Question: நேபாளம் முழுவதுமே ஒரு முழு சக்தி உடலாக மாற்றப்பட்டிருந்தது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் இதை எப்படி ஆன்மீக பலன்களுக்குப் பயன்படுத்தினார்கள்? அது போன்று இன்றும் சாத்தியமாகுமா? உலகம் முழுவதையும் சக்தியூட்ட முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை - வெற்றியடைந்த பரிசோதனை - மிகவும் அதிசயத்தக்க திறமை வாய்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த மனிதர்கள்தான் அதை அப்படி உருவாக்கினார்கள். இன்றைய நேபாளத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை முழு ஆன்மீக உடலாகவே மாற்றியிருந்தார்கள். அப்பகுதியின், முக்கியமான இடங்களில் கோவில்களை உருவாக்கியிருந்தார்கள். பருப்பொருளான உங்கள் உடல், உணவைச் சேர்த்து வைத்ததால் உருவானது. ஆனால் சாப்பிட்ட உணவை சதையாகவும் ரத்தமாகவும் மாற்றுவதற்கு உங்களுக்கு ஒரு சக்தி உடல் தேவை. இதேபோல பிரம்மாண்டமான ஒரு சக்தி உடலை நேபாள நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உருவாக்கினார்கள். அதன்மூலம் அப்பகுதியின் அனைத்து மக்களும் ஒரு புனிதமாக்கப்பட்ட இடத்தில் வாழ முடிந்தது.

என்னுடைய கனவு என்ன என்று நீங்கள் கேட்டால், இந்த கிரகம் முழுவதையும் சக்தியூட்டுவதுதான் என்று சொல்வேன்.

ஞானோதயம் பெற்ற ஒவ்வொரு மனிதருடைய கனவும் என்னவென்றால், எல்லா மனிதர்களும், நடந்து செல்லும் ஊர்ந்து செல்லும் உயிர்களும், ஒரு புனிதமாக்கப்பட்ட இடத்தில் வாழவேண்டும் என்பதே. நேபாளம் போன்ற முயற்சிகள் இந்தியாவின் தெற்குப் பகுதியிலும் தமிழ்நாட்டிலும் நடந்தன. வட இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் நடந்தன. ஆனால் படையெடுப்புகளின் காரணமாக பெரும்பாலானவை அழிந்துவிட்டன. தென் இந்தியாவில் அப்படியே அழியாமல் உள்ளன. ஒவ்வொரு ஞானோதயம் பெற்ற மனிதனின் கனவும் இது போன்ற இடங்களை உருவாக்குவதுதான். ஏனென்றால், எத்தனை போதனைகள், பழக்கங்கள், வழிகள் நீங்கள் மக்களுக்கு உருவாக்கித் தந்தீர்கள் என்பது முக்கியமல்ல. அதைவிட நீங்கள் ஒரு கருப்பை போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். அங்கு மக்கள் இயல்பாகவே புத்துயிர் பெற்று மேலும் வளர்வார்கள். சாதாரண மக்களுக்கு தாங்களே சாதனா செய்வது, தங்களுடைய உடல் என்பதைத் தாண்டி மிக உயர்ந்த நிலையை எட்டுவது என்பது முற்றிலும் முடியாத காரியம் அல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் அதைச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் வாழ்க்கை அவர்களைச் சுற்றி உள்ள இயற்கை சக்திகளால் முடிவு செய்யப்படுகிறது.

ஆன்மீகத்தின் குறிக்கோளே இயற்கையின் எல்லா விதமான கட்டுப்பாடுகளையும் கடப்பதுதான். இயற்கைதான் உங்களுக்கு உடலைத் தந்தது. இயற்கைதான் உங்களுக்கு உயிரையும், வாழ்வதற்கு இந்த பூமியையும் கொடுத்தது. ஆனால் நீங்கள் அவளைக் கடந்து செல்ல விருமபினால், அவ்வளவு எளிதாக அவள் உங்களை கடக்கவிட மாட்டாள். எனவே நீங்கள் மிகவும் விழிப்புடன் குறிப்பிட்ட சக்திநிலையுடன் செல்ல வேண்டும். அப்போதுதான் அவளால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. இல்லாவிட்டால் உங்களை நிறுத்துவதற்கு அவளிடம் லட்சக்கணக்கான வழிகள் இருக்கின்றன.

எனவே புனிதப்படுததப்பட்ட ஒரு இடத்தை ஏற்படுத்துவதன் மூலம், உங்களைச் சுற்றி உள்ள சூழ்நிலை, உடல்தன்மையை கடந்து போக உங்களைத் தொடர்ந்து தூண்டிவிட வேண்டும். இதுதான் இப்போது நோக்கமாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் நீங்கள் இது போன்ற இடங்களைக் காணலாம். இதற்காக அற்புதமான கோவில்களைக் கட்டியிருக்கிறார்கள். இவற்றைக் கட்டியவர்களில் பலர் சிறு குடிசைகளில் வாழ்ந்தனர். ஆனால் இத்தனை பிரமிக்கத்தக்க கோவில்களைக் கட்டினர். ஏனென்றால், வசதிகள் உள்ள வீட்டில் வாழ்வதைவிட புனிதப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ்வது மிக முக்கியமானது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தெருவிலும் ஐந்து கோவில்கள் இருக்கும். ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுவதற்காக அல்ல, ஆனால் இன்று அவை அவ்வாறு மாறிக் கொண்டிருக்கின்றன. இதன் குறிக்கோள் என்னவென்றால், இந்த மண்ணில் நடக்கும் எந்த ஒரு உயிரும் புனிதப்படுத்தப்பட்ட இடத்திற்கு வெளியே இருக்கக்கூடாது என்பதுதான்.

இந்த பெரிய கனவு நிறைவேறும் நிலை பல முறை வந்தபோதும், அது கீழே இழுத்து தள்ளப்பட்டுவிட்டது. மீண்டும் நாம் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். என்னுடைய கனவு என்ன என்று நீங்கள் கேட்டால், இந்த கிரகம் முழுவதையும் சக்தியூட்டுவதுதான் என்று சொல்வேன்.