'கிராஃபிக் டிசைனர்' இராகவராம் தனது உணவு அனுபவங்களை நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

திரு. இராகவராம்:

எனக்குப் பயணம் செய்வது ரொம்பவுமே பிடிக்கும். புதிய புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள் என நிறைய கிடைக்குமே! அதோடு சேர்ந்து பல புதிய உணவு வகைகளையும் ருசி பார்க்க முடியும்.

raghavaram-anna

ஒருமுறை கேதார்நாத் மலைகளில் ஏறிக்கொண்டிருந்தோம். கீழே கௌரிகுண்ட்டில் அவ்வளவு வெயில். அதனால் மிக மெல்லிய டி-ஷர்ட்டை போட்டுக்கொண்டு ஏற ஆரம்பித்துவிட்டோம். போகப்போக குளிர ஆரம்பித்துவிட்டது. ராம்வாடா என்ற இடத்தில் நானும், என் நண்பனும் ஏதேனும் சுடச்சுட கிடைக்குமா என தேட ஆரம்பித்தோம். ஒரு இடத்தில் ரொட்டியும், கூட்டும் கிடைத்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மிகவும் ஆவலாக சாப்பிட ஆரம்பித்தேன். அது கோஸை பாதி வேகவைத்துச் செய்த சப்ஜி. ஒன்று பச்சையாக இருந்தால், மலையில் விளைந்த அந்த அருமையான கோஸை சாப்பிட்டுவிடலாம். இல்லையென்றால் முழுமையாக பருப்போடு வெந்தாலும் சுவையாக இருக்கும். ரெண்டும் இல்லாமல் பாதி வெந்ததால் ஒருவித வாசனையுடன், சாப்பிடவே பிடிக்கவில்லை. அப்படியே குமட்டிக்கொண்டு வந்தது. அப்படியே வைத்துவிட்டேன். அதிலிருந்து எங்கே கோஸைப் பார்த்தாலும் ராம்வாடா சம்பவம்தான் ஞாபகம் வரும். ரொம்பவுமே ஜாக்கிரதையாக கோஸ் முழுமையாக வெந்திருக்கிறதா என்று சோதித்து விட்டுத்தான் சாப்பிடுவேன்.

அதேபோல மற்றொரு முறை வரலாற்றுச் சிறப்புமிக்க உஜ்ஜயினிக்குப் போனோம். அங்கிருந்து பழைய ஊர்கள், விக்கிரமாதித்தன் இருந்த இடங்கள் என இவற்றையெல்லாம் பார்க்கக் காரில் சென்று கொண்டு இருந்தோம். எங்கள் கார் டிரைவர் ஒரு சாலை சந்திப்பில் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினார். அந்த இடத்தில் தள்ளு வண்டியில் ஒருவர் பலகாரங்களை விற்றுக் கொண்டிருந்தார். சரி, அவருக்குப் பசி போலிருக்கிறது சாப்பிட்டு வரட்டும் என காத்திருந்தோம். அந்தத் தள்ளு வண்டியிடம் போனவர், ரெண்டு கையிலும் ரெண்டு இலைகளில் ஏதோ எடுத்துக் கொண்டு வந்தார்.

இதை சாப்பிட்டுப் பாருங்கள் சாப்... நன்றாக இருக்கும்... என்றார். மஞ்சள் நிறத்தில் இருந்த அது அவலில் செய்தது என பார்த்தாலே தெரிந்தது. எனக்கு அவலே பிடிக்காது. முகம் நிறைய சிரிப்போடு அவர் கொண்டு வந்து அன்பாகக் கொடுக்கும்போது எப்படி மறுப்பது? தயக்கத்தோடு வாங்கிக்கொண்டு ஒரே ஒரு வாய் சாப்பிட்டேன்... அவ்வளவு ருசியாக இருந்தது! 'போஹா' என சொல்லப்படும் அந்தத் தின்பண்டம் அவ்வளவு ருசி! பிறகு இறங்கிப் போய் ஆளுக்கு இன்னும் ஒன்று வாங்கி சாப்பிட்டோம். அந்தக் கடைக்காரரிடம் அதை எப்படிச் செய்வது எனக் கேட்டுக் கொண்டும் வந்தேன். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொல்லி செய்யச் சொன்னபோது, அதுபோல அவ்வளவு ருசியாக இல்லை.

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலத்திற்கேயுரிய உணவுகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் நாம் என்னதான் முயன்றாலும், அவர்களைப் போலவே அந்த ருசியுடன் செய்ய முடிவதில்லை. அமர்நாத்திற்குப் போயிருந்தபோது அங்கே தோசை கிடைக்கிறது என ஆவலாக வாங்கினால் கொடுமையாக இருந்தது! எனவே அவரவர் செய்வதை அந்தந்த இடத்தில் சாப்பிட வேண்டும் என்பதையே நான் இந்த சுற்றுப் பயணங்களில் பாடமாகக் கற்றுக்கொண்டேன்.

வடஇந்திய பாணியில் சில உணவு வகைகள் இதோ...

வெஜிடபிள் மக்கன்வாலா

தேவையான பொருட்கள்:

நறுக்கிய காய்கறிகள் (வாழைக்காய், காலிஃப்ளவர், பட்டாணி, ஃப்ரெஞ்சு பீன்ஸ்) - 2கப்
தக்காளி - மூன்று
தக்காளி விழுது - இரண்டு மேஜைக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
கார்ன்ஃப்ளவர் மாவு - இரண்டு தேக்கரண்டி
முந்திரி விழுது - இரண்டு மேஜைக்கரண்டி
நசுக்கிய மிளகு ஐந்து
லவங்கம் - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
காய்ந்த மிளகாய் - மூன்று
வெண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் மிளகு, லவங்கம், ஏலக்காய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
  • இத்துடன் தக்காளியை சேர்த்துக் கரையும் வரை வதக்கவும்.
  • இதற்கிடையில் காய்கறிகளை தேவையான நீர் சேர்த்து வேகவைக்கவும்.
  • வதக்கிய தக்காளியுடன் அரைத்த தக்காளி விழுது, வேகவைத்த காய்கறிகளை சேர்க்கவும்.
  • இத்துடன் கார்ன்ஃபிளவர் மாவை தேங்காய்பாலில் கரைத்து சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு முந்திரி விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.
  • இதை சப்பாத்தி, பிரெட்டுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.

ராஜ்வாடி கிச்சடி

ராஜ்வாடி கிச்சடி, Rajwadi kichadi

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
லவங்கம் - மூன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் லவங்கம், சீரகம், ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும்.
  • இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
  • பிறகு அரிசி மற்றும் பருப்பை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
  • இதை தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் குழைவாக வேக வைக்கவும்.
  • கிச்சடியை தயிர் பச்சடி அல்லது ஊறுகாயுடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.