நம் வாழ்க்கைக்கு நாமே இயக்குனராக, நம் வாழ்க்கையை நூறு சதவிகிதம் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்குகிறார் சத்குரு...

ஒரு நாடகம் நடக்கும்போது, அங்கே 3 வகையான மனிதர்கள் இருப்பார்கள். ஒன்று பார்வையாளர்கள், இன்னொன்று நடிகர்கள், மற்றுமொன்று அந்த நாடகத்தை நடத்துபவர்கள் - அதாவது அதை இயக்கும் இயக்குனர் மற்றும் மேடை வடிவமைப்பாளர்கள். இவர்களிடையே, மற்றவர்களைவிட அந்த நாடகத்தை நன்கு அறிந்து, அதில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர் அந்நாடகத்தின் இயக்குனர். கதைக்கருவை உருவாக்கி, அதை மெருகேற்றி, நாடகத்தையும் அவரே நடத்துவதால், அதில் அவரின் ஈடுபாடு மிகமிக அதிகமாக இருக்கும். நடிகர்களுக்கு அவர்களின் கதாப்பாத்திரம் மட்டும் நன்றாகத் தெரிந்திருக்கும், ஆனால் நாடகத்தின் பிற அம்சங்கள் தெரிந்திருக்காது. இதுவே... பார்வையாளர்களுக்கு... நாடகத்தைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காது. அந்நாடகத்தின் நடையில் இருக்கும் உணர்வுகளில் ஒன்றி அதோடு பயணிப்பார்கள்.

நாடகம் நடந்துகொண்டிருக்கும் போது அதில் அதிகம் ஏமாறுபவர்கள் பார்வையாளர்கள்தான். ஏனெனில் நாடகம் ஆரம்பித்த சிறிது நேரத்தில், அங்கு நடப்பவை அனைத்தும் உண்மை என்று நம்பும் அளவிற்கு அவர்கள் அந்த நாடகத்தில் ஒன்றிப் போய்விடுவார்கள். அவர்களுக்கு அந்த நாடகம் மனதளவில் அரங்கேறத் துவங்குகிறது. கதையுடன் சேர்ந்து அவர்களும் சிரிப்பார்கள், அழுவார்கள், இன்னும் பற்பல உணர்ச்சிகள் அவர்களுள் நிகழும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நடக்கும் நாடகத்தில் பார்வையாளர்களின் பங்குதான் மிகக் குறைவு, ஆனால் அதில் அதிகமாக அவர்கள்தான் பிணைக்கப்பட்டுப் போகிறார்கள். காரணம், அந்த நாடகத்தில் அவர்கள் அந்த அளவிற்கு ஒன்றி, அதில் லயித்துவிடுகிறார்கள். இதுவே நடிகர்களை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இன்று ஒரு கதாபாத்திரம், நாளையே வேறொரு கதாபாத்திரம்... நாடகத்தில் அவர்களுக்கு பங்கும் இருக்கிறது, அதில் ஈடுபாடும் இருக்கிறது ஆனால் பார்வையாளர்களின் அளவிற்கு அவர்கள் அதில் பிணைபட்டுப் போகமாட்டார்கள். இதில் இயக்குனரின் பங்குதான் மிகமிக அதிகம்... அதேயளவிற்கு அதில் அவருக்கு ஈடுபாடும் அதிகம். ஆனால் நடந்தேறும் நாடகத்தின் சம்பவங்கள் அவரை எவ்வகையிலும் பாதிக்காது.

இதே மூன்று வாய்ப்புகள்தான் வாழ்வில் உங்களுக்கும் இருக்கிறது - எப்படிப் பார்த்தாலும் வாழ்க்கையும் ஒரு நாடகம்தானே! இதில் நீங்கள் நடிகராக பங்கேற்கலாம், இல்லை அதில் முழுமையாய் மூழ்கிவிட்ட பார்வையாளராக இருக்கலாம், இல்லை நாடகத்தை உருவாக்கி இயக்கும், இயக்குனராகவே ஆகலாம். ஒருவேளை பங்கேற்பாளர்கள், பார்வையாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பின், நீங்களே அம்மூன்று பாத்திரங்களையும் ஏற்கலாம். ஆனால் உங்களின் "இயக்குனர்" அம்சம் விழிப்போடு இயங்கினால்தான், அந்நாடகம் நீங்கள் நினைப்பதுபோல் நடக்கும். இல்லையெனில் அது கட்டுக்கடங்காத, ஒரு முடிவில்லா நாடகமாகிவிடும்.

எப்படியும் வெளிசூழலில் நடக்கும் நாடகத்தை நூறு சதவிகிதம் உங்களுக்கு வேண்டியவகையில் நீங்கள் நடத்திக் கொள்ளமுடியாது. தினசரி சூழலில் உங்களுக்குக் கீழ்பணிந்து நீங்கள் சொல்வதை அப்படியே செய்யும் பாத்திரங்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றிருக்கும் நிலையில், வெளிநாடகம் நீங்கள் நினைத்தபடி நடக்கவில்லை என்றால், அடுத்தகட்ட நாடகம் - உங்கள் மனதளவில் இயங்கும் நாடகம், உங்கள் கைமீறிப் போய்விடும். அதனால்தான் உங்கள் மனதளவிலான நாடகத்திற்கு, நீங்கள் மட்டுமே ஏகபோக இயக்குனராக இருக்கவேண்டும். வெளிநாடகம் ஏதோ அதன்போக்கில் நடந்தேறும்.

நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் அளவில் வெளிநாடகம் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்களுக்கு வேண்டிய வகையில் நடப்பதில்லை, ஆனால் உங்கள் மனநாடகமாவது 100 சதவிகிதம் நீங்கள் நினைக்கும் வகையில் நடக்கவேண்டும். உங்கள் மனநாடகம் சரியாக நடந்தால், வெளிசூழ்நிலைகளை எப்படியும் சமாளித்து விடலாம். எல்லாம் இனிமையாக, சுமுகமாக நடந்துகொண்டிருக்கும் போதே இவையனைத்தும் வெறும் நாடகம் என்பதை உணர்ந்து, அதை நல்லவிதமாக நடத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறில்லாமல், கதையோட்டத்தில் உங்களுக்கே கட்டுப்பாடு இல்லையென்றால், ஒரு கட்டத்தில் இது மிக மோசமாக மாறிவிடும். ஏதோ ஒரு தவறான செயலாலோ, நோயினாலோ, மரணத்தினாலோ இல்லை வேறு ஏதோ ஒரு பெரும் துயரத்தினாலோ வாழ்க்கை மிக மோசமாக மாறிவிடும்.

வாழ்க்கை மோசமான நிலையை எட்டும்வரை காத்திருக்காதீர்கள். உங்கள் மனநாடகத்திற்கு இப்போதே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள், உங்கள் நடிகர்களாவது நீங்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். இதை நீங்கள் சரியாகக் கையாண்டால், ஆன்மீகசெயல்முறை இயல்பாய் நிகழும். அவ்வாறில்லாமல், உங்கள் மனநாடகத்தை வெளிநாடகம் பாதிக்க நீங்கள் அனுமதித்தால், உங்களுக்கு ஆன்மீகம் நிகழாது.

ஆன்மீகம் என்றால் உள்முகமாகத் திரும்புவது. நீங்கள் உள்முகமாகத் திரும்புவதற்கு யாரும் உங்களுக்குத் தடையாக இருக்கமுடியாது. வெளி நாடகத்தை மட்டும் நீங்கள் திறம்பட நடத்திக் கொண்டால் போதும். நீங்கள் எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்தால், உங்கள் கனவனோ மனைவியோ, "இது என்னப்பா இது... புது நாடகம்?" என்று நினைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அது பிடிக்கவில்லை என்றாலோ, உங்கள் கவனத்தை திசை திருப்ப வேறுவிதமான நாடகத்தை அரங்கேற்றுவார்கள்.

நீங்கள் உள்நோக்கித் திரும்புவது வேறுயாருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை. அது ஏதோ ரகசியம் என்றல்ல... வேறு யாருக்குமே அதில் சம்பந்தமில்லை என்பதால். உங்கள் வாழ்க்கைத்துணை, குடும்பம், சமூகம், என இவர்களுடனான நாடகத்தில், அவர்களுக்கு வேண்டியவகையில் ஐம்பது சதவிகிதமும், நீங்கள் விரும்பியவகையில் ஐம்பது சதவிகிதமும் நடத்திக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மனநாடகம் மட்டும் 100 சதவிகிதம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.

இது உங்கள் உள்நிலைக்கும் பொருந்தும் - அது நூறு சதவிகிதம் முழுமையாய் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வெளிசூழ்நிலையில் வேண்டுமானால் ஐம்பது சதவிகிதம் சமரசம் செய்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள் மனநாடகம், உங்கள் உள்நிலை நூறு சதவிகிதம் முழுமையாய் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

Love & Grace