வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது, யமன் பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று பல பூதாகரக் கதைகள் கேட்டிருப்பீர்கள். இது போன்று எழுதப்படாத நியதிகள் பல நம் கலாச்சாரத்தில் இன்றும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதென்ன பகட்டா இல்லை நம்மை மிரளச் செய்யும் தந்திரமா? விளக்குகிறார் சத்குரு...


சத்குரு:

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது.

மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

Photo Courtesy:planetchopstick @ flickr