உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?

உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?, Ulagil anaivarum anandam unara vazhi enna?
கேள்வி
சத்குரு, இந்த உலகில் அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு அன்பும் ஆனந்தமும் கொண்டவர்களாக மாற வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

அனைவரும் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருக்க வேண்டும், அதை நோக்கி இந்த உலகம் மாற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கிறது. ஆனால், அதைத் தவறான இடத்திலிருந்து தொடங்க முயற்சிக்கின்றனர். தான் அன்பும் அக்கறையுமாக இருப்பதற்கு முன் மற்றவர் எல்லோரும் அன்பும் அக்கறையுமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒருவருக்கு அன்பும் அக்கறையும் எப்போது வரும்? மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிற நேரங்களில் அனைவரும் இயல்பாகவே அன்புடனும், தாராள சிந்தையுடனும், அற்புதமான மனிதராகவும்தான் இருக்கிறீர்கள். இதை உங்களிடமே பலமுறை நீங்கள் கவனித்திருக்க முடியும். அதேநேரத்தில் நீங்கள் மகிழ்வற்ற தன்மையிலும், மனவேதனையிலும் இருக்கும்போது காரணமில்லாமலே கூட அனைவர் மீதும் எரிந்து விழுபவராக இருக்கிறீர்கள்.

உங்களுக்குள் முதலில் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் அடுத்தவர் மீது முயற்சி செய்து அன்புடன் இருக்க விரும்பினால் அப்படி அது நடக்காது.
எனவே நீங்கள் முதலில் மகிழ்ச்சியானவராகவும் ஆனந்தமானவராகவும் மாற வேண்டியது முக்கியம். உங்களுக்குள் முதலில் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் அடுத்தவர் மீது முயற்சி செய்து அன்புடன் இருக்க விரும்பினால் அப்படி அது நடக்காது. எனவே ஒவ்வொருவரும் தாங்கள் முதலில் ஆனந்தமும், களிப்பும் மிகுந்தவராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்குள் முதலில் நீங்கள் ஆனந்தமாக இல்லாமல் வெறுமனே நல்ல மனிதர்களை உருவாக்கும் முயற்சி என்றைக்குமே சரியாக பலன் அளித்ததில்லை.

மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது அற்புத மனிதர்களாக இருக்கின்றனர். ஆனந்தமானது அனைத்து தீமைகளுக்கும் எதிரான காப்பீடாக இருக்கின்றது. மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இயல்பாகவே அன்பையும் ஆனந்தத்தையும் பொழிகின்றனர். எனவே மனிதர்களை உண்மையாகவே ஆனந்தம் கொண்டவர்களாகச் செய்வதுதான் என்னுடைய ஒட்டுமொத்த வேலையாக இருக்கின்றது.

அதற்கு ஆன்மீக செயல்முறை அவசியமாக இருக்கிறது. ஆன்மீகம் என்றால் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வது என்று பொருளல்ல. ஆன்மீகம் என்றால் முழுஅளவில் நீங்கள் உயிரோட்டமாக இருப்பதுதான். வாழ்க்கையின் மையம் வரையில் உயிர்ப்புடன் இருப்பது. நீங்கள் ஐந்து வயதாக இருக்கும்போது எவ்வளவு உயிர்ப்புடனும், முழுமையான ஆனந்தத்துடனும் இருந்தீர்கள் என்பதுடன் இப்போது எந்த அளவு உயிர்த்தன்மையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறீர்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் அளவு குறைந்து காணப்படுகிறதா அல்லது அதிகரித்துள்ளதா?

வயது கூடுவதனால், உடல்திறன் குறையலாம். ஆனால் மகிழ்ச்சியின் அளவும், உயிர்த்துடிப்போடு விளங்கும் தன்மையும் குறையத் தேவையில்லை.
பெரும்பாலான மக்களுக்கு அது மிகவும் கீழ்நிலையில் உள்ளது. ஆனால் அது அப்படி இருக்கக் கூடாது. வயது கூடுவதனால், உடல்திறன் குறையலாம். ஆனால் மகிழ்ச்சியின் அளவும், உயிர்த்துடிப்போடு விளங்கும் தன்மையும் குறையத் தேவையில்லை. ஆனால் வயதாக வயதாக உங்களுடைய மகிழ்ச்சியின் அளவும், உயிர்த்துடிப்பும் குறைந்து கொண்டே போகிறது என்றால், நீங்கள் தவணைமுறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதானே அர்த்தம். இது எதனால் என்றால் வாழ்வின் குறிப்பிட்ட சில அம்சங்களில் மட்டும்தான் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வில்லையென்றால், நீங்கள் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ முடியாது. எனவே உங்கள் மகிழ்ச்சியும் உயிர்த்துடிப்பும் அதிகரிக்க ஆன்மீகத் தேடுதலும் உதவுகிறது.

ஆன்மீகம் என்பது எப்போதும் தாகமும், தேடுதலும் உள்ளடக்கியது. அதனால்தான் ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் ‘நான் தேடுதலில் உள்ளேன்’ என்று கூறுகிறார்கள். மாறாக, ‘நான் மத நம்பிக்கை கொண்டவன்’ என்று கூறும்போது, ஏதோ ஒன்றில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. ஏனென்றால், நம்பிக்கை என்பது உங்களுக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து ஒரு முடிவுக்கு வருவது. அதற்கு மாறாக தேடுதல் என்று கூறும்போது எனக்குத் தெரியாது என்று உணர்ந்து தேட முயற்சிப்பது.

துரதிருஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் நம்பிக்கை முறைகளையே ஆன்மீகம் என்று தவறாகக் கருதிக் கொள்கின்றனர். நீங்கள் எதையோ ஒன்றை ‘இதுதான்’ என்று உறுதியாக நம்ப ஆரம்பிக்கும் கணத்திலேயே உங்களுடைய வாழ்வின் போக்கில் ஓரளவு இறுக்கத்தைப் புகுத்தி விடுகிறீர்கள். அப்போது அங்கு தளர்வு நிலை இருக்காது. உங்களுக்குள் இறுக்கமாக இருப்பது என்றைக்குமே ஆன்மீகம் அல்ல.

எப்போது உங்களுக்குத் தெரியாது என்று உணர்ந்து ஒப்புக் கொள்கிறீர்களோ, அப்போது உங்களுக்குள் நீங்கள் தளர்வாக இருக்கிறீர்கள். எப்பொழுதெல்லாம் நீங்கள், “இது எனக்குத் தெரியும்” என்று நம்புகிறீர்களோ அப்பொழுது உங்களுக்குள் இறுக்கம் வந்து விடுகிறது. இந்தக் கடுமை உங்கள் செயல்களில் மட்டும் இருப்பதில்லை. உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களிலும் இந்தக் கடுமையைப் பரவ விடுகிறீர்கள். இந்தக் கடுமைதான் உலகின் பெரும்பாலான துன்பங்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

மனிதர்கள் எப்படி இருக்கின்றனரோ, அதே விதமாகத்தான் சமூகமும் இருக்கும். ஆகவே, தங்கள் கருத்துக்களிலேயே சிக்கிப் போகும் மனிதர்களைக் காட்டிலும் வளைந்து கொடுக்கும் தன்மை, திறந்த மனத்துடன் இருக்கும் தன்மை கொண்ட மனிதர்களையே நாம் உருவாக்கத் தேவையிருக்கிறது. தங்களுக்குள் ஆனந்தமாக இருக்கும் மனிதர்கள்தான் வளைந்து கொடுக்கும் தன்மை, தளர்வு நிலை போன்றவற்றுடன் இருக்க முடிகிறது. எனவே நீங்கள் முதலில் ஆனந்தமானவராக மாறும்போது உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை ஆனந்தமானதாக மாறுகிறது. உங்களின் ஆனந்தமான சூழ்நிலையே அடுத்தவரின் மனத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்படி சமூகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆனந்தமானவராக மாறும்போது ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருப்பது இயல்பாகவே நிகழ்ந்துவிடும். அப்போது அந்த சமூகமே அற்புதமானதாக இருக்கிறது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert