இந்த வாரப் பகுதியிலும், வேற்றுகிரக உயிர்கள் உடனான வியப்பூட்டும் அனுபவங்கள் பல இடம்பெறுகின்றன. அந்த உயிர்கள் பெண் உடலை நோக்கி ஈர்க்கப்படுகிறதா?! உண்மையில் அவை எப்படிப்பட்டவை? இங்கே இடம்பெற்றுள்ள அனுபவங்கள் கேட்பதற்கே மலைப்பாய் உள்ளன! மனித அனுபவத்தில் இதெல்லாம் சாத்தியம் தானா?

கைலாஷ் யாத்ரா - பகுதி 8

டாக்டர்.ராதா மாதவி:

அடுத்த நாள் காலை மானஸரோவர் கரையில் கூடினோம். சில பரிசோதனைகளுக்காக சில தியான அன்பர்களை சத்குரு தேர்ந்தெடுத்தார். மற்றவர்களை ஏரியின் கரையில் ஒரே வரிசையில் அமரச் செய்து தியானத்தில் ஈடுபடுத்தினார். பின்னர் மானஸரோவரில் இறங்கி எங்கள் அனைவரையும் வஜ்ராசனத்தில் சிறிது நேரம் அமரச் சொன்னார். அந்த ஏரியில் கால் வைத்து நடக்கும்போது சிவனின் மீது நடக்கிறோம் என்ற உணர்வோடு நடக்க வலியுறுத்தினார்.

அதே போல நாங்கள் மானஸரோவரில் கால் பதித்தபோது கட்டுக்கடங்காத இறையுணர்வு எங்களை ஆட்கொண்டது. கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வெள்ளம் பெருகியது.

பின்னர் நடந்த சத்சங்கத்தில் சத்குரு தாம் தேர்ந்தெடுத்த சில தியான அன்பர்களுடன் பரீட்சித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“எதற்காக ஏரியின் இந்தப் பகுதியில் மட்டும் இப்படிப்பட்ட உயிர்களின் நடமாட்டம் மிகுந்து இருக்கிறது என்று தெரியவில்லை. கைலாஷ் மலை இவைகளை ஈர்த்திருக்கிறதா? அல்லது இந்த மானஸரோவர் ஏரி இவற்றை ஈர்த்திருக்கிறதா என்பது கைலாஷ் சென்ற பின் தெளிவாகிவிடும் என நம்புகிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வேற்றுலக உயிரின் வினோத குணம் !-1

நான் கண்மூடி அமைதியாக உட்கார்ந்தால் அவை நெருங்குகின்றன. அவை நம்மோடு நட்புகொள்ள வருகின்றனவா அல்லது நமது உடல் அவற்றை ஈர்க்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், மனித இன வளர்ச்சியில் நிச்சயமாக இவற்றுக்குத் தொடர்பு இருக்கவேண்டும். ஏனெனில், மனித உடலில் இவை ஈர்க்கப்படுவது என்பது நான் அறிந்த வரையில் மிக வித்தியாசமானதாகவும் மிக அரிதான ஒன்றாகவும் உள்ளது. மனிதர்களைக் கண்டால் அவை கூச்சம் அடைகின்றன. நீங்கள் ஒரு குறிப்பிட்டவிதத்தில் இல்லாவிட்டால், எளிதாக அவை மனிதர்களிடம் வருவதில்லை. ஆனால், இங்கே அவை மனித உடலை நோக்கி மிக ஆர்வமாய் வருகின்றன. அதில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் ஒருவர் பகிர்ந்துகொண்டால் கேட்போம்“ என்றவுடன் ஒரு தியான அன்பர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

“அந்த உயிர்களைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் அவை உங்களைப் பீடிக்க விரும்புகின்றன. நான் சத்குரு அருகில் அமர்ந்திருந்தேன். அவை என் உடலுக்குள் செல்ல விரும்பின. பாலுறவு நிலையில்கூட அவை உள்ளே நுழைய முயன்றன. இன்று அதிகாலையில்கூட சத்குரு அவற்றைப் பார்க்கச் சென்றார். ஆனால் நான் உடன் செல்ல மறுத்துவிட்டேன். நம் அனுமதியில்லாமல் நம்மை ஆக்கிரமிப்பதை நான் விரும்பாததுதான் காரணம். வலுக்கட்டாயமாக அவை இப்படிச் செய்கின்றன என்றுகூட என்னால் சொல்ல முடியாது. ஆனால் இந்த விஷயங்கள் என்னுடைய புரிதலுக்கும் அப்பால் உள்ளன. இப்போதுகூட நான் கண்மூடி அமைதியாக உட்கார்ந்தால் அவை நெருங்குகின்றன. அவை நம்மோடு நட்புகொள்ள வருகின்றனவா அல்லது நமது உடல் அவற்றை ஈர்க்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. சத்குருதான் இதனை விளக்க வேண்டும்“ என்று சொல்லி அமர்ந்தார்.

அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சத்குருவும் விளக்கம் அளித்தார், “அவர் பகிர்ந்து கொண்டதைப்போல அவை உங்களை மூச்சுத்திணற ஆக்கிரமிக்க விரும்புகின்றன. அவற்றுக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனால் நீங்கள் ஒரு அழைப்பை, ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் அவை அதை நோக்கிச் செல்கின்றன. அவற்றின் மனதில் எந்தப் பாலுணர்வும் இல்லை. உண்மையில் அவற்றுக்கு ஆண், பெண் வித்தியாசமே தெரியாது. ஆனால் அவற்றை ஈர்க்க ஒரு ஆணின் உடலைவிட பெண்ணின் உடல் எளிதானது.

எனவே, அவை பெண்ணுடலை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. பாலுணர்வு குறித்து அவை சிந்திப்பதில்லை. பாலுணர்வு என்று சொல்லும்போது பொதுவாக அதனை ஒரு செயலாகவே நாம் எண்ணுகிறோம். நான் பாலுணர்வை அந்தரீதியில் குறிப்பிடவில்லை. உடல் உருவாக்கத்தின் மூலமாகக் குறிப்பிடுகிறேன். யோகத்தில் பாலுணர்வு மையம் கொண்ட சுவாதிஷ்டானச் சக்கரத்தை ‘சுயம் இருக்குமிடம்‘ என்பர்.

அதனால்தான் ஆன்மீகப் பாதையில் பிரம்மச்சரியம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் இது சுயம் வீற்றிருக்கும் இடம். வெளிச்சூழல்களின் தாக்குதலுக்கு இது ஆளாவதில்லை. வெளிச் சூழல்களின் தாக்குதலுக்கு உட்பட்டால், இது ஒரு மலராய் மலராமல் மக்கள் தொகை பெருகத்தான் வழிவகுக்கும். அதுதான் நோக்கம் என்றால் பரவாயில்லை. ஆனால் உங்கள் நோக்கம், ஆழமான இன்ப உணர்வை உங்களுக்குள் கொண்டுவருதல்தான் என்றால், நீங்கள் என்றென்றும் படைத்தவரிடம் நன்றியுணர்வோடு வாழ்வீர்கள். அதற்குத்தான் பிரம்மச்சரியம்.

வேற்றுலக உயிரின் வினோத குணம் !-2

ஞானோதயமடைந்த மனிதர்கள் 11 பேர் கைலாஷ் மலையில் ஒன்றுகூடினால் கௌதம புத்தர் அவரது உருவத்திலேயே இங்கே மீண்டும் தோன்றுவார் என்பதுதான் அது. புத்தரை ‘நிர்மான்காயா’ என்பர்.

கணநேர இன்பத்துக்குத்தான் நீங்கள் பாலுறவில் ஈடுபடுகிறீர்கள். அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. பாலுறவில் இன்பமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது, இல்லாவிட்டால், யார் குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறார்கள்? யாரும் அந்தத் தொந்தரவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை. ஆனால் சுவாதிஷ்டானத்தின் உண்மையான தன்மை, அது சுயத்தின் இருப்பிடம். நீங்கள் ஆத்ம சாதனைகள் மூலம் அதை வளப்படுத்தினால், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதை அறிந்தால், உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் முழுமையான இன்பத்தில் இருக்கும்.

தியானலிங்கப் பிரதிஷ்டைக்கு முதலில் 14 பேரை ஈடுபடுத்த விரும்பினோம். ஆனால் அது வேலை செய்யவில்லை. எனவே மூன்று பேர் மட்டுமே ஈடுபடுவது என்று முடிவுசெய்தோம். மூன்று பேரும் ஒரு முக்கோண சக்தி வியூகத்தை ஓர் அழைப்பாக அமைத்தோம்.

எதனாலும் மறுக்க முடியாத அழைப்புக்கான அந்த அமைப்பில் எல்லாவிதமான உயிர்களும் வந்து இறங்கின. எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட உயிர் தேவைப்பட்டது. பலவும் வந்தன, அழையா விருந்தாளிகளைப் போல. ஆனால் நாம் நினைத்த ஒன்றைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. ஆனால் எதிர்நோக்கியிருந்த அந்த ஒரு உயிராலும் நம் முக்கோண சக்தி வியூக அழைப்பை மறுக்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு முறை அவை தன் உடலை உதறிவிட்டால், ஓர் அழைப்பை ஏற்கவோ மறுக்கவோ பெரிய முடிவுகள் இருப்பதில்லை. நீங்கள் சக்திவாய்ந்த நிலையில் அவற்றை அமைத்தால் சிவனும்கூட இந்த அழைப்புக்கு வருவார்.

கைலாஷைப் பற்றி புத்த மதத்தில் ஒரு கதை உண்டு. ஞானோதயமடைந்த மனிதர்கள் 11 பேர் கைலாஷ் மலையில் ஒன்றுகூடினால் கௌதம புத்தர் அவரது உருவத்திலேயே இங்கே மீண்டும் தோன்றுவார் என்பதுதான் அது. புத்தரை ‘நிர்மான்காயா’ என்பர். அப்படியென்றால், தன் உடலை மீண்டும் உருவாக்கிக்கொள்ளக் கூடியவர் என்று பொருள்.

ஞானம் அடைந்தவர்கள் 11 பேர் கூடினால், புத்தர் வருவார் என்பது வெறும் கதையாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். அது உண்மையாகவும் இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் 11 பேர் தேவை இல்லை. மூன்று பேர் இருந்தால், மூன்றில் ஒருவராக நானும் இருந்தால், என்னால் யாரை வேண்டுமானாலும் இங்கே கொண்டுவர முடியும். நம் அழைப்பை யாராலும் நிராகரிக்க முடியாது.

இன்று காலை செய்தது உங்கள் உடலை ஓர் அழைப்பாக அமைத்ததுதான்” என்று சொல்லி முடித்தார்.

நாங்கள் மானஸரோவரை வணங்கி நிமிர்ந்தோம்.

தூரத்தில் கைலாஷ் மலை தகதகத்தது!


பயணம் தொடரும்...