“Time to be happy is now…” இது என்ன நர்சரி ரைம்ஸா? இந்த பாடலை பாடிக் கொண்டே ஓடும் கூட்டம் எதற்காக ஓடுகிறது? இவர்கள் என்ன பள்ளிக் குழந்தைகளா? என்றால் இல்லை.

20 வயது இளைஞர்களின் துடிப்பும் 60 வயது முதியவர்களின் அசாத்திய முயற்சியும் கலந்த ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் சென்னை மாரத்தான் ஓட்டம்!

எதுக்குப்பா ஓடறீங்க என்றால் ஒரு பதிலும் இல்லை! யாரும் பேசக் கூடாது என்ற குறிப்பு வேறு!

மூச்சு வாங்கி வேர்த்துக் கொட்டும் போதிலும் சிரித்த முகம்! குழந்தைகள் போல ஆனந்தமாக இருந்தாலும் பயிற்சியில் மட்டும் இத்தனை தீவிரம்! இவ்வளவு தீவிரமாக எதற்காக பயிற்சி செய்கிறார்கள்?

அடுத்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள போகிறார்களா என்ன?

இவர்கள் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளப் போவதில்லை! இவர்களுக்கு எந்த பரிசும் தேவையில்லை. தாங்கள் ஒரு முறை கூட பார்த்திராத ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை பெறுவதற்காக சென்னை-ஈஷா இப்போது சென்னை மாரத்தான் ஓட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது

சென்னையில் வரும் டிசம்பர் 2ம் தேதி ஐஐடி மைதானத்தில் சென்னை மாரத்தான் ஓட்டம் நடக்க இருக்கிறது. சுமார் 42 கிமீ கொண்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள உடலை தயார் செய்ய தேவையிருக்கிறது. சிலர் அதில் பாதி தூரம் 21 கிமீ மட்டும் ஓட தன் பெயரை பதிவு செய்திருக்கின்றனர். சிலர் 10 கிமீ மட்டும் ஓட இருக்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷாவின் செயல்கள் எல்லாம் சத்குருவின் அருளில் தானாகவே நடந்துவிடும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த பல தன்னார்வத் தொண்டர்கள் கவலையின்றி 42 கிமீ என்றால் என்னவென்றே தெரியாமல் தன் பெயரை 42 கிமீ தூர ஓட்டத்தில் பதிவு செய்துள்ளனர். "நானும் ஓடறேன்" என்று பெயரை பதிவு செய்து விட்டு 42 கிமீ என்றால் எவ்வளவு தூரம் என்று பிறகுதான் யோசிக்கிறார்கள்.

மொத்தத்தில் சென்னையில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு திருவிழா தான்!

ஈஷா-சென்னை மாரத்தான்... அதன் பின்புலம் என்ன?

தடகள வீரர்களுக்கு மட்டுமே என்றிருந்த மாரத்தான் ஓட்டம் கொண்டாட்டத்திற்காக ஓடுவோருக்காகவும், சமூக நலனில் அக்கறை கொண்டோருக்காகவுமாக இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது தான் இவ்வகை ஓட்டங்களின் தனிச்சிறப்பு.

கடந்த 4 வருடங்களாக ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், கிராம குழந்தைகளின் கல்வி நலனிற்காக மாரத்தான் ஓட்டங்களில் பங்கெடுத்து வருகின்றனர். இவர்களின் ஓட்டத்தின் மூலம் 30 வகுப்பறைகளும், 4 கழிப்பறை கட்டிடங்களும் 7 ஈஷா வித்யா பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுவரை மும்பை, ஹைதராபாத், பெங்களூருவை சேர்ந்த ஈஷாவினர் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தனர். இவ்வருடம் நம் சென்னை-ஈஷாவும் இந்த பந்தயத்தில் களம் இறங்குகின்றது. இவ்வருட இலக்கு ஒன்றரை கோடி ரூபாய்.

ஆமாங்க! ஓடி ஓடி உழைக்க காத்திருக்கிறது சென்னை-ஈஷா!

யார் இதில் பங்கேற்கலாம்? நீங்கள் எதற்காக ஓட வேண்டும்?

யார் வேண்டுமானாலும் பங்கெடுக்க முடியும். 42, 21 அல்லது 10 கிமீ என்று உங்கள் இலக்கை நீங்கள் நிர்ணயித்துக் கொள்ள முடியும். ஓட முடியவில்லையா? நீங்கள் நடக்கவும் முடியும். சில நாட்கள் காலார நடந்துப் பழகினால், ஓடி ஓடி நடக்கலாம். வெறுமனே உங்கள் பெயரை பதிவு செய்துக் கொண்டு, கட்டணம் செலுத்துவதால் மட்டுமே நீங்கள் ஈஷா வித்யாவிற்கு தேவையான நிதியை திரட்ட இயலாது. நீங்கள் ஓடுவதன் மூலம் மட்டுமே நிதி திரட்ட முடியும்.

நீங்கள் ஓடுவதன் மூலம் பள்ளிகளுக்கான நிதி திரட்டப்படுவது மட்டுமல்ல, சமுதாயத்தில் இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். நிறுவனங்கள் ஓடுபவர்களுக்கான செலவையும் ஏற்றுக் கொண்டு உதவ முடியும்.

ஈஷா வித்யாவின் இந்த சாதனை ஓட்டத்திற்கு துணை நிற்பவர்கள் சாட்ஷாத் தன்னார்வத் தொண்டர்களே! அதனால் இதன் மூலம் திரட்டப்படும் நிதி அனைத்தும் முழுமையாக குழுந்தைகளைச் சென்றடையும்.

ஈஷா வித்யா சார்பாக சென்னை மாரத்தானில் ஓட விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 17ம் தேதிக்குள் பதிவு செய்துக் கொள்ளலாம்.

வாருங்கள் நம் எதிர்கால சந்ததியை மலரச் செய்வோம்!

தொலைபேசி எண்: 94442 67047/ 99620 56784

இ-மெயில்: chn.marathon@ishavidhya.org

சென்னை மாரத்தான்