சத்குரு:

சிவன், ராமன், கிருஷ்ணன், என்று நாம் வழிபடுவோர் அனைவரும் இந்த பூமியில் ஒரு காலத்தில் நடமாடியவர்களே. பெரும்பாலான மனிதர்கள் சந்திப்பதை விட அதிகமான சோதனைகளையும் அசம்பாவிதங்களையும் அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொண்டனர். ஆனால் அவர்கள் மீது வாழ்க்கை எவ்வளவு சவால்களை வீசினாலும் அவர்கள் தங்கள் உள்தன்மையிலிருந்து பிறழாமல் வாழ்ந்தார்கள். அதனால்தான் நாம் அவர்களை வழிபடுகிறோம். எதுவும் அவர்களை தொடாத விதத்தில் அவர்கள் இருந்ததால் அவர்களை வழிபடுகிறோம். பல விதங்களில் ஒரு நதியும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. எப்படிப்பட்ட மக்கள் அதனைத் தொட்டாலும், அதன் ஓடும் தன்மையால் அது எப்போதும் தூய்மை மாறாமல் இருக்கிறது.

எதை நாம் நீர், உணவு, மண் என்று சொல்கிறோமோ, அவை வெறும் ஜடப்பொருட்கள் அல்ல. நம் நதிகளை வெறும் பூகோளரீதியான நிகழ்வுகளாக நாம் பார்த்ததில்லை. உயிரை உருவாக்கும் மூலப்பொருளாக பார்த்தோம்.

இந்த கலாச்சாரத்தில் நதிகளை வெறும் நீர்நிலைகளாக நாம் பார்க்கவில்லை. அவற்றை நமக்கு வாழ்வளிக்கும் தெய்வங்களாக, தேவியர்களாக பாவித்தோம். தர்க்கத்தின் எல்லைகளுக்குள் சிக்கியிருக்கும் சிந்திக்கும் மனதிற்கு, இது முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் தோன்றலாம். "ஒரு நதி வெறும் நதி தானே, அது எப்படி ஒரு தேவியாக இருக்கமுடியும்?" இப்படிச் சொல்லும் ஒரு மனிதரை மூன்று நாட்கள் தண்ணீர் கொடுக்காமல் ஒரு அறைக்குள் பூட்டிவைத்து, அதற்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொடுத்தால், அதைக் கண்டதும் கைகூப்பி வணங்குவார்கள். நதியைக் கண்டு அல்ல, ஒரு கிளாஸ் தண்ணீரைக் கண்டே வணங்குவார்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எதை நாம் நீர், உணவு, மண் என்று சொல்கிறோமோ, அவை வெறும் ஜடப்பொருட்கள் அல்ல. நம் நதிகளை வெறும் பூகோளரீதியான நிகழ்வுகளாக நாம் பார்த்ததில்லை. உயிரை உருவாக்கும் மூலப்பொருளாக பார்த்தோம். ஏனென்றால், நம் உடலில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பது தண்ணீர்தான். உயிர்வாழ்வதைத் தேடும் போதெல்லாம், நாம் ஒரு துளி நீரையே முதலில் தேடுகிறோம்!

உலகில் மருத்துவ வசதிகளையும் கட்டமைப்புகளையும் இன்று நாம் உருவாக்கி வரும் வேகத்தைப் பார்த்தால், பூமியில் ஒருவர் விடாமல் எல்லோரும் ஒருநாள் மிக மோசமாக நோய்வாய்ப்படுவதை எதிர்பார்ப்பது போலவே தோன்றுகிறது. ஒரு காலத்தில் ஊர் முழுவதற்கும் ஒரே டாக்டர் இருப்பார், அதுவே போதுமானதாகவும் இருக்கும். இன்று ஒவ்வொரு தெருவிலும் ஐந்து டாக்டர்கள் இருக்கிறார்கள், ஆனால் அதுவும் போதவில்லை.

நாம் எப்படி வாழ்கிறோம் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. எப்படி வாழ்வது என்பதை நாம் மறக்கும்போது, நம் உயிரை உருவாக்கும் மூலப்பொருளையே நாம் மதிக்காதபோது - நாம் நடமாடும் பூமி, நாம் சுவாசிக்கும் காற்று, நாம் பருகும் தண்ணீர், நம்மை தாங்கியிருக்கும் ஆகாயம் - இவற்றின்மீது மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போகும்போது - அவை நமக்குள் எப்படி நடந்துகொள்கின்றன என்பது முற்றிலும் மாறுபடுகிறது.

நீங்கள் நீரால் ஆன உடல். இந்த பூமியில் நாம் மிக நெருக்கமாக உறவு பாராட்டும் நீர்நிலைகள் நதிகளே. ஆனால், சில ஆண்டுகளிலேயே நம் நதிகள் பெரிய அளவில் வற்றிவிட்டன. பலகோடி ஆண்டுகளாக வருடம் முழுக்க வற்றாமல் ஓடிய நதிகள், இரண்டே தலைமுறைகளில் பருவமழையின்போது மட்டுமே ஓடும் நிலைக்கு வந்துவிட்டன. இந்த பூமியை நாம் பாலைவனமாக மாற்றி வருகிறோம். ஆயிரமாயிரம் வருடங்களாக, இந்நதிகள் நம்மை அரவணைத்து ஊட்டி வளர்த்துள்ளன. நதிகளை நாம் அரவணைத்து ஊட்டி வளர்க்கும் காலம் வந்துவிட்டது.

நீர் இருப்பதால் மரங்கள் இருக்கின்றன என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படியல்ல, மரங்கள் இருப்பதால்தான் நீர் இருக்கிறது. காடுகள் இல்லாவிட்டால் சிறிது காலத்திற்குப் பிறகு நதிகளும் இல்லாமல் போய்விடும்.

நீர் இருப்பதால் மரங்கள் இருக்கின்றன என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படியல்ல, மரங்கள் இருப்பதால்தான் நீர் இருக்கிறது. காடுகள் இல்லாவிட்டால் சிறிது காலத்திற்குப் பிறகு நதிகளும் இல்லாமல் போய்விடும். ஆனால், இந்தியாவின் பெரும்பகுதி இப்போது விவசாயம் செய்யப்படும் நிலமாக இருக்கிறது, இவற்றை நாம் காடுகளாக மாற்றமுடியாது. அதனால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு இதுதான்: நதி நெடுகிலும், இருபுறமும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கேனும் மரங்கள் வைக்கவேண்டும், கிளை நதிகளுக்கு இருபுறமும் அரை கிலோமீட்டர் தூரத்திற்கேனும் மரங்கள் வைக்கவேண்டும். அரசுக்கு சொந்தமான நிலங்களில் உடனடியாக மரங்கள் நட்டு காடு வளர்க்கவேண்டும். விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில், சாதாரண விவசாயத்திலிருந்து வேளாண் காடுகள் அமைப்பிற்கு மாறவேண்டும். தனியார் நிலங்களில், விவசாயிகள் செய்யும் வேளாண் காடுகளுக்கும் அரசாங்கம் மானியம் வழங்கவேண்டும். 5 ஆண்டுகளில் வருவாய் இரட்டிப்பாகும் என்பதால், இது விவசாயிக்கும் இலாபகரமாக இருக்கும்.

நம் நதிநீரை முழுவதுமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்பதில் இருந்து, நதிகளுக்கு எப்படி புத்துயிரூட்டுவது என்று நாம் சிந்திக்கவேண்டும். நதிகளை காப்பதற்கான அவசரத் தேவை தற்சமயம் இருப்பது குறித்த விழிப்புணர்வை நாம் இந்த தேசத்தில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஏற்படுத்தவேண்டும். தேசம் முழுவதும் நாம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுவான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி, அதனை அமல்படுத்த ஆரம்பித்தால், இந்த தேசத்தின் எதிர்காலத்திற்கும் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்விற்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படியாக அமையும்.