Question: அலுவலகத்திலும், வீட்டிலும் ஏன் வெவ்வேறு விதமாக நடந்து கொள்கிறோம்? சில நேரங்கள் நான் என் அலுவலத்தில் நல்லபடியாக நடந்து கொள்கிறேன், ஆனால் வீட்டில், அதே விதமாக நடந்து கொள்ள முடியவில்லை என்றும் உணர்கிறேன். ஏன் இந்த இரண்டுபட்ட நிலை?

சத்குரு:
சரி, அலுவலகத்தில் யாரோ ஒருவர் உங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டே இருப்பதால் ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் நல்லவராக இருக்கலாம். வீட்டில் உங்களைக் கட்டுப்படுத்த சிரமப்படுகிறார்களோ என்னவோ! (சிரிக்கிறார்)

ஒரு சிலர் அலுவலகத்தில் நல்லவர்களாகவே நடந்து கொள்வார்கள், வீட்டுக்கு வந்தவுடன் அவர்களின் நடவடிக்கை மோசமாகும்.

வீடு என்கிற அமைப்பைப் பற்றிய தெளிவு அவர்களிடம் இல்லை. குழப்பத்திலேயே இருக்கிறார்கள். வீட்டில் ஓய்வில் இருக்கும்போது எதைச் செய்தாலும் ரிலாக்ஸ்டாக, தாறுமாறாக செய்யலாம் என்றே பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்.

ஓய்வு நிலையில் இருப்பது என்றால் செய்யும் செயல்கள் அனைத்தையும் திறம்பட செய்வது என்பது அவர்களுக்கு பிடிபடுவதில்லை. நாம் எவ்வளவு ஓய்வில் இருக்கிறோம் என்பதே நம் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படை.

அலுவலகம் மட்டும் உங்களை ஊட்டி வளர்க்கவில்லை, உங்கள் இல்லமும் உங்களை முழுதாய் வளர்கிறது

உங்களால் ஓய்வு நிலைக்கு செல்ல இயலவில்லையா? உங்கள் செயலையும் உங்களால் சிறப்பாக செய்ய இயலாது. இதனால் நீங்கள் ஓய்வு நேரத்தைச் செலவழிக்கும் உங்கள் இல்லம் சிறப்பாய் இருப்பது உங்கள் அலுவலக வேலைகளையும் சிறப்பாய் செய்வதற்கு வழி வகுக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இல்லம் என்னும் அழகிய அமைப்பை நீங்கள் உருவாக்கக் காரணமே உங்களுக்கு அது தேவைப்பட்டதால்தான். அலுவலகத்தின் பொறுப்பு கூடிப் போக உங்கள் இல்லம் உங்கள் மேல் பயணப்படும் சுமை ஆகிவிட்டது. நீங்களும் பாரம் தாளாமல் துவண்டு போகிறீர்கள்.

அலுவலகம் சிறந்ததா? வீடு சிறந்ததா? அல்லது எனக்கு சமூகத்தின் மேல் தீராத ஆர்வம் இருக்கிறதே, அது சிறந்ததா? என நீங்கள் வரிசையாய் கேள்விகளை அடுக்கலாம். நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்... ஒரு சூழ்நிலையைவிட மற்றொன்று முக்கியமானதல்ல.

ஒருவர் என்ன செய்கிறார் என்பது முக்கியமல்ல, ஆனால் அவர் அதை எப்படி செய்கிறார் என்பதே முக்கியம். எனவே வீடு தானே என்று பிரித்துப் பார்க்காதீர்கள். உங்கள் வீடு அல்ல அது, உங்கள் வாழ்க்கை அது.

அலுவலகம் மட்டும் உங்களை ஊட்டி வளர்க்கவில்லை, உங்கள் இல்லமும் உங்களை முழுதாய் வளர்கிறது. உங்கள் வாழ்வின் ஒரு பகுதியை அக்கறையில்லாமலும், மற்றொரு பாதியை அக்கறையோடு கவனிக்கவும் விரும்புவீர்களா?

உங்கள் அணுகுமுறை இப்படி இருந்தால் உங்களுக்கு மிஞ்சப் போவது துன்பமே!

உங்கள் குடும்பத்துடன் நீங்கள் எத்தனை நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதைவிட எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

நீங்கள் அக்கறையில்லாமல் கையாளும் ஒவ்வொரு செயலும் மறுபடியும் உங்களிடமே வந்து சேரும். நிச்சயமாக வரும்.

அலுவலகத்தில் பணிநீக்கம் என்னும் விளைவு இருப்பதால் நீங்கள் அங்கு ஒழுக்கசீலராய் விளங்கலாம். ஒருவேளை வீட்டில் உங்கள் பணி நிரந்தரப்படுத்தப் பட்டதால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற துணிச்சலில் நீங்கள் செயல்படலாம்.

நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், வீட்டில் இருப்பவர்களும் உங்களை பணிநீக்கம் செய்ய முடியும். இனியும் அது ஒரு நிரந்தரப் பதவி கிடையாது.

நம் பெண்களும் துரிதமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்திய ஆண்களுக்கு அவர்கள் என்ன செய்தாலும் "நம் மனைவி பொருத்துக் கொள்வாள்," என்கிற மனோபாவம் வலுவாக இருக்கிறது.

அப்படி நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அவர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நீங்கள் வெகு சீக்கிரமாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுக்காக வாழாத பட்சத்தில் அவர்கள் உங்களுக்காக வாழ மாட்டார்கள். சூழ்நிலைகள் மாறிக் கொண்டிருக்கின்றன அதனால் நீங்கள் மாறிவிடுவதே சிறந்தது.

பணிச் சூழ்நிலைகள், பணித் தேவைகள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. உண்மைதான். நீங்கள் உங்கள் வேலையில் வெற்றியை நோக்கி நகர நகர உங்கள் குடும்பத்துடன் நீங்கள் செலவிடும் நேரமும் குறைந்து கொண்டேதான் செல்லும்.

ஆனால் உங்கள் குடும்பத்துடன் நீங்கள் எத்தனை நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதைவிட எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

எங்களுடன் இத்தனை நேரம் ஏன் உட்கார்ந்து பேசுவதில்லை என்று அவர்கள் கேட்பதில்லை, அவர்களுடைய தேவையெல்லாம் "அவர்கள் மீது உங்கள் கவனம்".

அவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான முக்கியத்துவத்தை நீங்கள் அளித்தால், நீங்கள் அவர்களுடன் ஒரு நிமிடம் கூட செலவழிக்கத் தேவையில்லை. அவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதை அவர்கள் உணருமாறு செய்யுங்கள்.

அவர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தால், உங்களை அவர்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள் என்பதே நிஜம். யாருக்குத்தான் தன் மேல் அக்கறை இல்லாத ஒரு மனிதருக்காக வீட்டில் உட்கார்ந்து கொண்டு வெம்பப் பிடிக்கும். அவர்கள் தேவையெல்லாம், நீங்கள் அவர்களை புரிந்து கொள்வதே!

முயற்சி செய்து பாருங்கள், உறவுகள் சுவைக்கும்!

Scott McLead@flickr