ஜம்மு-காஷ்மீர் அருகே நடந்த தாக்குதலில் செவ்வாய் அன்று உயிரிழந்த colonel எம்.என்.ராய், சில வாரங்களுக்கு முன்பு தனது 'வாட்ஸ் ஆப்' பில், 'உங்கள் வாழ்வெனும் நாடகம் முடிவிற்கு வந்த பின்னும், மக்கள் எழுந்து நின்று உங்களுக்கு கரகோஷம் செய்யும் அளவிற்கு வாழ்வை மிக உயரியதாக வாழ்ந்திடுங்கள்.' என்ற செய்தியை தனது ஸ்டேடஸ் மெஸேஜ் ஆக வைத்திருந்தாராம். இவரது வீரத்தை பாராட்டி சத்குரு வெளியிட்டுள்ள செய்தி இது...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

colonel எம்.என்.ராயின் இந்த ஒரு செய்தியே, அவர் வாழ்வை எந்த அளவிற்கு ஆழமாய் புரிந்து வைத்திருந்தார் என்பதைக் காட்டுகிறது. இறப்பதற்குத் தயாராய் இருக்கும் ஒரு மனிதனால் தான் தன் வாழ்வை முழுமையாக வாழ முடியும். 'வாழ்க்கை' என்று நீங்கள் அழைப்பது ஒரு குறுகிய நிகழ்வு. நாளையே நீங்கள் இறக்கமாட்டீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு புத்திசாலி மனிதன், தனக்கு இன்றே கூட மரணம் நிகழலாம் என்ற விழிப்புணர்வுடன் தான் வாழ்வான். மரணம் உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது மட்டும் உங்கள் கவனத்தில் எப்போதும் இருந்தால், நீங்கள் உயிர்ப்புடன் வாழ ஆரம்பித்திடுவீர்கள்.

மரணம் என்பதை தெளிவாக, ஒரு பக்குவத்தோடு அணுகுவதே சிறந்தது.

நீங்கள் இறப்பீர்களா, மாட்டீர்களா என்பதைக் கண்டுகொள்ள அதீத புத்திசாலித்தனமோ, ஆராய்ச்சியோ, பட்டபடிப்போ தேவையில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே, இது நிச்சயிக்கப் படுகிறது. உங்களுக்கு நான்கு அல்லது ஐந்து வயதாகும் போதே, மரணம் பற்றி எப்படியும் உங்களுக்குத் தெரிந்திடும். அதனால் இது மக்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் இது தெரியாத ஒன்றைப்போல அவர்கள் தங்கள் கண்களை மூடிக் கொள்ளவே விரும்புகின்றனர். மரணம் என்பதை தெளிவாக, ஒரு பக்குவத்தோடு அணுகுவதே சிறந்தது. இளவயதிலேயே ஒருவருக்கு இந்தப் பக்குவம் வந்திட்டால், நெருங்கியவர் இறந்தபின் இதை கட்டாயத்தில் வளர்த்துக் கொள்வது தேவையிருக்காது, அது சரியாகவும் வராது. திடீரென்று ஒருநாள் இந்நிலை ஏற்பட்டபின், உடனடியாக அதை நீங்கள் சமாளிப்பது கடினம். மிகமிக நெருங்கியவரை இழந்திட்ட ஒருவருக்கு, அந்நேரத்தில் உபதேசங்களோ, அறிவுரையோ வழங்கினால், அது அவர்களை இன்னும் அதிகமாக பாதிக்கும்.

ஒருநாள், தான் பார்த்துப் பார்த்து வளர்த்த தன் ஒரே புதல்வனை இழந்திட்ட தாய் ஒருத்தி, துக்கம் தாழாமல், புத்தரிடம் சென்றாள். அவரிடம், "ஆன்மீகம் எல்லாம் இவ்வளவு பேசுகிறீர்களே. என் ஒரே செல்வனை உயிர் பெறச் செய்யுங்கள். அதை செய்யமுடியாவிடில் உங்கள் பேச்சிற்கு மதிப்புண்டோ? அதற்கு அர்த்தமும் தான் உண்டோ? நீங்கள் பேசுவதெல்லாம் உண்மை எனில், நீங்கள் உண்மையிலேயே ஞானி எனில், என் செல்வனை உயிர் பெறச் செய்து, அதை நிரூபியுங்கள்" என்றாள்.

மரணம் என்பது எதிர்பாராத பேரிடர் அல்ல. அது வாழ்வின் ஒரு அம்சம்' என்பதை உங்கள் குழந்தைகளும் அறியச் செய்யுங்கள்.

கௌதமர் அந்தப் பெண்மணியைப் பார்த்தார். இப்படியொரு ஆழ்ந்த துக்கத்திலே, துயரத்திலே அவள் துவளும் போது, தான் என்ன சொன்னாலும் அது எடுபடாது என்பதை புரிந்து கொண்டார். அதனால் அவர் அப்பெண்ணிடம், "சரி. நான் உன் மகனை உயிர் பெறச் செய்கிறேன். அதற்கு எனக்கு விசேஷமான எள்ளு தேவைப்படும். செல்... இங்கிருக்கும் வீடுகளில், எந்த வீடு இதுவரை மரணத்தை சந்தித்ததில்லையோ, அந்த வீட்டில் இருந்து எனக்கு கொஞ்சம் எள்ளு வாங்கி வா" என்றார். அந்தப் பெண்மணியும் வீடு வீடாக ஏறி இறங்கினார். அந்த முழு நகரத்தையும் வலம் வந்தும் அதுபோன்ற ஒரு வீடு இருக்கவில்லை. அதுபோல் ஒரு வீடும் இருக்காது என்பதை புரிந்துகொண்டாள். அதன்பின், தன் புதல்வனின் உடலிற்கு செய்ய வேண்டிய காரியங்களை சரிவரச் செய்து முடித்துவிட்டு, மீண்டும் வந்து புத்தரின் முன்னிலையில் அவரது சிஷ்யராக அமர்ந்து விட்டார். பின் தன் வாழ்நாள் முழுவதும் அவர் புத்தரை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை.

மரணம் என்பது எதிர்பாராத நிகழ்வல்ல. இதை அவ்வப்போது உங்களுக்கு ஞாபகப் படுத்திக் கொள்வதோடு, உங்கள் குழந்தைகளுக்கும் இளவயதிலேயே இப்படி ஒன்று இருப்பதை தெரியப்படுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தில் தான் நடக்க வேண்டும் என்றில்லை. தினமும் யாரோ ஒருவருக்கோ, பலருக்கோ இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. 'மரணம் என்பது எதிர்பாராத பேரிடர் அல்ல. அது வாழ்வின் ஒரு அம்சம்' என்பதை உங்கள் குழந்தைகளும் அறியச் செய்யுங்கள். உங்கள் மரணத்தைப் பற்றிக் கூட அவர்களிடம் பேசுங்கள். அவர்களின் பெற்றோரும் ஒருநாள் இறந்திடுவர் என்பதை அவர்கள் அறிந்திருப்பது அவர்களுக்கு நல்லது. இருபத்தியைந்து ஆண்டுகள் கழித்தில்லாமல், திடீரென்று நீங்கள் நாளையே இறந்துவிட்டாலும், அந்நிலையை சமாளிக்க உங்கள் குழந்தை தயாராக இருக்கும். நாளை காலையே நீங்கள் மறைந்துவிட்டாலும், உங்கள் குழந்தைகள் தெளிவாக, நிதானமாக தங்கள் வாழ்வை நடத்திக் கொள்ள முடியவேண்டும். 'மரணம்' என்ற ஒன்றை அவர்கள் அறிந்திருக்காவிடில், இது அவர்களுக்கு சாத்தியமில்லை.

இது யார் இறந்தாலும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், உங்கள் உணர்வுகளை எல்லாம் நீங்கள் மூட்டை கட்டி வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. அந்த இழப்பு நிச்சயம் இருக்கும் தான், ஆனால் அது முற்றிலுமாய் உங்களை உடைத்திட, அழித்திடத் தேவையில்லையே! உங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் விழிப்புணர்வோடு, எப்படிக் கையாள்வது என்று நீங்கள் அறிந்திருந்தால், அவை ஒவ்வொன்றுமே உங்கள் வாழ்வின் அனுபவத்தை மேம்படுத்தம். உங்களுக்கு மிகமிக நெருக்கமானவரை இழப்பது என்பது மிகப் பெரிய விலை. இவ்வளவு பெரிய விலை கொடுத்திருக்கிறீர்கள், அதில் இருந்து பயன் பெற வேண்டாமா? உங்கள் தடைகளைத் தாண்டி வளர்வதற்கும், பக்குவமடைவதற்கும் அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. அதிலிருந்து நீங்கள் பயன்பெற வேண்டும். விழிப்புணர்வோடு அணுகினால், அதிலிருந்து நீங்கள் மிக அதிகமாய் பயன் பெறுவீர்கள்.