"கல்யாணத்துல சாப்பாடு சூப்பர்... ரசம் மட்டும் சுமாரா இருந்துச்சு!" இப்படிக் கமென்ட் சொல்லிவிட்டு கிளம்பிவிடும் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும், தாம்பூலமாகக் கொடுக்கப்படும் தேங்காய் பைகளில் ஈஷா பசுமைக் கரங்களின் மரக்கன்றுகள் இருந்தால்... அது ஈஷா கல்யாணம்!

மரம் நட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் ஆராய்ந்து அதனை செயல்படுத்தியும் வருகிறது நம் பசுமைக் கரங்கள் திட்டம். பசுமைப் பள்ளி இயக்கம் மூலம் குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலின் மீது பாசம் ஏற்படுத்தும் நாம், ஆயிரம் காலத்து பயிரென வாழும் திருமணத்தை விட்டு வைப்போமா என்ன? நம் தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாட்டால் மலர்ந்துள்ள மற்றொரு அற்புதத் திட்டம் இந்த பசுமைத் தாம்பூலம்.

திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்கிக் கொண்டாடும் கலாச்சாரத்தினை நாம் உருவாக்கியதன் பலனாக, 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. 1,800க்கும் அதிகமான திருமண நிகழ்சிகளில் இவை வழங்கப்பட்டுள்ளன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நமது வீட்டுக் திருமணங்களுக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் வாழ்த்த வருபவர்களின் மனதில் நீங்காமல் பசுமையாய் இடம் பிடிக்க, அவர்கள் வீட்டில் அவர்களுடன் பேசும் ஒரு மரக்கன்றை அளிப்பதைவிட உயிரோட்டமான வழியும் இருக்க முடியுமா? வழக்கமாக, நம் திருமண நிகழ்வுகளை எப்போதாவது புரட்டப்படும் ஃபோட்டோ ஆல்பங்கள் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. இதுபோன்ற சுபநிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்கும்போது, இந்தக் கன்றுகள் மணமக்களின் விருந்தினர்கள் வீட்டில் பசுமைக் குழந்தைகளாக நீடித்து வளரும். அவர்கள் முற்றத்திலோ கொல்லைப்புறத்திலோ வைக்கப்படும் இந்தக் கன்றுகள், அந்த நாளின் நினைவுகளைத் தாங்கியபடி தழைத்தோங்கும்போது, சுற்றுச்சூழலுக்கு நம்மால் இயன்ற ஒரு செயலை ஆற்றிய நிறைவும் நமக்குக் கிடைக்கிறது.

எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள்; பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது.

நாற்றுப் பண்ணைகள் அமைக்க இடம் கொடுங்கள்!

தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமை கரங்கள் திட்டம்' அமைத்துள்ளது.

தற்போது மரக் கன்றுகளின் தேவை அதிகரித்து வருவதால், புதிய நாற்றுப் பண்ணைகள் அமைப்பதற்கு நமக்கு இட வசதி தேவைப்படுகிறது. 5 வருடங்களுக்கு இடங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இடத்தை நன்கொடையாகவோ அல்லது குத்தகைக்கோ, வாடகைக்கோ நீங்கள் வழங்கலாம். நாற்றுப் பண்ணைகள் அமைக்க இடமளித்து உதவுவதன் மூலம் ஈஷாவின் இந்த பசுமைப் பயணத்தில் நீங்களும் உடன் பயணியுங்கள்!

கீழ் குறிப்பிடப்படும் வசதிகளுடன் இடம் அமைந்தால் பண்ணைகள் செழித்தோங்கும்

  • ஊருக்கு அருகாமையில்
  • முக்கிய சாலைகளிலிருந்து அருகில்
  • ஓரளவு நீர் வளமுள்ள
  • 50 சென்ட் வரை இடம்

கொண்ட நாற்றுப் பண்ணைகள் மூலம் மக்களை எளிதாகச் சென்றடைய முடிகிறது.

உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளின் தொடர்பு எண்ணைப் பெறுவதற்கும், புதிய நாற்றுப்பண்ணைகள் அமைக்க இட வசதி வழங்குவது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொ. பே. 94425 90062

இடம் உள்ளவர்கள் கொடுத்து உதவுங்கள்!
மனதில் மட்டும் இடம் கொண்டவர்கள்,
மரங்களை நட்டு உதவுங்கள்!