இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பிரதிபலிக்கும் வண்ணங்கள் பற்றியும், அதை நாம் கிரகித்துக்கொள்ளும் விதம் குறித்தும் எழுதியுள்ளார் சத்குரு. அதோடு "வைராக்கியம்" என்ற கவிதையின் மூலம், பிரபஞ்சத்தின் அடிப்படை, வண்ணங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதையும் விவரிக்கிறார்.

மிகக் குறைவானவர்களுக்கே வண்ணங்களின் பல்வேறு விதங்களைத் தெளிவாகக் கண்டுணர முடிகிறது. ஒரு ஓவியர் கூட, ஒரு மரக்கூட்டத்தை வரையும்போது 50 விதமான பச்சை வண்ணங்களை மட்டுமே சித்திரத்தில் தீட்டுவார். ஆனால், காட்டில் ஆயிரக்கணக்கான பச்சை வர்ணங்கள் வீற்றிருக்கின்றன. ஒரு ஓவியர் வேலை செய்வதை நீங்கள் கவனித்துப் பார்த்தால், வண்ணங்களின் நுணுக்கமான நுட்பங்களை அவர் கிரகித்துக்கொண்டு, முடிந்த அளவு நிஜத்திற்கு நெருக்கமாகத் திரையில் தீட்டுவது பிரமிப்பை ஏற்படுத்தும்.

சிந்திக்கும் மனம் வண்ணங்களை ஒரு பொருட்டாகக் கருதாது. தர்க்கரீதியாகப் பார்த்தால், கருப்பும் வெள்ளையும், வேறுபடுத்திக் காட்டுவதற்கு பலவிதமான சாம்பல் வர்ணங்களும் போதுமானதாக இருந்திருக்கும். இந்தக் கோணத்தில் பார்த்தால், இத்தனை வண்ணங்களை உருவாக்கிய படைத்தவன் பைத்தியக்காரன் என்ற முடிவுக்கு வரத்தோன்றும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வண்ணங்களை மெய்யாகவே உணர்ந்துகொள்ள, உங்கள் அனஹத சக்கரம் உயிர்ப்பாய் இருக்கவேண்டும். உதாரணமாக, உங்களுக்கு ஆழமான ஆன்மீக அனுபவமொன்று ஏற்பட்டாலோ, ஒருவர் மீது காதல்வயப்பட்டாலோ, உங்கள் அனஹதாவை அது தூண்டலாம். அப்போது வண்ணங்களை இன்னும் தெளிவாக உணர்வீர்கள். இரு பாலினருக்கு இடையேயும் இது வேறுபடுகிறது, பெண்கள் ஆண்களை விடத் துல்லியமாக வண்ணங்களை உணர்கிறார்கள் என்று ஒரு அறிவியல் ஆய்வு சொல்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் வண்ணம் என்பது கண்ணால் காணும் காட்சியை சார்ந்தது. ஆனால், இயற்கையில் தோன்றும் பலதரப்பட்ட வண்ணங்களை கிரகிக்கும் திறனுக்கும் உங்கள் புலனுறுப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. பூமியில் இருக்கும் ஒரு புழு-பூவிலிருந்து மனிதன் வரை எல்லாவற்றையும் உருவாக்கியுள்ளது அதே அடிப்படையான சக்திதான்.

நவீன அறிவியல் இப்போது அணுவிலிருந்து அண்டம் வரை அத்தனையும் அடிப்படையில் ஒரே வடிவமைப்பைக் கொண்டது என்பதையும் கண்டுணர்ந்துள்ளது. வேறுபாடு அவற்றின் நுட்பத்திலும் நுணுக்கங்களிலும் மட்டும்தான். அடிப்படை வடிவமைப்பு ஒன்றாக இருப்பதால், உங்கள் புலனுறுப்புகள் உருவாகியிருக்கும் விதம், வண்ணங்கள் உருவாகியிருக்கும் விதம், அவற்றை உங்கள் புலனுறுப்புகள் உணரும் விதம் என்று எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய் இருக்கிறது.

புலன்களின் குறிப்பிட்ட அம்சங்களோடு குறிப்பிட்ட வண்ணங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அதனால் வெவ்வேறு வண்ணங்கள் உங்களுக்குள் வெவ்வேறு பரிமாணங்களைத் தூண்டிவிட முடியும். ஒவ்வொரு வடிவத்திற்கும் அதற்கே உரிய வண்ண அமைப்பு உள்ளது. ஒருவர் போதுமான கவனம் செலுத்தினால், ஒவ்வொரு வடிவத்திற்கும், அது எவ்வளவு சூட்சுமமாக இருந்தாலும் சரி, அந்த வடிவம் சார்ந்த வண்ண அமைப்பு இருப்பதை உணரமுடியும். சப்தங்களுக்குக் கூட, அந்த குறிப்பிட்ட சப்தம் சார்ந்த வடிவமும், அதுசார்ந்த தனித்துவமான வண்ண அமைப்பும் உள்ளது. மந்திர உச்சாடனங்கள் செய்யும் பலருடைய அனுபவமும் இதுதான், அந்த மந்திரங்களோடு தொடர்புடைய தெளிவான வண்ண அமைப்புகள் உள்ளன.

இந்திய பாரம்பரிய இசையில், குறிப்பிட்ட இசை கட்டமைப்புகளை ராகங்கள் என்று சொல்கிறார்கள். அடிப்படையாக ராகம் என்ற சொல்லுக்கு வண்ணம் என்பது பொருள். சப்தங்களை நுட்பமாக பயன்படுத்துவதன் மூலம், அதனோடு தொடர்புடைய வண்ணமும் வடிவமும் உருவாகிறது. "ஆரம்பத்தில் ஒரு வார்த்தை இருந்தது" என்கிறார்கள். மனதளவில் வார்த்தைக்கு அர்த்தமிருக்கலாம், ஆனால் வார்த்தை என்பது அடிப்படையாக சப்தம்-வடிவம்-வண்ணம் சேர்ந்த ஓர் அமைப்பு. அதனால்தான், அனைத்திற்கும் ஆதியாய் இருந்த சப்தம் பற்றியும் பேசுகிறார்கள். பொருள்நிலையில் இருக்கும் யாவும், ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் உந்தித் தள்ளப்பட்டால் ஒளிவடிவம் பெறுகின்றன, அதனால் வண்ணம் என்பது இருக்கும் எல்லாவற்றிலும் பொதிந்துள்ளது.

இடையறாமல் கவனித்து வந்தால், இந்த அம்சங்கள் அனைத்தும் நாம் உணரும்விதத்தில் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும். "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று ஒருவர் சொன்னார். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கவனிக்கத் துவங்கி, உங்கள் கவனத்தின் தரத்தையும் தீவிரத்தையும் மேம்படுத்திவிட்டால் போதும், மனித விழிப்புணர்வு என்பது பிரபஞ்சத்திலுள்ள எல்லாக் கதவுகளையும் திறந்திட முடியும்.

வைராக்கியம்

வண்ணத்தின் வர்ணஜாலமான
சூரியோதயம் சூரியாஸ்தமனம்,
இலைகள் பூக்கள், வானவில்,
நிழல்கள், எல்லாம்
வண்ணமில்லா ஒளியின் விளையாட்டு!
வர்ணமில்லா இவ்வுயிரைத் தொடுவது,
வண்ணத்தின் ஒவ்வொரு இழையையும்
உணரும் ஆற்றல்தரும். வண்ணமயமான
இப்பிரபஞ்சத்தின் கோடானகோடி சுவடுகள்,
வைராக்கியமாய் (வண்ணத்திற்கு அப்பாற்பட்டு)
நிற்கும் இந்த வர்ணமில்லா உயிரின் லீலை.

Love & Grace