இந்த வார ஸ்பாட்டில், எதிரெதிர் எண்ணங்கள், உணர்வுகள், தூண்டுதல்களுக்கு நடுவில் நீங்கள் அலைமோதும் நிலை குறித்து சத்குரு பேசுகிறார். கற்பனை செய்யமுடியாத வழிகளில் உங்கள் மனம் ஏன் ஊசலாடுகிறது? இதிலிருந்து மீள்வதற்கு வழியென்ன? “மனித மனத்தின் மிகப் பிரமாதமான அம்சம், அது எக்கணத்தில் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தன் வடிவை மாற்றிக் கொள்ளமுடியும். வடிவ-மாற்றத்தை திசை-மாற்றம் என்று நீங்கள் கொண்டால்தான் பிரச்சினை” என்று சொல்கிறார் சத்குரு.

இந்த நொடியில் சந்தோஷமாக இருந்தாலும் அடுத்த நொடியில் துவண்டுவிடும் சோகத்தில் மக்கள் ஏன் ஆழ்கிறார்கள்? நீங்கள் ஏங்கித் தவிக்கும் ஒரு விஷயம் இந்த நொடியில் மிக அருகில் இருப்பதுபோல் தோன்றினாலும் அடுத்த நொடியில் அது வெகு தூரமாக இருப்பதுபோல் ஏன் தெரிகிறது? இது ஏனெனில், மனதை நிர்வகிக்கும் செயலில் இன்று எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. நம் கல்விமுறை, அ,ஆ,இ,ஈ... 1,2,3... (E = mc²) என்ற ஐன்ஸ்டீன் அவர்களின் சார்புக் கொள்கை என்று பற்பல தகவல்களையும் மனதில் சேகரிக்கும் முயற்சியாக இருக்கிறது. மற்றவர்களைவிட சிறிதளவு அதிகமான தகவல்கள் தெரிந்திருந்தால், நீங்கள் புத்திசாலியென மக்கள் நினைக்கின்றனர். பொதுவாக, அவசியமின்றி பலவற்றை தலையில் சுமந்தால் உங்களை முட்டாள் என்றே மக்கள் எண்ணுவர். ஆனால் தகவல்களைப் பொறுத்தவரை, அதிகம் சுமந்தால் நீங்கள் புத்திசாலி என்கிறார்கள்! இன்றைய உலகில் இப்பால்வெளி மண்டலம் பற்றி ஏதேனும் ஒரு தகவலை யாருக்கேனும் சொல்லவேண்டும் என்றால், அதற்கு நீங்கள் உங்கள் ஃபோனை பயன்படுத்தினாலே போதும். “அடேங்கப்பா! நீங்கள் ஒரு அறிவாளி” என்று உங்களைப் புகழ்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இங்கு “அறிவாளி”யாக இருப்பது, உங்கள் ஃபோன் தானே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தகவல்கள் இருப்பதே அறிவுக்கூர்மை என்று கருதப்படுகிறது. தகவல்களை ஒரு முட்டாள்கூட சேகரிக்க முடியும். ஒரு புத்தகத்தைத் திறந்து, தேவையானதைப் பார்த்து, அதைப் படித்தாலே போதுமே! நெடுங்காலமாய், புத்தகங்கள் வாசிப்பதைத்தான் மக்கள் மதம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். இன்றும்கூட பலர் அப்படித்தான் எண்ணுகிறார்கள். படிக்கத் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் புத்தகத்தைப் படிக்கலாம். படிக்கத் தெரிந்தவர்கள் மிக அரிதாக இருந்தபோது, ஒரு கிராமத்தில் ஒருவர் மட்டுமே படிக்கக் கற்றிருந்தபோது, ஒரு புத்தகத்தைப் பார்த்து இத்தனை விஷயங்களை ஒருவர் சொல்லமுடிவது மக்களுக்கு அதிசயமாக இருந்தது. ஏனெனில் அப்புத்தகத்தைத் திறந்து பார்க்கும்போது அவர்களுக்கு அதில் ஒன்றும் புரியவில்லை. அதனால்தான் “படிப்பது” அவர்களுக்கு மாபெரும் விஷயமாக, அதிசயமாக இருந்தது. அறியாமையில் இருக்கும் போது உங்களுக்கு எல்லாமே அதிசயமாகத்தான் இருக்கும். சரி, தற்சமய சூழ்நிலைக்குத் திரும்ப வருவோம். தற்போதிருக்கும் கல்வி அமைப்பில் இருக்கும் முக்கிய குறைபாடு, “நம் மனதின் தன்மை என்ன? அதை எப்படிக் கையாள வேண்டும்? அடிப்படையான ஒழுங்குமுறைக்குள் அதை எப்படிக் கொண்டு வருவது?” போன்ற விஷயங்களை அது எதிர்கொள்ளவில்லை. அதனால்தான் இந்த நொடியில் மிக அருகில் இருப்பதாகத் தோன்றும் உங்கள் இலக்கு, அடுத்த நொடியே கானல்நீரென மறைகிறது.

இதுதான், இப்படிதான் என்று ஏதேனும் ஒருவகையில் உங்கள் மனதை ஒரு தீர்மானத்திற்குக் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை வீணாகும். ஒவ்வொரு நொடியும் உங்கள் எண்ணங்கள் இங்கிருந்து அங்கு அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், உங்கள் மனதிற்கு நிலையான வடிவம் இல்லை. ஆனால் அதுதான் மனதின் அழகும்கூட – உங்களுக்கு வேண்டிய வகையில் அதை நீங்கள் வடிவமைத்துக் கொள்ளலாம். “இல்லை... வேண்டாம்” என்று நினைத்தால் அதை ஒதுக்கியும் வைக்கலாம். உங்கள் உடலிற்கு திடமான வடிவம் உண்டு ஆனால் உங்கள் மனதிற்கு வடிவமில்லை. உங்களுக்கு வேண்டியதுபோல் அதை என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதுதான் மனதின் மிகப் பிரமாதமான அம்சம். ஆனால் இதனாலேயேதான் இன்று பெரும்பாலான மனிதர்கள் அவதிக்கும் உள்ளாகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், உங்கள் மனம் உங்கள் கட்டளைகளை ஏற்பதில்லை. மாறாக, அதன் விருப்பப்படி ஏதோவொரு வடிவை அதுவே எடுத்துக் கொள்கிறது. நீங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். இன்று நல்ல நாள்தான். தனியே அமர்ந்து ஒரு தீர்மானம் எடுங்கள். உங்கள் வாழ்வின் நோக்கம் என்ன? நீங்கள் பயணிக்க விரும்பும் திசை என்ன? இதை முடிவுசெய்த பின், உங்கள் வாழ்நாளில் இனி அதை மாற்றாதீர்கள். நீங்கள் எதைத் தேர்வு செய்தாலும் சரி. இது, இப்படி, அப்படி என்று நான் எதுவும் சொல்லவில்லை. அது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் செல்லவேண்டிய திசையை நிர்ணயிக்கவில்லை என்றால், உங்கள் மனம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவம் எடுக்கும். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் திசையை அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைப்பீர்கள்.

மழைக்காலத்தில் நீங்கள் ஈஷா யோக மையத்தில் இருந்திருந்தால், அங்கிருக்கும் மேகங்கள் நொடிக்குநொடி வடிவம் மாறிக்கொண்டே இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மேகங்கள் வடிவம் மாறிக்கொண்டே இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் காற்றும் அவ்வாறே திசை மாறிக்கொண்டே இருந்து, மேகங்கள் போகவேண்டிய இடத்திற்கு போகவில்லை என்றால், அது நிச்சயம் பிரச்சினைதான். அதேமாதிரி நீங்களும். உங்கள் மனம் வடிவம் மாற்றிக் கொண்டே இருப்பது பிரச்சினையில்லை, ஆனால் திசை மாறிக்கொண்டே இருப்பதுதான் பிரச்சினை. உங்கள் வாழ்வின் திசை என்ன என்பதை நீங்களே தீர்மானியுங்கள். அதில் உங்கள் விருப்பத்தை மாற்றுவதோ, வழிநடத்துவதோ என் நோக்கமல்ல. என் வாழ்வின் திசையை நான் நிர்ணயித்தேன், அது எனக்குப் பிரமாதமாக வேலை செய்திருக்கிறது. உங்கள் திசையை நீங்கள் நிர்ணயுங்கள், அது எதுவாக இருந்தாலும் சரி. ஆனால் அதன்பின் அது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கக்கூடாது. நீங்கள் இங்கு பார்க்கும் ஒவ்வொரு துணுக்கையும் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருக்கக் கூடாது. மனிதன் என்பவன் அப்படி வாழக்கூடாது. நீங்கள் நிர்மாணித்த திசை வேலை செய்கிறதோ இல்லையோ, அது பொருட்டல்ல. நீங்கள் ஆனந்தமாக, நன்றாக, தெளிவாக இருக்கும்போது உங்கள் வாழ்வின் திசையை தீர்மானியுங்கள். அதன்பின் அது மாறக்கூடாது.

உங்கள் உணர்வுகள் திசை மாறியதும், “இதுவல்ல” என்று நீங்கள் நினைத்தால், அதற்கு செவி சாய்க்காதீர்கள். உங்கள் உளச்சோர்வுகளுக்கும் ஏமாற்றம்-விரக்திகளுக்கும் செவி சாய்த்தால், வெகு விரைவிலேயே உங்களுக்கான படுகுழியை நீங்களே வெட்டிக் கொள்வீர்கள். நீங்கள் இறந்தபின் வேறொருவர் உங்களுக்கு குழி வெட்டவேண்டும். உயிருடன் இருக்கும்போதே அதை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்? இது குழி வெட்டிக்கொள்ளும் நேரமல்ல – பறக்கும் நேரம். மனித மனத்தின் மிகப் பிரமாதமான அம்சம், அது எக்கணத்தில் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தன் வடிவை மாற்றிக் கொள்ளமுடியும். வடிவ-மாற்றத்தை திசை-மாற்றம் என்று நீங்கள் கொண்டால்தான் பிரச்சினை. இதுதான் இன்று மனிதர்களின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் திசையை நீங்கள் நிர்ணயித்துவிட்டால், உங்கள் மனம் அதன் வடிவை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள நீங்கள் அனுமதிக்கலாம். அது பிரச்சினையல்ல. திசை முடிவானபின், மனதின் வடிவத்தை மாற்றுவது படைப்பாற்றலுக்கு வித்திடுமே அன்றி, உளச்சோர்வுக்கு அல்ல.

நேரத்திற்கு ஏற்றாற் போல், சூழ்நிலைக்கு ஏற்றாற் போல், விழிப்புணர்வோடு வடிவம் மாற்றிக்கொள்ளும் திறன்படைத்த மனம், ஞானமடைதலுக்கு படிக்கல்லாய் அமையும். ஒருமித்த மனக்குவிப்பு (அ) நிலையான திசையைக் கொண்ட, தெளிவான வடிவமற்ற மனம், எல்லையற்ற அறிதலுக்கான கருவி!

Love & Grace