வாழ்க்கை எனும் விளையாட்டு வெகு சிலரால் மட்டுமே சிறப்பாக கையாளப்படுகிறது. பெரும்பாலானோருக்கு வாழ்க்கை சுமையாகி அழுத்தம் தருகிறது. வாழ்க்கையெனும் விளையாட்டை சிறப்பாய் கையாள சத்குரு சொல்லும் சில டிப்ஸ் இங்கே!

Question: ஒரு விளையாட்டை விளையாடும்போது, அதில் ஜெயிக்கவேண்டும் என்ற ஆசையை ஒதுக்கிவிட்டால், பின் அதே தீவிரத்துடன் அந்த விளையாட்டை விளையாட முடியுமா?

சத்குரு:

லியானெல் மெஸ்ஸி கால்பந்து விளையாடி பார்த்திருக்கிறீர்களா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: ஆம், பார்த்திருக்கிறேன்.

சத்குரு:

மெஸ்ஸி கால்பந்து விளையாடும் அதே தீவிரத்தோடு, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் வேலை செய்திருக்கிறீர்களா?

Question: இல்லை...

சத்குரு:

அந்த 90 நிமிடங்கள் முடிவடைந்தவுடன், தீவிரத்தை நிறுத்தி, அவர் அமைதியாக அடுத்த வேலையை செய்யத் துவங்கிவிடுவார். இப்போது அந்தத் தீவிரம் எங்கே? இப்போது அந்தத் தீவிரத்தை நிறுத்தி வைத்திருக்கிறார், அவ்வளவுதான். எப்போதுமே தன் காலுக்கு எட்டுவதை எல்லாம் அவர் உதைத்துக் கொண்டிருக்க மாட்டார். இது ஒவ்வொருவருக்கும் சாத்தியம். இன்னும் சொல்லப்போனால், தீவிரத்தை தேவையானபோது நிறுத்தி வைத்திருக்கத் தெரிந்தால்தான் தேவையானபோது மீண்டும் முழுத் தீவிரத்தில் ஈடுபடவும் முடியும். எல்லா நேரத்திலும் தீவிரமாக இருந்தால் சிறிது காலம் கழித்து இயல்பாகவே அந்தத் தீவிரத்தின் தன்மை குறைந்திருக்கும்.

இவ்வுலகிற்கு நீங்கள் வழங்கக் கூடிய சிறந்த இன்ஸ்யூரன்ஸ், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் விஷயம், நீங்கள் இனிமையான உணர்வில் இருப்பதுதான்.

வாழ்க்கை என்பதும் ஒரு விளையாட்டுதான். ஒரு விளையாட்டின் போக்கை நீங்கள்தான் நிர்ணயிக்கிறீர்கள் என்றால், அந்த விளையாட்டை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். விளையாட்டின் போக்கை நீங்கள்தான் நிர்ணயிக்கிறீர்கள் என்றால், நிச்சயமாக இனிமையைத்தானே உங்களுக்கு நீங்கள் உருவாக்கிக் கொள்வீர்கள்? அப்படி நீங்கள் மிகவும் இனிமையான உணர்வில் இருக்கும்போது நீங்கள் மிக அற்புதமான மனிதராக இருப்பீர்கள், இல்லையா? ஆனால், இதுவே நீங்கள் மிகவும் இனிமையற்று இருக்கிறீர்கள் என்றால், அதாவது கோபத்திலோ, இயலாமையிலோ, மன உளைச்சலிலோ இருக்கும்போது, நீங்கள் மிக மோசமான மனிதராக நடந்து கொள்வீர்கள், இல்லையா?

அதனால் இவ்வுலகிற்கு நீங்கள் வழங்கக் கூடிய சிறந்த இன்ஸ்யூரன்ஸ், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் விஷயம், நீங்கள் இனிமையான உணர்வில் இருப்பதுதான். அதாவது நீங்கள் ஆனந்தமான மனிதராக ஆவதுதான். ஆனந்தமாக இருக்கும்போது, ‘நல்லவனாய் இரு’ என்பது போன்ற முட்டாள்தனமான யோசனைகளை உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. நீங்கள் அப்படித்தான் இருப்பீர்கள். உங்களுக்குள் நீங்கள் எப்படியோ துயரத்தில் ஆழ்வதால்தான், ‘அன்பாய் இரு. எல்லோருக்கும் நல்லதையே செய்’ என்று யாரேனும் உங்களுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு நடந்துகொள்கிறீர்கள், இல்லையா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, எது நடந்தாலும் அதை அனுசரித்துப் போகக்கூடியவராக, மென்மையானவராக, பெருந்தன்மையோடு நடந்து கொள்பவராக இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இதுவே நீங்கள் துயரமாக இருந்தால், அதிகமான எரிச்சல், கோபம், ஆத்திரம் போன்ற உணர்வுகளுடன் நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் கவனித்திருக்கிறீர்கள்தானே? இது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்மைதானே?

அதனால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம், நீங்கள் உங்களை இனிமையாக வைத்துக் கொள்வதுதான். அப்போது வேறு விஷயங்கள் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் ஒருவரை நீங்கள் ஆனந்தமாக வைத்துக் கொண்டால், பிறகு எல்லாமே சரியாகிவிடும்.

உங்களை நீங்கள் ஆனந்தமாக வைத்துக் கொள்வது எப்படி? உங்கள் உடலும், மனமும் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆனால் அவை உங்கள் பேச்சு கேட்பதில்லை. இப்போது உங்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை... ‘நீங்கள்’ (உங்கள் உடலும் மனமும்) ஒரு அருமையான சாதனம்தான், ஆனால் உங்களின் கடிவாளம் உங்கள் கையில் இல்லை. அது எதன் கையிலோ அல்லது யார் கையிலோ இருக்கிறது. யோக விஞ்ஞானம் என்பது இந்தக் கடிவாளத்தை உங்கள் கையில் ஏற்கும் யுக்தி. ஏதோ, எப்படியோ நடக்கிறது என்று ஒதுங்கி அமராமல், உங்களை, உங்கள் வாழ்வை உங்களுக்கு வேண்டிய வகையில் அமைத்துக் கொள்வது.