இந்த வார சத்குரு ஸ்பாட்டில், வாழ்க்கையையே மாற்றவல்ல விளையாட்டைப் பற்றியும், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சிறப்பாகக் கையாளுவதற்கான ஆற்றலை விளையாட்டு எப்படி வழங்குகிறது என்பதையும் சத்குரு நம்மோடு பகிர்ந்துள்ளார். அதோடு கிராமோத்சவத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்போது, விளையாட்டுத்தனம் இல்லாவிட்டால் தனிமனிதராகவும் ஒரு தேசமாகவும் நாம் முன்னேற வாய்ப்பில்லை என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

ஈஷா கிராமோத்சவத்தின் பன்னிரண்டு ஆண்டுகளில், விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், சிந்து என்று பல விளையாட்டு வீரர்கள், விளையாட்டின் முக்கியத்துவத்தையும், அது தங்கள் வாழ்க்கையில் ஏற்புடுத்தியுள்ள தாக்கத்தையும் பற்றி நம்மோடு பகிர்ந்துள்ளனர். இம்முறை மத்திய அமைச்சர்
ரதோர் அவர்களும், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களும் நம்மோடு இணைந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். இதுதான் விளையாட்டின் தன்மை. தங்கள் விளையாட்டை நேசிக்கும் எந்தவொரு விளையாட்டு வீரரின் அனுபவமும் இதுதான். ஒரு விளையாட்டை விளையாடுவதிலுள்ள ஆனந்தம், ஒவ்வொரு மனிதரும் ருசிக்க வேண்டிய ஒன்று. பல வருடங்களுக்கு முன்பு, 14-நாள் ஈஷா யோகா நிகழ்ச்சியை முதன்முதலாக வடிவமைத்தபோது அதனை ஒரு விளையாட்டின் வடிவில் அமைத்தோம். முதல் நாளில் விளையாட்டின் விதிகளை அவர்களுக்குள் பதித்தோம். ஒரு விளையாட்டை நிர்ணயிப்பது அதன் விதிமுறைகளே. டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட் என்று, என்ன விளையாட்டாக இருந்தாலும் அவற்றின் விதிமுறைகள்தாம் அவற்றை உருவாக்குகின்றன. விதிமுறைகளை வடிவமைப்பது நாம்தான் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும், விளையாட்டை நீங்கள் சிறப்பாக விளையாட விரும்பினால், அதனை கடவுளின் கட்டளைகளைப் போல பின்பற்ற வேண்டும்.

விதிமுறைகளை மீறிவிட்டால் விளையாட்டையே நீங்கள் அழித்துவிடுகிறீர்கள். இதை ஒவ்வொரு இந்தியனும் அறிந்துகொள்ள வேண்டும். நாம் தெருவில் வாகனம் ஓட்டிச்சென்றாலும் சரி, நாம் தொழில் நடத்தினாலும் சரி, நாம் என்ன செய்துகொண்டு இருந்தாலும் சரி, விதிகளை மீறும்போது இந்த தேசத்தையே அழிக்கின்றோம். அற்புதமாக இயங்கியுள்ள தேசங்கள், அவர்களுக்கு மட்டும் பயன்தரும் விதத்தில் இயங்கியிருந்தாலும் கூட, விதிமுறைகளை நிலைநிறுத்திய தேசங்களே சிறப்பாக முன்னேறியுள்ளன - அப்படியானால், அனைவரும் அங்கு சட்டத்தின்படி நடந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் விதிகள் குறித்து நாம் இன்னும் சற்று தெளிவில்லாமலே இருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, "நான் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமா, வேண்டாமா?" என்ற கேள்வி, பலர் மனங்களில் இன்னும் இருக்கிறது. விதிமுறைகள் இல்லாவிட்டால் விளையாட்டு இல்லை. அரை மனதோடு நீங்கள் அலுவலகம் செல்லலாம், ஆனால் அரை மனதோடு விளையாட முடியாது. விளையாட்டிற்குள் உங்களை நீங்கள் முழுமையாக வீச வேண்டும் - இல்லாவிட்டால் விளையாட்டே இல்லை.

சுவாமி விவேகானந்தர் விளையாட்டு குறித்து கூறுகையில், "பகவத் கீதை படிப்பதைக் காட்டிலும், கால்ப்பந்து விளையாடுவது மூலம் சொர்க்கத்திற்கு இன்னும் நெருக்கமாகச் செல்வீர்கள்," என்றார். வழிபாட்டின்போது நீங்கள் வேறு பல விஷயங்களைச் செய்யவும் சிந்திக்கவும் முடியும். ஆனால் ஒரு பந்தை உதைக்கும்போது நீங்கள் உதைக்க மட்டுமே செய்வீர்கள், இல்லாவிட்டால் நீங்கள் விரும்பும் இடத்திற்கு அது போகாது. முழுமையான ஈடுபாடின்றி உங்களால் வெற்றி காண முடியாது என்பதை விளையாட்டு உங்களுக்கு உணர்த்துகிறது. உங்கள் வாழ்க்கையே அதை சார்ந்திருப்பது போல நீங்கள் விளையாட வேண்டும். சென்ற கால்ப்பந்து உலகக்கோப்பை விளையாட்டை 320 கோடி மக்கள் கண்டுகளித்தார்கள் என்று கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட உலகின் பாதி, அல்லது இளைஞர் சமூகம் முழுவதும் என்று சொல்லலாம். பதினோரு பேர் பந்தை ஒரு திசையில் உதைப்பதையும், இன்னொரு பதினோரு பேர் பந்தை எதிர்திசையில் உதைப்பதையும் 320 கோடி மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நீங்கள் "இதைப் பார்த்து என்ன ஆகப்போகிறது?" என்ற தத்துவரீதியான கேள்வியை முன் வைக்கலாம். அடிப்படையாக, நாம் விளையாட்டைப் பார்ப்பது பந்திற்காக அல்ல, அவர்களின் திறமைகளுக்காகவும் அல்ல, யாரோ ஒருவர் தங்கள் வாழ்க்கையே அதை சார்ந்திருப்பது போல அதை உதைக்கிறார்கள் என்பதால் தான் நாம் பார்க்கின்றோம். அவர்கள் ஈடுபாட்டின் தீவிரம் தான் உலகம் முழுவதையும் எழுந்து உட்கார்ந்து காண வைக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எல்லைகளைத் தாண்டி மனிதனை வளரவைப்பது இந்தத் தீவிரம் தான். ஆன்மீக செயல்முறை முழுவதுமே, இதுவரை நீங்கள் அறியாத ஒரு பரிமாணத்தை உணர்வதற்காக, உங்கள் எல்லைகளை எப்படியாவது கடந்திடுவதற்காகத் தான். விளையாட்டில் மனிதர்கள் இப்படி தடைகளைத் தாண்டும் கணங்கள் இருக்கின்றன. இது உலகக்கோப்பை, ஒலிம்பிக், அல்லது சர்வதேச விளையாட்டுகளில் மட்டுமல்ல, இங்கே கிராமோத்சவத்திலும் நடக்கமுடியும். தேவையான தீவிரத்துடன் விளையாடுவோர், தங்கள் தற்போதைய எல்லைகளைத் தகர்த்தெறிய முடியும். இந்த சாத்தியத்தைத்தான் விளையாட்டு உங்களுக்கு வழங்குகிறது. வெற்றிபெறும் விழைவில்லாமல் விளையாட்டில்லை. ஆனால் நீங்கள் மட்டுமே வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினால் விளையாட்டே இல்லை. வாழ்க்கையின் எந்தத்துறையாக இருந்தாலும், இது ஒவ்வொரு மனிதரும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை. ஜெயித்திட விரும்பினால்தான் நீங்கள் வெற்றிகரமாக இருக்கமுடியும், ஆனால் தோற்றாலும் அது உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது.

ஈஷா கிராமோத்சவத்தின் இந்த பன்னிரண்டு ஆண்டுப் பயணம் அற்புதமாக இருந்துள்ளது. தொடர்ந்து சிலகாலமாக விளையாடும் மனிதர்களை நீங்கள் கவனித்தால், வாழ்க்கை குறித்தும் மற்ற மனிதர்கள் குறித்தும் அவர்களுடைய கண்ணோட்டம், ஜாதி, மதம், இனம் என்று எல்லாவற்றையும் கடந்து பரிணமித்திருக்கும். உங்கள் வாழ்க்கைக்குள் விளையாட்டுத்தனத்தைக் கொண்டு வாருங்கள். பெரிய விளையாட்டு உபகரணங்கள் தேவையில்லை, ஒரு பந்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தை, மனைவி, கணவனிடம் ஒரு பந்தை வீசுங்கள். பந்து இல்லாவிட்டால் ஒரு உருளைக்கிழங்கையோ வேறு பொருளையோ வீசுங்கள். இது அபத்தமானது என்று நினைக்காதீர்கள். விளையாட்டுத்தனத்துடன் இருங்கள், இல்லாவிட்டால் வாழ்க்கையில் கொண்டாட்டம் இருக்காது. அப்படிச் செய்யும்போது நீங்கள் விளையாட்டு வீரராக இல்லாமல் இருந்தாலும், விளையாட்டின் உற்சாகத்துடன் இருப்பீர்கள், அதுதான் முக்கியம். நாம் விளையாட்டுத்தனம் பொங்கும் ஒரு தேசமாக இருப்பது மிகவும் முக்கியமானது. இந்தியா தனது விளையாட்டுத்தனத்தைத் தொலைத்திருப்பதற்கு ஒரு காரணம், முன்பு அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தேசமாக, எட்டிலிருந்து பத்து தலைமுறைகளாக மிக மோசமாக ஏழ்மையில் நாம் இருந்ததால், விளையாட்டுத்தனம் இருக்கமுடியாத அளவு பிழைப்பே நோக்கமாக மாறிவிட்டோம். காரணமே இல்லாமல் மக்கள் ஆடிப்பாடி ஆனந்தமாய் வாழ்ந்த பூமியிது. விவசாய சமூகமாக இருந்த இந்த பூமியில், உழுவது, விதைப்பது, களையெடுப்பது என்று வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கென ஒரு ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் இருந்தது.

கொண்டாடுவதற்கு நமக்கு எந்தக் காரணமும் தேவைப்பட்டதில்லை. நம் கலாச்சாரத்தில், வருடத்தின் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமாக இருந்தது. வேலையையும் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளையும் நாம் கொண்டாட்டமாக்கினோம். இது விளையாட்டுத்தனம் மிகுந்த தேசம். இப்போது பொருளாதார செழிப்பு மெதுவாக அதிகரித்து வருகிறது. விளையாட்டுத்தனத்தை நாம் மீண்டும் கொண்டுவருவதற்கான நேரமிது. அடுத்த ஐந்திலிருந்து பத்து வருடங்களில், பொருளாதாரரீதியாக, நாம் நம் தற்போதைய நிலையிலிருந்து முன்னேற்றமடைவோம். ஆனால் மெதுவாக, ஒரு மனிதரை நடனமாட வைக்கவேண்டும் என்றால், அவரை குடிக்க வைக்கவேண்டும் என்ற நிலைக்கு நாம் வந்துகொண்டு இருக்கிறோம். இதைத்தான் ஈஷா மாற்ற முயற்சிக்கிறது. காரணமில்லாமலே ஆடிப்பாடும் நிலைக்கு உங்களைக் கொண்டுவர விரும்புகிறோம். பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நம் தேசம் முழுவதும் இப்படி ஆகிவிட வேண்டும், காரணமே இல்லாமல் ஆடிப்பாடி சிரித்து மகிழ்ந்து உங்களால் கொண்டாட முடிய வேண்டும். கொண்டாடுவதற்கு வாழ்க்கையே போதிய காரணத்தை வழங்குகிறது. இதுதான் ஈஷா கிராமோத்சவத்தின் நோக்கம். அதனால்தான் கிராமிய வாழ்க்கையின் மற்ற அனைத்து அம்சங்களையும் இதில் சேர்த்துள்ளோம். ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு கலைவடிவங்களும் பலவிதமான கொண்டாட்டங்களும் இருந்தது. அவற்றில் சிலவற்றையாவது கிராமங்களில் உயிருடன் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். சாதாரண மக்கள் இவற்றைத் தொலைத்துவிட்டால் அவர்களின் இதயத்தையே தொலைத்துவிடுவார்கள். இதயமில்லாத ஒரு சமூகம் அதிக தூரம் போகாது. ஒரு சமூகத்தை உந்தித்தள்ளி சிறப்பான ஓர் இடத்திற்கு கொண்டுசேர்க்க பெரிய இதயம் தேவை.

நம் சமூகத்தில் இருந்து வந்த இசை, நடனம் மற்றும் வேறு பல திறமைகளை நாம் தொலைத்துவிட்டால், நம் கலாச்சாரத்தின் இதயத்துடிப்பையே நாம் தொலைத்துவிடுவோம். இவற்றை நாம் மீண்டும் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. குறிப்பாக, கிராமங்களில் இவற்றை உயிர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் விவசாயம் செய்வது இதயத்தை நொறுக்கும் வேலை. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இசை, நடனம் மற்றும் கொண்டாட்டத்துடன், பூமியின்மீது முழுமையான ஈடுபாட்டுணர்வுடன் இருந்தால் மட்டுமே ஒருவரால் விவசாயம் செய்யமுடியும். இல்லாவிட்டால் அனைவரும் நகரத்திற்கு இடம் பெயர விரும்புவார்கள். அனைவரும் நகரங்களுக்கு நகர்ந்துவிட்டால், சூப்பர்மார்க்கெட்டுகளில் நாம் வாங்குவதற்கு எதுவும் இருக்காது. இன்று குளிர்சாதன வசதி கொண்ட இந்த பல்பொருள் அங்காடிகள் முழுவதும் பொருட்கள் நிரம்பி வழிவதற்கு, பாதி பட்டினியாக தற்கொலை செய்யத் தூண்டும் நிலையில் இருக்கும் விவசாயிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் வாழ்வை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. அவர்களின் பொருளாதார நிலையை நம்மால் ஒரே நாளில் மாற்ற முடியாவிட்டாலும், அவர்களை நம்மால் ஆடிப்பாடி விளையாட வைக்கவும், ஒரு பந்தை எறிந்து விளையாட்டுத்தனத்துடன் எதையாவது செய்ய வைக்கவும் முடியும்.

நாம் விளையாட்டுத்தனத்துடன் இருப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. நம் சமூகத்தை சற்று விளையாட்டுத்தனமானதாக மாற்றுவதன் மூலம், வாழ்க்கையின் பல சங்கடங்களையும், தேசத்தின் பல்வேறு பயங்கரமான சூழ்நிலைகளையும் சுலபமாக சரிசெய்துவிட முடியும். சாதாரணமான வாழ்க்கை செயல்முறையே, விளையாட்டுத்தனம் இல்லாவிட்டால், பாரமாகவும் துயரமாகவும் மாறிவிடலாம். உங்கள் வீடுகளிலும் வாழ்க்கையிலும் கொஞ்சம் விளையாட்டுத்தனத்தை கொண்டுவர நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியெடுக்க வேண்டும். கிராமிய வாழ்க்கைக்குள் இந்த விளையாட்டுத்தனத்தைக் கொண்டுவருவதே கிராமோத்சவத்தின் நோக்கம். பல்வேறு காரணங்களால், கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படைகளை, ஒரு தேசமாக நம்மால் கிராமிய மக்களுக்கு வழங்க முடியவில்லை. குறைந்தபட்சம் விளையாட்டையும் ஆட்டம்பாட்டத்தையுமாவது நாம் அவர்கள் வாழ்க்கைக்குள் கொண்டுவர முடியும். இப்போது கிராமோத்சவம் மூலம் 4,500 கிராமங்களை அடைந்திருப்பதை மக்கள் பெரிய விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே 53,000 கிராமங்கள் உள்ளன. இப்போது ஆந்திராவில் அரசின் அபாரமான ஆதரவுடன் நாம் சில மாவட்டங்களுக்குச் செல்கிறோம். புதுச்சேரிக்கும் நிச்சயம் தீப்பற்ற வைப்போம் என்று நம்புகிறேன்.

இன்னும் அதிக மக்களுக்கு கிராமோத்சவத்தை கொண்டு சேர்க்க, நீங்கள் அனைவரும் உங்களால் முடிந்த விதங்களில் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாம் மீண்டும் விளையாட்டுத்தனம் மிகுந்த தேசமாக மாறிடுவோம்.

Love & Grace


ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் - துப்பாக்கிச் சுடுதலில் முன்னாள் வீரர், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்

கிரண் பேடி - ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, முன்னாள் டென்னிஸ் வீராங்கனை, சமூக ஆர்வலர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்