இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பிரபஞ்சத்தில் அனைத்தும் எப்படி ஒரு வடிவியலைக் கொண்டு இயங்குகின்றன, நாம் எப்படி நம் வடிவியலை எந்த உராய்வும் இல்லாமல் சரி செய்து கொள்ள முடியும் என்பதை விளக்குகிறார் சத்குரு...

மக்கள் என்னிடம், "சத்குரு, நீங்கள் ஏன் வேறு ஏதாவது பெண் தெய்வத்தைத் தேர்வு செய்யாமல் லிங்கபைரவியைத் தேர்ந்தெடுத்தீர்கள்" என்று கேட்கிறார்கள். நாம் அவளைத் தேர்ந்தெடுக்கவில்லை, அவளை வடிவமைத்து, அவளுக்கு பிறப்பு அளித்துள்ளோம். இப்படி செய்ததால் அவள் ஒரு குறிப்பிட்ட விதமாக செயள்படுவாள். "ஓ! நீங்கள்தான் அவளை உருவாக்கினீர்களா சத்குரு. அப்படியென்றால் அவள் உண்மை இல்லையா?!" என்று நீங்கள் கேட்கலாம். நாம்தான் பலவற்றை உருவாக்குகிறோம், அப்படியிருந்தும் அவை நிஜமானவைதான். நாம் ஒரு மரம் நடுகிறோம், அப்படியென்றால் அது நிஜமில்லை என்றாகிவிடுமா? உங்கள் பெற்றோர்கள் உங்களை உருவாக்கினார்கள், அப்படியென்றால் நீங்களும் நிஜம்தானே. ஏன் ஒரு ஜடப்பொருள் கூட, உதாரணமாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொள்வோம். அதன் இன்ஜின் வெறும் உலோகம்தான், ஆனால் வாழ்க்கையில் உங்களால் செய்யமுடியாததைக் கூட அதனால் செய்ய முடியும். நீங்களும் நானும் செய்யமுடியாததை ஒரு இயந்திரம் செய்ய முடியும் என்பதால்தான் அதை நாம் உருவாக்குகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லிங்கபைரவி ஒரு விதமான யந்திரம். யந்திரம் என்றால் ஒரு மெஷின். நீங்களும் ஒரு விதமான யந்திரம்தான், ஆனால் வாழ்க்கையில் சில இடங்களில் உங்களால்கூட செய்ய முடியாததை, பைரவி செய்யத்தகுந்தவளாக இருப்பாள். ஏனென்றால் அவளுக்கு உடல் என்னும் சுமை இல்லை. எனவே தன் உடலைப் பேணிக்காக்க வேண்டும் என்னும் சுமை அவளுக்கு இல்லை. அவள் ஒரு குறிப்பிட்ட விதமான அற்புத நிகழ்வு. ஒவ்வொரு உயிரும் ஒரு குறிப்பிட்ட விதமான அற்புத நிகழ்வுதான். ஒரு மரம் ஒரு விதமான நிகழ்வு. அது எப்போதும் ஏதோவொன்று செய்த வண்ணமே உள்ளது. வெள்ளியங்கிரி மலை பெரும்பாலும் ஜடப்பொருட்களால் ஆனதுதான். ஆனால் அவை அதி அற்புதமான செயல்களை செய்த வண்ணம் இருக்கின்றன! ஒரு கடல் என்பது வெறும் தண்ணீர்தான், ஆனால் அது பிரம்மாண்டமான செயல்களை செய்கிறது.

இதுபோல், இயற்கையில் பற்பல அற்புத நிகழ்வுகள் உள்ளன. அவற்றுள் சில இயற்கையால் செதுக்கப்பட்டவை, சில, மனிதர்களால் செதுக்கப்பட்டவை. நாம் ஏதேனும் செதுக்கினாலும், அதைக் கூட இயற்கை செயல்முறையிலிருந்து மாறுபட்டு செய்ய முடியாது. ஏனென்றால் நாம் செய்வதும் இயற்கை விதிக்கு உட்பட்டுதான் செய்கிறோம். அதிலிருந்து குறைவாகவும் செய்வதில்லை, அதிகமாகவும் செய்வதில்லை. ஒருவரின் அனுபவத்தில் புவியீர்ப்பு என்பது ஒரு கட்டுப்பாடு, இன்னொருவருக்கு புவியீர்ப்பு என்பது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு. தற்போது நீங்கள் ஒரு ஆகாய விமானம் இல்லாமலோ, அல்லது இறக்கை இல்லாமலோ பறக்க வேண்டுமென்றால், "ஐயோ, இந்த பாழாய்ப்போன புவியீர்ப்பு என்னை இப்படி கீழே இழுக்கிறதே!" என்று புலம்புவீர்கள். ஆனால் அது இந்த பூமியையே பிடித்து வைத்துள்ளது. எனவே நாம் என்ன செய்தாலும், நாம் இயற்கையின் விதிக்கு உட்பட்டே செய்ய முடியும். ஆனால் இயற்கை விதி என்பது ஒரு கட்டுப்பாடில்லை, அது ஒரு விதமான விளையாட்டு.

இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டால், உங்களால் எண்ணற்ற செயல்கள் செய்ய முடியும். அதனால்தான் நாம் ஈஷா யோகா வகுப்புகளை "விதிமுறைகளில்" ஆரம்பிக்கிறோம். நீங்கள் விதிமுறைகளை, "இவை என்னுடைய விதிமுறைகள்" என்று உணர்ந்தால்தான் உங்களால் சுதந்திரமாக செயல் செய்ய முடியும். விதிமுறைகளை எதிர்த்தால் வாழ்க்கை மிகவும் துன்பம் ஆகிவிடும். வெறும் சமூக ரீதியாக மட்டுமில்லை, வாழ்க்கையின் அடிப்படையே துயரமானதாகிவிடும். ஆனால் நீங்கள் விதிமுறைகளுடன் ஒத்திசைவில் இருந்தால், வாழ்க்கையில் பல மாயாஜாலங்களை உங்களால் நிகழ்த்த முடியும். எனவே, மாயாஜாலம் என்பது விதிமுறைகளுடன் விளையாடுவதுதானே தவிர அவற்றை உடைப்பது இல்லை. விதிமுறைகளை ஒரு விதமான வித்தை போல் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதைப் பற்றியது.

எனவே, தேவிக்கென்று தனியே ஒரு உருவம், வடிவியல் மற்றும் அளவுகள் உள்ளன. அவளுக்கென்று சொந்தமாக ஒரு சப்தமும் உள்ளது. லிங்கபைரவிக்கென்று ஏற்றார்போல் சப்தத்தை உருவாக்கும் ஒரு இசைக் கருவியை நாம் உருவாக்க விரும்புகிறோம். அங்கு ஒலிக்கப்படும் மந்திரங்களும், உட்சாடனைகளும் அவளுடைய சப்தத்திற்கு ஒத்திசைவாகத் தான் உள்ளன. ஆனால் இந்த மந்திரங்கள் எல்லாம் அவளுடைய வடிவியலை சார்ந்தே அதிகமாக இருக்கின்றன. அந்த சப்தம் எது என்று நமக்குத் தெரியும், அந்த சப்தத்தை ஒரு முரசு மூலம் முயற்சித்துப் பார்த்தோம். ஆனால் அது சரியாக வரவில்லை. நான் சிலருடன் இதைப் பற்றி விவாதித்தபோது, எலக்ட்ரானிக் முறையில் இந்த சப்தத்தை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தார்கள். ஆனால் ஒரு கருவியிலிருந்து முறையாக அந்த சப்தம் வேண்டும் என்று நான் விரும்பினேன். சப்தம் சரியாக நமக்கு கிடைத்துவிட்டால், தேவியை உணரும் விதத்தை இன்னமும் மேம்படுத்த முடியும்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும், ஒவ்வொரு பௌதீக வடிவமும், வடிவியலுக்கு உட்பட்டதுதான். ஏதோவொன்று சுமூகமாக செயல்படுவதும், செயல்படாததும் அதன் வடிவியலின் ஒழுங்கைப் பொருத்தே உள்ளது. ஹதயோகா என்பது இதைப்பற்றித்தான். எந்த ஒரு உராய்வும் இல்லாமல் தானே முழுமையாக செயல்படும் இயந்திரமாக உங்களின் வடிவியலை மாற்றுவதுதான் ஹதயோகா. எப்போது உள் உராய்வு இல்லாமல் உள்ளதோ, அப்போதுதான் நீங்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டீர்கள். ஆனால் இங்கே உங்கள் இருப்பே ஒரு பிரச்சனை எனும்போது, விழிப்புணர்வின் உச்சத்தை அடைவது எப்படி சாத்தியமாகும்? அப்படி ஒன்றும் உங்களுக்கு நடக்காது. அனைத்தும் சுமூகமாக இருக்கும்போதுதான் நீங்கள் ஏதோவொன்றை அடைய முடியும். நீங்களே ஒரு பிரச்சனையாக இல்லாதபோது, உங்களால் எதை வேண்டுமானாலும் கையாள முடியும் அல்லது வெறுமனே கண்மூடி அமர முடியும் - இந்த இரண்டு வாய்ப்பும் உங்களிடம் உள்ளது.

தீவிர செயலும், நிச்சலனமும் அதே சாத்தியத்தின் இரு முகங்கள்!

Love & Grace