உங்கள் வீட்டைச் சுற்றி காலியிடம் உள்ளதா?

ungal-veetai-sutri-kaaliyidam-ullatha

‘வீடு’ என்பது வெறும் செங்கற்களாலான கட்டிடத்தை மட்டும் குறிப்பதல்ல. உயிர்கள் அதில் வாழ்வதாலேயே அதற்கு மதிப்பு. மனிதர்கள் இல்லாத வீடுகள் வெறும் கட்டிடங்கள் மட்டுமே! மரங்கள் இல்லாத வீட்டின் முற்றமும் அதுபோலத்தான்! வீடு கட்டும் எண்ணம் உள்ள ஒவ்வொருவரும் இங்கே சொல்லும் செய்தியை சற்று கவனித்தல் நலம்!

எப்படியாவது ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பதே இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தாரின் உச்சபட்ச இலக்காக உள்ளது. அப்படி அடித்துப் பிடித்துக் கட்டப்படும் வீடுகள் ஆரோக்கியமாக உள்ளதா என்றால், பெரும்பான்மையான வீடுகளின் சூழல் ஆரோக்கியமாக இல்லை என்பதே உண்மை. காற்றோட்டமாக, சூரிய வெளிச்சம் வரக்கூடியதாக, இட வசதியுடன் கூடியதாக இருக்க வேண்டுமென்பது வீடுகட்டும்போது கவனிக்கப்பட வேண்டிய பொதுவான ஆரோக்கிய விதிகள். அதையும் தாண்டி கவனிக்க வேண்டியது வீட்டைச் சுற்றி இருக்க வேண்டிய காலி இடம்.

எதற்கு இந்த காலி இடம்?!

வீடு கட்டவே இடம் இல்லை, இதில் எங்கே காலி இடத்தை விடுவது என இடைமறிக்கும் குரல்களைக் கேட்க முடிகிறது. வீட்டைச் சுற்றி விடப்படும் காலி இடங்கள் நாம் புழங்குவதற்காக அல்ல, இயற்கையின் புழக்கத்திற்காக. ஆம்! நம் வீட்டைச் சுற்றி இயற்கையை அனுமதித்தால் அதன் பிரதிபலனாய் ஆரோக்கியமும் வாசலில் காத்திருக்கும்.

நாம் வீடு கட்டுவதற்கு இடம் வாங்கும்போதே வீட்டுத் தோட்டத்திற்கும் மரங்கள் நடுவதற்கும் சேர்த்து திட்டமிட்டு இடத்தை வாங்குவது சிறந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க நினைப்பவர்கள், அங்கே குடியிருப்பைச் சுற்றிலும் காலி இடம் உள்ளதா, தோட்டக் கலை போன்ற அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் கவனித்து வாங்கலாம்.

பொதுவாக தமிழ் நாட்டில் வீடுகட்டும்போது, சமையலறையின் அளவு, கூடத்தின் விஸ்தாரம், படுக்கையறைச் சுவரின் வண்ணம் இதுபோன்ற விஷயங்களைக் கவனிக்கும் அளவிற்கு வீட்டைச் சுற்றி அமைக்கப்படும் தோட்டத்திற்கும் மரக்கன்றுகளுக்கும் அலங்காரச் செடி வகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. “என்னது… செடி வைக்கணுமா?! அதெல்லாம் கடைசியில இடமிருந்தா பாத்துக்கலாம்ப்பா!” என்பது போன்ற இரண்டாம் பட்சமான மனப்பான்மையே இங்கே அதிகம்.

கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் வீட்டைச் சுற்றி அமைக்கப்படும் தோட்டமும் மரங்களும் முதன்மையான விஷயமாக பார்க்கப்படுகிறது. அங்கே வீட்டைச் சுற்றி பசுமைச் சூழல் இல்லாமல் உள்ள வீட்டினை பார்ப்பதென்பது அரிது.

தமிழகத்தில் இனி வீடு கட்டப் போகும் ஒவ்வொருவரும் வீட்டைச் சுற்றி பசுமைச் சூழல் அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். காலையில் எழும் நாம் கண்விழித்ததும் அழகான தொட்டிச் செடிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை பார்த்தால், அந்த நாள் நிச்சயம் ஒரு வண்ணமயமான நாளாகத் தான் இருக்கும். வீட்டுத் தோட்டத்தினாலும் மரக்கன்றுகள் நடுவதாலும் நமது மனம் புத்துணர்ச்சி கொள்வதோடு, புவி வெப்பமயமாதலால் தகிக்கும் பூமியின் சூடும் சற்று குறையும்.

உங்கள் வீட்டை அழகாக்க காத்திருக்கும் ஈஷா பசுமைக் கரங்கள்!

உங்கள் வீட்டைச் சுற்றிலும் வைப்பதற்கான அலங்காரச் செடிகளையும் மரக்கன்றுகளையும் ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளிலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தோட்டக் கலை அமைப்பதற்கு தகுந்த ஆலோசனைகளையும் வல்லுநர்கள் வழங்குவார்கள்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert