Question: பணம் சம்பாதிப்பதற்காக ஒரு பணியிடத்தில் நமது உழைப்பையும் நேரத்தையும் கொடுக்கிறோம். என் உழைப்பிற்கும் செலவிடும் நேரத்திற்கும் ஏற்ற ஒரு நல்ல வருவாயை எப்படிக் கணிப்பது?

சத்குரு:

நீங்கள் எவ்வளவு ஊதியம் பெறுகிறீர்கள் என்ற நோக்கில் உங்கள் தகுதியை நீங்கள் எடை போடத் தேவையில்லை. உங்களுக்கு என்ன பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன என்ற நோக்கில்தான் உங்கள் தகுதியை நீங்கள் மதிப்பிடவேண்டும். நீங்கள் பெறும் பணத்தில் பெருமிதம் ஏதுமில்லை. ஏதோ ஒன்றை உருவாக்குவதற்கு நீங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் உங்களுக்கு பெருமை தருகிறது. நமது பிழைப்புக்கான ஒரு வழியாகப் பணம் இருக்கிறது. ஆம், அந்த அளவுக்கு அது தேவையானதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உலகில் நீங்கள் செய்கின்ற எந்த ஒரு பணியும் மக்களின் வாழ்வை ஆழமாக தொடும்போது மட்டுமே உங்களுக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்
இருப்பினும், உங்களுக்கு என்ன பணி ஒப்படைக்கிறார்கள் என்பதின் அடிப்படையில்தான் நீங்கள் எப்போதும் உங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். உங்களுக்கு எந்த அளவுக்குப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன? உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் உண்மையாகவே மதிப்புவாய்ந்த ஏதோ ஒன்றை உருவாக்குவதற்காக, உங்களுக்கு என்னவிதமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன? இவையெல்லாம்தான் முக்கியம். உலகில் நீங்கள் செய்கின்ற எந்த ஒரு பணியும் மக்களின் வாழ்வை ஆழமாக தொடும்போது மட்டுமே உங்களுக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு திரைப்படம் எடுப்பதாக இருந்தால், யாருமே பார்ப்பதற்கு விரும்பாத ஒரு படத்தை உருவாக்க விரும்புவீர்களா? அல்லது ஒருவரும் வாழ்வதற்கு விரும்பாத ஒரு வீட்டைக் கட்டுவீர்களா? யாரும் பயன்படுத்துவதற்கு விரும்பாத ஒன்றை நீங்கள் உருவாக்க விரும்பமாட்டீர்கள். ஆகவே ஏதோ ஒருவிதத்தில் மக்களின் வாழ்க்கையைத் தொடுவதற்கே நீங்கள் பெருவிருப்பம் கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையை உற்றுநோக்கினால், நீங்கள் செய்கின்ற செயலினால், மக்களின் வாழ்வைத் தொடுவதுதான் உங்களுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

அநேக மக்களும் தங்கள் வாழ்க்கையை பணி, குடும்பம் என்று வேறுபடுத்திப் பார்க்கவே முயற்சிக்கின்றனர். பணிபுரிவது பணத்திற்காக என்பது போலவும், குடும்பம் என்பதுதான் மற்றவர்களின் வாழ்வைத் தொடுவதற்காகவும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை உற்றுநோக்கினால்நீங்கள் செய்கின்ற செயலினால்மக்களின் வாழ்வைத் தொடுவதுதான் உங்களுக்கு முக்கியமாக இருக்கிறது
ஆனால் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், நீங்கள் செய்யும் செயலால் உங்கள் கணவனோ, மனைவியோ அல்லது குழந்தைகளோ தொடப்படவே இல்லையென்றால், சட்டென்று உங்களுக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட குடும்பமே அர்த்தமற்றதாகத் தோன்றிவிடும். எங்கோ உங்கள் வாழ்க்கையில், உங்கள் செயல்களால் மற்றவர்கள் தொடப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த அம்சத்தை குடும்பத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அந்த அம்சத்தை உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் விரிவாக்கிக் கொள்ளலாம். நீங்கள் செய்வது என்னவாக இருந்தாலும், மக்களின் வாழ்வைத் தொடவேண்டும், அதுதான் உண்மையிலேயே முக்கியமானது.

நீங்கள் எவ்வளவு ஆழமாக மக்களின் வாழ்வைத் தொடுகிறீர்கள் என்பது, நீங்கள் செய்யும் செயலில் எவ்வளவு ஈடுபாடு கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. நீங்கள் ஆழமான ஈடுபாடு கொண்டால், நீங்கள் பணியாற்றும் விதம் இயல்பாகவே மிகவும் வித்தியாசமாக இருக்கும். மேலும் உங்களது திறன்களுக்கேற்றபடி உங்களுக்கான ஊதியமும் கிடைக்கும். ஒருவேளை உங்களது மேலதிகாரி உங்களின் ஊதிய உயர்வுத் தேவையை மறந்துவிட்டிருந்தால், சிலநேரங்களில் நீங்கள் பேரம் பேசவோ, ஊதிய உயர்வோ கேட்க வேண்டியிருக்கும். ஆனால் பொதுவாக, அந்த வியாபாரத்திற்கோ அல்லது நிறுவனத்திற்கோ நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்ற உங்களின் மதிப்பை அவர்கள் உணர்ந்தால், அதற்கேற்ப அவர்களாகவே ஊதியம் வழங்குவார்கள்.

நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் வளர்ச்சி பெற்றால், ஏதோ ஒருநாளில் தேவை ஏற்படும்போது, உங்களது தற்போதைய நிலையிலிருந்து அடுத்த உயர்நிலைக்கு நீங்கள் மாறமுடியும். மேலும் அப்போது உங்களது ஊதியமும் நூறு மடங்காகப் பெருகமுடியும்.

நீங்கள் எவ்வளவு ஆழமாக மக்களின் வாழ்வைத் தொடுகிறீர்கள் என்பதுநீங்கள் செய்யும் செயலில் எவ்வளவு ஈடுபாடு கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.
உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். என்ன காரணத்தினாலோ உங்களுக்கு அதிகமான ஊதியம் வழங்கப்படவில்லை. ஆனால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் நடத்தும் முழுப்பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனில், நீங்கள் அந்தப் பொறுப்பை ஏற்று சிறப்பாகச் செயல்படும் நிலையில், மொத்த உலகமும் உங்களை கவனிக்கும். அப்பொழுது, நாளைக்கே யாரோ ஒருவர் எவ்வளவு ஊதியம் வழங்கியும் உங்களைத் தங்களோடு அழைத்துக்கொள்ள விரும்புவார்கள். ஆகவே, வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் உங்களது மதிப்பு எப்போதும் அளவீடு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.

தற்போது நாம் பொது நிறுவனங்களை நிறுவியுள்ளோம். ஏனென்றால் தனிப்பட்ட முறையில் நம்மால் செய்யமுடியாததை, கூட்டு முயற்சியில் நம்மால் சாதிக்க முடியும். நாம் அனைவரும் தனித்தனியான தொழில்முனைவோராகவும் செயல்பட்டிருக்க முடியும். வரலாற்றுப்பூர்வமாக நாம் அவ்வாறுதான் செயல்பட்டோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொருளை உற்பத்தி செய்து, வியாபாரம் செய்து வந்தோம். ஆனால் தற்போது நாம் பொது நிறுவனங்களை நிறுவியுள்ளோம். அந்நிறுவனங்களின் சாதனை நோக்கமும் மிகப் பெரியதாக இருக்கிறது. எனவே ஆயிரக்கணக்கான மக்களின் நோக்கத்தையும் இணைத்து ஒரே திசையில் செலுத்த நாம் விரும்புகிறோம்.

ஒரே நோக்கத்தில் இணைந்து நகரும் இந்த மக்களின் நிறுவனத்தில், உங்களுடைய உண்மையான மதிப்பு என்பது நீங்கள் எங்கே அமர்த்தப்படுகிறீர்கள் என்ற கேள்வியிலும், உங்கள்மீது வைக்கப்பட்டுள்ள பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மையின் அளவிலும் இருக்கிறது. அந்தப் பதவி மற்றும் பொறுப்பிலிருந்து நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஆம், பணம் முக்கியமானதுதான், ஆனால் அதுவே அனைத்தும் ஆகிவிடாது. உங்களிடம் மக்கள் வழங்க விரும்பும் பொறுப்பின் அளவிலும் மற்றும் நீங்கள் உருவாக்குவது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்மையிலேயே மதிப்பு மிக்கதுதானா என்பதன் அடிப்படையிலும்தான் நீங்கள் எப்போதும் உங்களது மதிப்பை அளவீடு செய்ய வேண்டும்.