பில் சென்னை கொளத்தூர் – விநாயகபுரம், பெரவள்ளூர், வியாசர்பாடி காந்திபுரம், கல்யாணபுரம் மேலும் வட சென்னையின் சில பகுதிகளில் கடந்த இரு தினங்களாக நடந்து வரும் இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. சென்னையைச் சேர்ந்த சில மருத்துவர்கள் ஈஷா மருத்துவமனையுடன் கைகோர்த்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளான ஆலப்பாக்கம், பெரியபட்டு மற்றும் கம்பளிமேடு பகுதிகளில் 350 பேர் கடந்த இரு தினங்களாக இலவச மருத்துவ சிகிச்சையில் பலன் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடலூர் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து இலவசமாக மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

மழை பாதித்த ஊர்களில் மருத்துவ முகாம்களை நடத்தி, தடுப்பு மருந்துகளைக் கொடுத்து, மழைக் கால நோய்களைக் கட்டுப்படுத்துவதுதான் ஈஷாவின் அவசரகால நடவடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert