உங்கள் திறமைகள் தீட்டப்பட்டிருக்க வேண்டுமெனில் உங்கள் உடல்நலம் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்.

இன்றைக்குப் பொதுவாக மக்களின் உடல்நலம் எப்படி இருக்கிறது? பலர் தேவைக்கு அதிகமாக வேலை செய்து உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள். வேறுபலர் தேவையான அளவுகூட வேலை செய்யாமல் உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.

ஆரோக்கியம் என்பது உருவாக்கப்படுவதில்லை. அதுதான் உடலின் அடிப்படை இயல்பு. அதை உணராமல், நோய்களை வரவேற்பது நாம்தான்.

இந்தப் பூமியில் நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு நீங்கள் வாழ்ந்திருந்தால், எந்த அளவு உடல் உழைப்பு கொடுத்திருப்பீர்களோ, அதில் நூறில் ஒரு பங்குதான் இன்றைக்கு உழைக்கிறீர்கள். விஞ்ஞான வளர்ச்சியால், அந்த அளவு உங்கள் உடல் பயன்படுத்தப்படாமல் சோம்பிக் கிடக்கிறது. அப்புறம் அது எப்படி ஆரோக்கியமாக இருக்கும்?

உடலை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே, நூறில் எண்பது நோயாளிகள் எளிதாக குணமாகி விடுவார்கள். மிச்சமிருக்கும் இருபதில் பத்து நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தை சீராக்கிக்கொண்டால், அவர்களைவிட்டும் நோய்கள் விலகிவிடும்.

ஒரு சமூகத்தில் நூறில் தொண்ணூறு பேர் இப்படி ஆரோக்கியமாக இருந்துவிட்டால், மிச்சமிருக்கும் பத்துப் பேரின் நோய்களை வெகு சுலபமாகச் சமாளிக்கலாம்.

உங்கள் உள்ளங்கையை ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை திறந்து மூடினால் போதும்.. ஒரே மாதத்தில் அந்தக் கை எத்தனை திறனுள்ளதாக மாறுகிறது என்று பார்ப்பீர்கள்.

அரைகுறையாக மூச்சுவிடாமல், முழுமையாக சுவாசிப்பதற்கு பிராணாயாமா பயின்று அதைப் பழக்கமாக்கிக்கொண்டால், உங்கள் நுரையீரல்கள் இப்போது இருப்பதைவிட பலமடங்கு சிறப்பாகச் செயல்படுவதை கவனிப்பீர்கள்.

என் இளமைக் காலத்தில், பொதுவாகவே காட்டில் நடக்கப் பிடிக்கும். ஒரு நாளைக்கு இருபது முப்பது கிலோ மீட்டர் நடந்தால், நாளின் முடிவில் ஒரு கவளம் சோறுகூட அமுதமாய் இருக்கும்.

ஒருமுறை, சிறு குழுவாக சிலர் காட்டுக்குள் நடந்தோம். விடாமல் மழை பெய்ததால், எங்களால் அடுப்பு மூட்டி சமைக்க முடியவில்லை. காட்டினுள் வெகுதூரம் சென்றுவிட்டோம். அங்கு ராணுவத்தினர் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தனர். அங்கிருந்த அதிகாரி எங்களை வரவேற்று உணவு கொடுத்து உபசரித்தார்.

"சில ரகசிய கோப்புகளுடன் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் இந்தக் காட்டில் விழுந்து சிதறிவிட்டது. ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்து, அந்த ரகசியங்களை மீட்பதற்காக ஆறு வாரங்களாக ஒவ்வொரு பகுதியாக நடந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் எதற்காக வந்தீர்கள்?"என்று அவர் கேட்டார்.

"சும்மா நடக்க ஆசை. ஜாலியாக வந்தோம்"என்று நான் சொன்னபோது, பக்கத்தில் இருந்த சிப்பாயின் வாய் பிளந்தது.

"என்னது? ஜாலியாக வந்தீர்களா? ஆறு வாரமாக நடந்து நடந்து கால்களெல்லாம் கொப்புளங்கள். நீங்கள் என்னடாவென்றால் ஜாலியாக நடப்பதாகச் சொல்கிறீர்கள்!"

ராணுவத்தில் போரில்லாத நாட்களிலும் வீரர்களுக்குக் கடுமையான பயிற்சி கொடுப்பதற்குக் காரணமே, அந்த அளவு இயங்கிக்கொண்டிருந்தால்தான், உடல் திறனோடு செயல்படும் என்பதால்தான்.

எல்லோரும் சோம்பியிருந்தால், சில தலைமுறைகள் கழித்து முழுமையான உறுப்புகள் இருந்தாலும், உடல் ஊனமுற்றுப் போய்விடும்.

உங்களைக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

"வசதியாக வாழ்வதற்காகத்தானே மனிதன் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கிறான்? அவற்றைத் துறந்துவிட்டு மறுபடி காட்டு வாழ்க்கைக்குப் போகச்சொல்கிறீர்களா?"என்று கேட்பீர்கள்.

உயிரோடு இருக்கும்போதே உங்களைச் சுற்றி, எதற்கு பிரமிடு எழுப்புகிறீர்கள்? சரியான உடல் உழைப்பு இல்லாமல், எவ்வளவு பேர் மம்மி மாதிரி ஆகிவிட்டீர்கள்?

ஒருவருக்குத் தோற்றம் முக்கியமல்ல என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்த்தால், ஏமாறுவீர்கள். உங்கள் தோற்றம்கூட உங்கள் தரத்தையும், குணத்தையும் பிரதிபலிக்கும் முக்கிய அம்சம்தான்.

மனிதக் கண்கள் மனதிற்கு இதமானதை, இனிமையானதைத்தான் தேடும். மனிதவடிவத்தில் இல்லாமல் உலக உருண்டையைப் போல மாறிக்கொண்டிருந்தால், யாரால் உங்களை சந்தோஷமாகப் பார்க்க முடியும்?

மனைவியின் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று சங்கரன் பிள்ளை கேட்டார். செய்தித்தாளில் பார்த்த காரின் விளம்பரத்தை மனதில் வைத்துக்கொண்டு, மனைவி அவரிடம் சொன்னாள்: "ஆறே விநாடியில் ஜீரோவிலிருந்து நூற்றி இருபதுக்கு முள் போகுமே, அது வேண்டும்"

பிறந்தநாள் வந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"நீ கேட்டது வாசலில் காத்திருக்கிறது" என்றார், சங்கரன் பிள்ளை. மனைவி பரபரப்பாகக் கதவைத் திறந்தாள்.

அங்கே பரிசாகக் காத்திருந்தது கார் அல்ல.. எடை பார்க்கும் இயந்திரம்.

உங்களுக்குப் பிரியமானவர்களிடமிருந்து இப்படிப்பட்ட பரிசுகளையா எதிர்பார்க்கிறீர்கள்?

அளவுக்கு அதிகமாக உணவை வழங்கினால், உங்கள் உடல் ஒரு மோசமான சேமிப்புக் கிடங்காக மாறிவிடும். எப்போது சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது, சாப்பிடுவதை எப்போது நிறுத்துவது என்றுகூட எந்த கவனமும் இல்லாமல் வாழ்பவனால், வேறு எதைச் சாதித்துக் காட்ட முடியும்?

அளவுக்கு அதிகமாக உண்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் உடலுக்குச் செல்லம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. உண்மையில் அதை மிகக் கொடுமையாக வருத்தி தண்டனைதான் வழங்குகிறீர்கள். உங்கள் எடையைச் சுமக்க முடியாமல், உங்கள் உடலே கதற ஆரம்பிக்கும். உட்கார்வதற்கும், எழுந்திருப்பதற்கும் உங்கள் எலும்புகள் போராட வேண்டியிருக்கும். இது ஆரோக்கியமல்ல, ஒருவித நோய்.

உங்களை இன்னொருவர் பார்ப்பதற்காகவும், விரும்புவதற்காகவும், இணையாக ஏற்றுக்கொள்வதற்காகவும்கூட நான் சொல்லவில்லை. உங்களுக்கு ஒரு நிம்மதியான சுகமான வாழ்க்கை வேண்டும் என்றால், அதற்கு ஒத்துழைத்து உங்கள் உடல் சுகம் தர வேண்டும், மனம் சுகம் தர வேண்டும்.

நீங்கள் விரும்பினால், உங்களால் இந்த உடலை, உரிய அளவுக்கு மாற்றிவிட முடியும். உண்மையிலேயே உங்களைப் பற்றிய அக்கறை இருந்தால், தினமும் பல மைல்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். யோகா வகுப்புக்கு வாருங்கள். சொல்லித் தரும் பயிற்சிகளை உண்மையாகச் செய்து பாருங்கள்.

இனி ஒவ்வொரு கவளத்தை உட்கொள்ளும்போதும், ஆழ்ந்த கவனத்துடன், அது உடலில் எங்கே சேரப் போகிறது என்ற முழு விழிப்புணர்வுடன் உட்கொள்ளுங்கள்.

உங்கள் உடல் மட்டுமல்ல, உங்கள் மனம், உங்கள் வாழ்க்கை ஒவ்வொன்றும் என்ன வடிவம் கொள்ளப்போகிறது என்பதற்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு.

சிலருக்குக் குறிப்பிட்ட வயதை அடைந்ததும், திடீரென்று மூப்பு வந்துவிட்டதாக ஓர் எண்ணம் வந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடி, வருகிறவர், போகிறவர்களிடமெல்லாம் வாழ்த்துக்களை வாங்கிப் போட்டுக்கொண்டு, நீங்கள் இந்த பூமியில் வசித்துவிட்ட வருடங்களை எதற்காகக் கணக்கில் வைத்துக்கொள்கிறீர்கள்?

நீங்கள் எப்போது வயதானவராக நினைக்கிறீர்கள்?

உங்கள் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போதுதானே? நீங்கள் கடந்து வந்த பாதையில், உங்கள் மனதில் யார் யாரோ வீசிவிட்டுப் போன குப்பைகளைச் சேகரித்திருக்கிறீர்கள். அவற்றை அவ்வப்போது களையாமல், சுமந்துகொண்டிருந்தால், அந்த பாரம் உங்களை அழுத்தத்தான் செய்யும்.

கிராமத்திலிருந்து வந்து என் பண்ணையில் வேலை செய்த ஒருவருக்குக் கணக்கு வராது. கிட்டத்தட்ட ஐம்பது வயதிருக்கும். ஆனால், அவரிடம் எப்போது வயதைக் கேட்டாலும், "இருபது இருபத்தைந்து இருக்கலாம்" என்றுதான் சொல்வார்.

மழை வந்தால் உழுவார். காற்றடித்தால், விதை தூவுவார். பசித்தால் உணவு சாப்பிடுவார். அந்த அளவுக்கு எளிமையானதொரு வாழ்க்கையை வாழ்ந்த அப்பாவி அவர்.

எந்த எண் பெரிது என்று தெரியாத ஒரே காரணத்தால், தனக்கு வயதாகிவிட்டதாக அவர் என்றைக்குமே உணர்ந்ததில்லை. எப்போதுமே இளமையோடு இருந்துவிட்டார்.

அறுபத்தைந்து வயதாகிவிட்ட ஒருத்தி, செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொண்டாள்.

குழந்தைக்குப் பெயர் வைக்கும் வைபவம் வந்தது. உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் கூடினர். கிழவியை வாழ்த்தினர்.

"குழந்தையை எங்கள் கண்களில் காட்ட மாட்டாயா?"என்று கேட்டனர்.

"குழந்தை அழட்டும், காட்டுகிறேன்"என்றாள், கிழவி.

கேட்டவர்கள் குழம்பினார்கள். "அட, குழந்தை அழுவதற்காக எதற்காக எங்களைக் காத்திருக்கச் சொல்கிறாய்?"

"தூங்கும் குழந்தையை எங்கே வைத்தேன் என்று மறந்து தொலைத்து விட்டேன்"என்றாள், கிழவி.

காலத்தால் பயன்படுத்தப்பட்ட உங்கள் உடல் வேண்டுமானால், சில வரம்புகளைத் தாண்டி இயங்க முடியாமல் போகலாம். சில உறுப்புகள் செயலிழந்து போகலாம், மறதி தாக்கலாம்.

மனது அப்படியில்லை. அதன் வயதை நிர்ணயிப்பது காலம் அல்ல. உள்ளே என்ன சேகரித்திருக்கிறீர்கள், எதை மூட்டை கட்டி வைத்திருக்கிறீர்கள் என்ற சுமைதான் மனதின் வயதைத் தீர்மானிக்கும். தோள் சுமைகளால் முதுகு கூன் போடும். மனச் சுமைகளால், வயதில் மூப்பு கூடித் தெரியும்.

அறுபது வருடக் குப்பையைச் சுமந்தால், அறுபது வயது என்றுதான் தோன்றும். அன்றன்றைக்குச் சேர்த்ததை அன்றன்றே எரித்துப் பாருங்கள். இன்னும் சொல்லப்போனால், கணத்துக்குக் கணம் பழையதை சுமக்காமல் இறக்கி வைத்துக்கொண்டே இருந்து பாருங்கள். அந்தந்த கணத்தில் நீங்கள் புதிதாகப் பிறந்தவராகவே உணர்வீர்கள்.

சங்கரன் பிள்ளையின் மனைவி உடல் முழுவதும் வலி என்று டாக்டரிடம் வந்திருந்தாள்.

"எங்கே வலிக்கிறது?" என்றார், டாக்டர்.

"இங்கே" என்று அவள் தன் விரலை நீட்டி முழங்காலைத் தொட்டாள். வலியில் "ஐயோ.." என்றாள். அடுத்து தன் தோளைத் தொட்டாள். " இங்கேயும்" என்று அலறினாள்.

இப்படி உடலின் வெவ்வேறு பகுதிகளை அந்த விரலால் தொட்டுக் காட்டிய போதெல்லாம் வலி தாங்காமல் கத்தினாள்.

டாக்டர் தலையில் அடித்துக்கொண்டார்.

"வலி உங்கள் உடல் முழுவதும் இல்லை. ஒவ்வொரு இடமாகத் தொட்டுக் காட்டப் பயன்படுத்தினீர்களே, அந்த விரலில் இருக்கிறது"

வலிக்கும் விரலை வைத்துக்கொண்டு எதைத் தொட்டாலும் அதுவும் வலிப்பது போல்தான் தோன்றும். வயதாகிவிட்டதாக நினைத்துக்கொண்டு எதைச் செய்தாலும், களைப்புதான் வரும்.

ஆனால், கவனமாக பழைய குப்பைகளைக் களைந்து தன்னை எப்போதும் சுமையற்றவர்களாக வைத்துக்கொள்பவர்களுக்கு வயதே ஏறாது.

சுமைகள் ஏன் ஏறுகின்றன? ஒன்றைக் கொடுத்து, அதைவிடச் சிறப்பாக ஒன்றை வாங்குவது எப்படி என்று மனம் எப்போதுமே கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்காகவா கடவுள் உங்களை இங்கே அனுப்பினார்? இல்லை. கடவுளின் நண்பராக வாழச் சொல்லி பூமிக்கு அனுப்பினால், கணக்குகள் போட்டு நீங்கள் சாத்தானின் சீடர்களாகிவிட்டீர்கள். வாழ்க்கையையே பேரம் பேசும் வியாபாரமாக்கிவிட்டீர்கள்.

நீங்கள் விரும்பியபடி நடந்துவிட்டால், நல்லவராக, நாகரிகமகரீகமாக நடந்து கொள்வீர்கள். உங்கள் கணக்கு தப்பாகிவிட்டாலோ, உள்ளே இருக்கும் மிருகங்கள் எல்லாம் விழித்துக்கொள்ளும்.

உங்கள் தாத்தாவுக்குத் தாத்தா காலத்திலிருந்தே கடவுள் அதே வயதில் இருக்கிறாரே.. எப்படி? அவர் வாழ்க்கையை வியாபாரமாகக் கருதவில்லை. அதைக் கொடு, இதைத் தருகிறேன் என்று எந்த பேரமும் செய்யவில்லை.

யாரையும் நண்பனாக்கிக் கொள்ளவில்லை, பகைவனாக்கிப் பார்க்கவில்லை. மழை பொழிந்தால், அது ஆத்திகன் தோட்டத்தையும் நனைக்கிறது. நாத்திகன் தோட்டத்தையும் ஈரமாக்குகிறது.

யாரைப்பற்றியும், எந்தச் சுமையையும் சுமக்காததால், அவருக்கு வயதே ஏறவில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவாவது கடவுளைப் பின்பற்றிப் பாருங்களேன்.

வாழ்க்கையை வெளியேயிருந்து வேதனையோடு வேடிக்கை பார்ப்பதை நிறுத்துங்கள். சுமைகளைக் களைந்துவிட்டு, ருசித்து வாழ்ந்து பாருங்கள். அப்புறம் வாழ்க்கை தானாகவே உங்களை இளமையோடு வைத்திருக்கும்.

வயதேறாமல் இளமையாகவே இருப்பது எப்படி?

நீங்கள் சுவாசித்த காற்று, அருந்திய நீர், உட்கொண்ட உணவு இவற்றின் சேகரிப்பு தான் உடல். தேவையில்லை என்று ஒரு நாள் சேகரிப்பைக்கூட நீங்கள் உடலிலிருந்து உரித்து எறிய முடியாது. எனவே நாள் ஒன்று போனால், அதன் வயதில் ஒரு தினம் கூடித்தான் போகும்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாமே தவிர, அதன் வயதில் ஒரு நாளைக்கூட உதற முடியாது.

மனதை எங்கே பெற்றீர்கள்? பிறந்ததிலிருந்து உங்கள் சுற்றுப்புறம் உங்கள் மீது வீசி எறிந்த கருத்துக்கள், நீங்கள் கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள், சமூகத்தால் சுமத்தப்பட்ட எண்ணங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்ட குப்பைத் தொட்டியாகத்தான் மனம் இருக்கிறது.

எல்லாவற்றையும் வைத்துக்கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உங்களுக்குக் கிடையாது. எதையெல்லாம் நீக்கலாம் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. சேகரித்தது எல்லாவற்றையும் கூட ஒரே கணத்தில் உதறிவிட முடியும்.

தேவையற்றதை நீக்கி, மனதை தினம் தினம் புதிதாய்ப் பிறப்பிக்கும் சுதந்திரமும், அதன் வயதே ஏறாமல் என்றென்றும் இளமையாக வைத்துக்கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

முறையான யோகாவால் இது சாத்தியம், தவறவிடாதீர்கள்.