அடைமழை நின்று இயற்கை வழிவிட்ட அற்புதத்தையும் குறுகிய சாலையில் நெரிசல் ஏற்படுத்திய ரிக்ஷா பயணத்தையும் இந்த வாரக் கட்டுரையில் விவரிக்கும் திருமதி மஹேஷ்வரி, காசியின் கோவில்களில் தான் உணர்ந்த சக்தி அதிர்வுகளையும் அழகாக விளக்குகிறார்.

காசி - உண்மையைத் தேடி... பகுதி 2

மஹேஷ்வரி:

"நாம் தங்கப் போகும் ஹோட்டல் வந்து விட்டது பஸ்ஸிலிருந்து இறங்கலாம்" என்ற குரல் கேட்டதும், ஒவ்வொருவராக இறங்கினோம். காசியில் காலடி வைத்ததும் ஒரு விதமான நிம்மதி. காசியில் கோவில்கள் மட்டுமல்ல. தெரு வீதிகள் கூட அதிர்வுகள் மிக்கதாய் இருந்தது. அந்த நகரமே சிவமயமாக இருந்தது. அந்த நகரத்தில் இருப்பதே சிவனின் மடியில் இருப்பது போன்ற உணர்வு.

வட இந்தியப் பயணம் என்றாலே, தென்னிந்தியர்களின் மிகப் பெரிய பிரச்சனை உணவுதான். ஆனால், மழைக்கு சூடாக ஈஷா ஸ்பெஷல் சஞ்சீவினி கஞ்சியும் தென்னிந்திய உணவு வகைகளும் காசிக்கு போன பின்பும் கிடைத்ததென்றால், அந்த ஆனந்தத்தை சொல்லவும் வேண்டுமா! யோகப் பயிற்சியை முடித்து, சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு கிளம்பினோம்.

நான்கு நாட்களாக கொட்டித்தீர்த்த இந்த அடைமழை நின்று மேகம் சற்று விலகி இளம் வெயில் அடித்தது. இந்த அற்புதத்தை எவராலும் நம்ப முடியவில்லை. என் குருவுடன் இருக்கும்போது எதற்கும் கவலைப்பட தேவையில்லை. அவர் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் என்னுள் இன்னும் மேலோங்கியது. எவர் முகத்திலும் பயணக் களைப்பு இல்லை, அனைவர் முகத்திலும் புத்துணர்வு.

காசி விஸ்வநாதரை மனதில் எண்ணிக் கொண்டு அனைவரும் "ஷம்போ" என்ற உச்சாடனத்தை துவங்கினோம். கோவிலுக்கு சற்று முன்பு வரை பஸ் சென்று நின்றுவிட்டது. இதற்கு மேல் பஸ் செல்லாது, இந்த குறுகிய சாலையில் ரிக்ஷாவில்தான் கோவிலுக்கு செல்ல முடியும்," என்றனர்.

1

ரிக்ஷாவில் செல்வது புதிய அனுபவமாகவே இருந்தது. ரிக்ஷாவிலும் ஷம்போ உச்சாடனம் தொடர்ந்தது. கோவில் சென்று காசி விஸ்வநாதரை தரிசித்தோம். பிறகு அந்தப் பிரகாரத்தில் அனைவரும் தியானத்தில் அமர்ந்தோம். அந்த கோவிலின் அதிர்வுகள் நம்மை வேறுவிதமான ஒரு சக்திநிலைக்கு எடுத்துச் செல்கிறது. உள்ளே நுழையும்போது இருந்த 'நான்' வேறு; வெளியே வரும்போது இருந்த 'நான்' வேறு," என்பது போல என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

3

இந்தக் கோவிலின் அதிர்வுகள் நம்மை தியான நிலைக்கு எடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் நம் பிறப்பின் அடிப்படையையே உலுக்குகிறது. இந்தப் பிறவி எதற்கு என்ற கேள்வி என்னுள் மிகவும் ஆழமாக எழுந்தது. அங்கிருந்து பிறகு காசி விசாலாக்ஷி கோவிலுக்குச் சென்றோம். சுயம்புவாக எழுந்த காசி விசாலாக்ஷியின் உருவம் பின்னாலும், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த விசாலாஷியின் முன்னாலும் காட்சி அளிக்கும் தேவியின் முகம் சிறிதாகவும் மிகவும் அழகாகவும் இருந்தது.

விசாலாக்ஷி என்றால் விசாலமான கண்கள் என்று பொருள். விசாலமான இந்த தேவியின் கண்களில் உள்ள கடாக்ஷம் எங்கள் மீதும் விழுந்தது, அங்கேயும் தியானத்தில் அமர்ந்தோம். அங்கிருக்கும் சக்திநிலை பறப்பது போன்ற ஒரு உணர்வுக்கும் நம்மை எடுத்துச் சென்றது. ஆனாலும் ஒரு பாதுகாப்பு உணர்வு அங்கிருந்தது. நமக்காக தேவி இருப்பதுபோல் இருந்தது.

2

அடுத்ததாக அன்னப்பூரணி தேவியை தரிசித்தோம். அன்னப்பூரணி நமக்கு அள்ளி அள்ளி கொடுப்பவர். நாம் கேட்டதெல்லாம் கொடுப்பவர் என்று சிலர் பேசிக் கொண்டனர். அங்கே ஒரு குபேரர் கோவிலும் இருந்தது. அனைவரும் "இங்கிருந்து கயிறு கட்டிக் கொண்டு சென்றால் வீட்டில் பணம் கொட்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அன்னப்பூரணி தேவி பிரகாரத்திலிருந்து அரிசி வாங்கி வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் பொங்கும் என்றும் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அதையும் இதையும் வாங்குவதற்கு பலர் நின்றுவிட்டனர்.

இப்பொது மீண்டும் ரிக்ஷா மூலம் திரும்ப வேண்டும். மொத்தம் 440 பேர். அதாவது ரிக்ஷாவிற்கு இருவர் என்ற விகிதத்தில் 220 ரிக்ஷாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும். குறுகிய சாலையில் எங்கள் குழுவாலேயே நெரிசல் ஏற்பட்டது. சிலர் சீக்கிரமாக, சிலர் தாமதமாக வந்ததால் சிறிது குழப்பம் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் வழி தெரியாமல் திணரக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வீதியின் ஓரத்திலும் ஒரு ஸ்வாமி நின்று கொண்டிருந்தார். இந்தக் குறுகிய சாலையில் வேறு எந்த குழுவுடன் சென்றிருந்தாலும் யாராவது ஒரிருவர் தொலைந்து போய் பெரிய பதற்றம் ஏற்பட்டிருக்கும். பல தன்னார்வத் தொண்டர்கள் வீதியில் வரிசையாக நின்று சூழ்நிலையை அற்புதமாக கையாண்டனர்.

4

இரண்டாம் நாள் அதிகாலை 4 மணிக்கு காலபைரவர் தரிசனம், சிந்தூரம் மணம் கமழும் காலபைரவர் சந்நிதிக்குள் அனைவரும் வரிசையில் சென்றோம். காலபைரவர் மிகவும் உக்கிரமான முகத்துடன் கையில் சுருட்டை வைத்துக் கொண்டு காட்சி அளித்தார். காலபைரவர் தரிசனம் எனக்குள் சிறிது பயத்தையும் ஏற்படுத்தியது.

அங்கே அனைவரும் கண் மூடி அமர்ந்தோம். தியானம் மிகவும் தீவிரமாக நடந்தது. அந்தப் பிரகாரத்தில் இருக்கும் தீவிரத் தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தீவிரம் என்றால் அப்படி ஒரு தீவிரம்! நம் உயிரையே பலி கொடுக்கத் துணியும் தீவிரம்! அங்கே தேடலுடன் கண்மூடி அமர்ந்தவர்க்கு தியானம் தவிர வேறொன்றும் நடக்க முடியாது என்பதுபோல வெடித்து எழ வைக்கும் சக்தி நிலை!

(பயணிப்போம்...)

அடுத்த வாரம்...

அந்நியப் படையெடுப்புகளால் காசியடைந்த சிதைவுகளையும் காசியின் வரலாற்றுப் பின்புலம் குறித்த சத்குருவின் சத்சங்கத்தையும் தாங்கி வரும் அடுத்த வாரப் பகுதி சுவாரஸ்யமான பலத் தகவல்களை வழங்குகிறது. காத்திருங்கள், பயணிப்போம்...!

காசி புனித பயணம்

ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஈஷாவிலிருந்து யாத்திரை அழைத்துச் செல்வது வழக்கம்.

அவ்விதத்தில், வரும் காசி யாத்திரை நவம்பர் 21-25 தேதிகள் வரை நடக்கவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org

தொ.பே: +91 9488 111 333
இ -மெயில்: tn@sacredwalks.org

Padmanaba01@flickr
AleksandrZykov@flickr
ruffin_ready@flickr