அக்டோபர் 2 - நம் தேசத் தந்தையின் பிறந்தநாள். நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்தை நமக்கு வாங்கித் தந்த அவர், எப்படி அதை நிகழ்த்திக் காட்டினார்..?! இதோ சத்குருவின் வார்த்தைகளில், மகாத்மா காந்தியைப் பற்றி...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

தன் மன உறுதியால் செயல் செய்து சிறப்பாய் வாழ்ந்த பல மனிதர்களை நாம் பார்க்க முடியும். இவர்கள் தன் உறுதியால் மனிதனுக்கு சாத்தியப்படாத பல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் மகாத்மா காந்தி மிகச் சிறந்த உதாரணம். மகாத்மாவிற்கு எந்தவொரு குறிப்பிட்ட திறனும் கிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் மிளிரும் அறிவுடையவர் அல்ல, அவர் செய்த ஒவ்வொரு செயலிலும் இது வெளிப்பட்டது. அவர் விஞ்ஞானி அல்ல, அவர் கலைஞர் அல்ல, அவர் பேச்சாளர் அல்ல, அவர் சிறந்த நிர்வாகியும் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவருடைய தொழிலான வழக்குறையாடுவதிலும் அவர் வல்லவர் அல்ல.

வாழ்வோ சாவோ ரோதனையோ சோதனையோ எதுவாக இருந்தாலும் அசைக்க முடியாத உறுதியுடன் அவர் வாழ்ந்தார்.

அவர் வாழ்வில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவம், "வாழ்வு தன்னை எப்படி அசைத்தாலும்....” அசராதவாறு ஒரு உறுதியை ஏற்படுத்திக் கொள்ளச் செய்தது. யாரும் அசைக்க முடியாமல், உறுதியாய் அதனை நிலைநிறுத்திக் கொண்டார். திடீரென பூதாகரமாய் ஒரு மாவீரனாய் எழுந்து நின்றார், அவர் பின்னால் கோடிக்கணக்கான மக்கள் கூடினர். இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் மக்கள் அவருடன் எழுந்து நின்றனர். இன்றும்கூட அவர் பெயரை உச்சரித்தால் அது மக்களிடம் பெருத்த உணர்ச்சியை எழுப்புகிறது. உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மகாத்மாவின் பெயரைக் கொண்டு ஒரு இயக்கத்தைக் கூட்டினால், இன்றும் ஒரு நூறு பேராவது கூடுவர் என்பதே உண்மை. இன்றும் இந்தியாவில், அவருடைய பெயருக்கு நிச்சயமாக பெருத்த மதிப்பிருக்கிறது. அவருக்குள் இருந்த உறுதி அப்படி. வாழ்வோ சாவோ ரோதனையோ சோதனையோ எதுவாக இருந்தாலும் அசைக்க முடியாத உறுதியுடன் அவர் வாழ்ந்தார்.

அசைக்க முடியாத ஆங்கில அரசையும் நாட்டைவிட்டு வெளியேற்றினார். அவர் கையிலெடுத்த ஆயுதத்தைப் பாருங்கள். யாரையோ பஞ்சுத் தடியால் அடிப்பதைப் போல் அவரை பாதிக்காமல், வலிக்காமல் அடித்தார். இல்லையா? உலகின் எந்த பகுதியிலும் யாரையும் சுடாமல், மக்களைக் கொல்லாமல், இத்தனை எளிமையான ஒரு கருவியேந்தி யாரும் போராடவில்லை. யாரையும் தாக்காமல் படையெடுத்து வந்தவர்களை போகச் சொல்கிறார், அவர்களும் போகிறார்கள். இது நடக்க ஸ்திரமான உறுதி இருக்க வேண்டும். இது சுலபத்தில் நடந்துவிடாது. கோடிக்கணக்கான மக்கள் இவருடைய அலையால் அடித்துச் செல்லப்பட்டனர்.

சத்தியாகிரகத்தை காந்தி நிகழ்த்தியபோது, ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தன்னார்வத் தொண்டரை அனுப்பி மக்களை கூட்ட முயற்சி செய்தார். அவர்களும் அற்புதமாக செயல் செய்தனர். அவருடைய எண்ணமெல்லாம் தேசம் சுதந்திரம் பெற வேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால் இன்றோ இந்த தேசம் உங்கள் கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது. இது முற்றிலும் வித்தியாசமான ஒரு சவால். நம் தேசம் இதிலிருந்து வெளிவர நம்முன் இருப்பது மிக வித்தியாசமான ஒரு சவால். நம்மிடம் மிக அருமையான சில கருவிகள் உள்ளன. நாம் இதனை நிகழச் செய்வோம்.