உணர்ச்சி எப்படி உண்டாகிறது?

உணர்ச்சி எப்படி உண்டாகிறது?, Unarchi eppadi undagirathu?

கேள்விகள் கேட்பது வளர்ச்சியின் அடையாளம். உடல், மனம், உணர்ச்சிகள் குறித்த கேள்விகள் ஆன்மீக வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் அமையலாம்! அந்த வகையில் இந்த கேள்விகளும், அதற்கு சத்குருவின் பதில்களும், உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு நிச்சயம் தூண்டுகோலாகும்!

கேள்வி
உடல் பற்றியும் மனம் பற்றியும் சொல்கிறீர்களே, உணர்ச்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சத்குரு:

உணர்ச்சிகள் என்பவை என்ன? அவற்றின் பிறப்பிடமும் மனம்தான்.

ஒருவன் நல்லவன் என்று மனதால் சிந்திக்கிறீர்கள். அவனைப் பார்த்தால் குதூகல உணர்ச்சி பிறக்கிறது. வேறு ஒருவனை மோசமானவன் என்று கருதுகிறீர்கள். அவனைப் பார்த்தால் மனதில் வேறுவிதமான உணர்ச்சிகள் பொங்குகின்றன.

உணர்ச்சிகளும் அடிப்படையில் மனதின் குழந்தைகள்தாம், எண்ணங்கள் மனதில் சற்று உலர்ந்த நிலையில் இருக்கின்றன. உணர்ச்சிகள் ஈரச்சாறாக இருக்கின்றன, அவ்வளவுதான். அவற்றை முற்றிலுமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

கேள்வி
ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கையில், முன்பு பற்று வைத்ததன் மீதெல்லாம் பற்று விட்டுப்போகிறது. மிக நெருக்கமானவர்கள்கூட அந்நியமாகிவிடுவார்கள். இதனால்தான் ஆன்மீகத்தில் ஈடுபடத் தயக்கம் வருகிறதா?

சத்குரு:

சிறு குழந்தையாக இருக்கையில், ஒரு குறிப்பிட்ட பொம்மையோ, சிறு அட்டைப் பெட்டியோகூட உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியிருக்கும். அன்றைக்கு உயிர்போல் தோன்றிய அந்த விளையாட்டுப் பொருள்களின்மீது உங்களுக்கு இருந்த பற்று, வளர்ந்ததும் விட்டுப் போகும். இளைஞராய் இருந்தபோது, பற்றுவைத்த சில பொருட்களின்மீது முதியவரானதும் ஆர்வம் விட்டுப்போகும். இது தொடரும் நிலை.

பற்று விட்டுப்போவது என்பது வளர்ச்சியின் அடையாளம். இதைப் புரிந்துகொள்ள ஒரு பக்குவம் வேண்டும். ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது எந்த வகையிலும் அவர் குடும்பத்திற்கு எதிரானதல்ல. ஆனால் அவர் குடும்பத்துக்குத் தேவையான பக்குவம் இல்லாவிட்டால், அவர் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கமுடியும்.

இது ஆன்மீகத்தின் குறை அல்ல. குடும்பம் என்பதற்கு நாம் அமைத்திருக்கும் வரைமுறைகளின் குறை!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert