இந்த வார சத்குரு ஸ்பாட்டில், உலகை பிரதிஷ்டை செய்ய இருக்கும் 3 வழிகளைப் பற்றி விவரிக்கிறார் சத்குரு. அதையும் இதையும் பிரதிஷ்டை செய்வதைவிட மனிதர்களை பிரதிஷ்டை செய்வதைப் போல் சிறந்தது ஒன்றுமில்லை என்று ஒவ்வொரு மனிதனும் தியானம் செய்யவேண்டியதன் அவசியத்தையும் அடித்துரைக்கிறார்....

ஒவ்வொரு முறை நான் பயணிக்கும்போதும், நான் மிக தீவிரமான, இடைவெளி இல்லாத ஒரு திட்டத்துடன் பயணிக்கிறேன். ஆனால், ஆசிரமத்திற்கு திரும்பும்போது, இவ்விடத்திலிருந்து ஏன் செல்கிறேன் என்கிற உணர்வே மிஞ்சுகிறது. பிரதிஷ்டை செய்யப்பட்ட ஓரிடத்தில் வாழ்வதன் மகத்துவம் இது. பிரதிஷ்டை ஒரு மனிதனுக்குள் என்ன செய்யும் என்பதை விவரிக்க வேண்டுமென்றால்... தொட்டியில் நடப்பட்ட செடிகள் எவ்வளவு ஊட்டச்சத்துடன் பாதுகாக்கப்பட்டாலும், அவைகள் ஒரு வரையறைக்குள் மட்டுமே இருக்கின்றன. அவற்றின் இயல்பிலேயே இதனை காணலாம். அவற்றை தொட்டியிலிருந்து வெளியில் எடுத்து, செழிப்பான பூமியில் இட்டால், முரட்டுத்தனமான ஒரு பரவசத்தில் அவை ஆழும். இதனை நான் பெருமகிழ்ச்சியுடன் பலமுறை கண்டிருக்கிறேன்.

அந்த உயிரின் தன்மை முழுமையாய் மாறிப் போகும் விதத்தில் ஏதோவொன்று நடந்துவிடுகிறது. முன்னம் செய்யப்பட்டது போல, அவற்றை நாம் பாதுகாப்பதில்லை, தண்ணீர் விடுவதில்லை. சரியான மண்ணும், தன்னை நீட்டித்துக் கொள்ள கிடைத்த சுதந்திரமும் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. அதேபோல ஒரு மனிதராய், உங்கள் உடல், சமூக, உணர்வுசார்ந்த நல்வாழ்விற்கு குறிப்பிட்ட விதமான சூழ்நிலை தேவைப்படுகிறது. ஆனால், உள்வளர்ச்சிக்கு வித்தியாசமான ஒரு சூழ்நிலை தேவை.

வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் உகந்த வெளிசூழ்நிலையை நீங்கள் உருவாக்கினாலும், உண்மையில் அழகாய் வாழ, உங்கள் உயிரின் அடிப்படை அம்சம் பக்குவப்பட வேண்டும். உண்பதிலிருந்து உறவுமுறை வரை, அத்தனை விஷயங்களையும் நீங்கள் அசிங்கமாக நடத்தலாம் அல்லது அழகாய் நடத்தலாம். நன்நடத்தையை வெளிப்படுத்த விரும்பும் உங்கள் முயற்சியை சார்ந்தது அல்ல இது, உங்கள் உயிரின் முதிர்ச்சியை பொறுத்த அம்சம் இது. முதன்முதலில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு விஷயம், ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சிக்கும் சமநிலைக்கும் உங்களை எடுத்துச் செல்வதில் உங்கள் கவனம் இருக்கவேண்டும். அதன் விளைவாக, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் இயல்பாகவே அழகானதாய், அற்புதமானதாய், பகட்டு இல்லாததாய் இருக்கும்.

நாம் உலகை பிரதிஷ்டை செய்யவேண்டும் என எண்ணுகையில், அதற்கு மூன்று அடிப்படை வழிகள் உள்ளன. ஒரு வழி, நினைவுச் சின்னம் போன்ற இரு சக்தி ரூபங்களை உருவாக்குவது. பூமியின் வடக்கு பகுதிக்கு ஒன்று, தெற்கு பகுதிக்கு மற்றொன்று. பூமியின் பெரும்பாலான பகுதிகளை இவற்றால் கவர்ந்துவிட முடியும். இது எப்படி வேலை செய்யும் என்பதை விவரிக்க வேண்டுமென்றால் - ஒரு மின்னல் கடத்தியின் வரம்பு 15 டிகிரி என வைத்துக் கொள்வோம், அதனை நீங்கள் குறைந்த உயரத்தில் நட்டால், அதனால் குறைந்த பரப்பை மட்டுமே கவர இயலும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மின்னல் கடத்தியின் வரம்பைத் தாண்டி விழும்போது, மின்னல் தாக்கும். மின்னல் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் டிகிரியிலேயே அதிக பரப்பினை அது கவரவேண்டுமென்றால், அதனை நீங்கள் உயர்த்தி வைக்கவேண்டும். அதேபோல, ஒரு சக்திரூபம் உலகின் பெரும்பாலான பகுதிகளை கவரவேண்டுமென்றால், நாம் ஒரு நினைவுச் சின்னம் போன்றதொரு அமைப்பினை உருவாக்க வேண்டும். இன்றைய உலகில் அதனைச் செய்யவிட மாட்டார்கள் என நினைக்கிறேன். அதைத் தவிர, அப்படிப்பட்ட ஒன்றை உருவாக்குவதற்கு, குறைந்தபட்சம், அரசு மற்றும் பெருவணிக நிறுவனங்களின் முதலீடும் ஈடுபாடும் தேவை.

உலகை பிரதிஷ்டை செய்ய இன்னொரு வழி சக்திவாய்ந்த ரூபங்களின் தொகுப்பினை உருவாக்குவது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இப்படித்தான் செய்திருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்த சக்திகள் இவற்றை சிலை வழிபாடு என்று உதறித்தள்ளின. இந்திய துணைக்கண்டம் முழுவதும் உள்ள முக்கியமான சக்தி மையங்களை கடந்த காலத்தில் உருவாக்கியவர்கள், வடிவியல் ரீதியில் உயர்ந்த துல்லியத்துடன் அமைத்திருக்கிறார்கள் என்பதை சமீப காலத்தில்தான் மக்கள் உணரத் துவங்கியுள்ளனர்.

அவை அமைந்திருக்கும் அட்சரேகை தீர்க்கரேகையை பார்த்தால், அவை துல்லியமாய் இணைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு யோகிகளால் இவை உருவாக்கப்பட்டுள்ளன. அவை இயங்கும் முறை அறிந்ததால், அவர்கள் பிரதிஷ்டை செய்த பொருட்கள் ஒன்றுடன் ஒன்று துல்லியமாய் இணைக்கப்பட்டிருந்தன. சக்திரூபங்களின் தொகுப்பினை உருவாக்குவது அது அமைக்கப்பட்டுள்ள முழு பகுதியின் மீதும் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தும்.

மற்றொரு வழி, மக்களை பிரதிஷ்டை செய்வது. இருப்பதிலேயே மிகச் சுலபமான வழியும் இதுதான். ஆனால், பாறைகளைப் போல் மனிதர்களை நம்பமுடியாது. சமீபத்தில் நடைபெற்றதாய் அழைக்கப்படும் பெருமூளை வளர்ச்சியை, மனிதர்களுக்கு கையாள தெரியவில்லை. இது மிகப்பெரிய பிரச்சனையாய் இருக்கிறது. புதிதாய் வந்துள்ள செல்போனிலிருந்து அவர்களால் கைகளை நீக்க முடியாததைப் போல, பரிமாண வளர்ச்சிப்படி பெருமூளை வளர்ச்சி என்பது ஒப்பீட்டளவில் புதியது.

அவர்களுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் அவர்களுக்கு கையாள தெரிவதில்லை. தங்களுடைய அறிவுடன் அவர்கள் உடன்பாட்டிற்கு வரவில்லை. அவர்களால் நிதானத்துடன் இருக்க இயலவில்லை. நாம் வழங்கும் ஷாம்பவி மஹாமுத்ரா வெறும் பயிற்சியல்ல - அதுவொரு பிரதிஷ்டை. அதனுடன் நீங்கள் இருந்தால், நீங்கள் எதுவும் செய்யாமலே விஷயங்கள் நிகழும்.

நம் வாழ்வில், நேரத்திற்கு வரம்பு இருப்பதால் நான் இரண்டையும் செய்கிறேன். சக்திரூபங்களையும் பிரதிஷ்டை செய்கிறேன், மக்களையும் பிரதிஷ்டை செய்கிறேன். பிரதிஷ்டை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதால், பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் வாழ்வதே மிக உயர்ந்த நிலை என்பதை மக்கள் பார்ப்பதற்கு வழிபிறக்கும். இதன்மூலம், பிரதிஷ்டை நிலையில் வாழ்வதே உயர்ந்த வழி என்பதை மக்கள் பார்ப்பார்கள். குடிப்பதல்ல, உடலுறவல்ல, மற்றைய சுகங்கள் அல்ல - உள்முகமாய் திரும்புவதே உச்சகட்ட சந்தோஷத்தை அளிக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சுற்றுச்சூழலும் சூழ்நிலையையும் நாம் உருவாக்கினால், பிற கவனச் சிதைவுகளை பிற்போக்கான நடவடிக்கை என எண்ணத் துவங்கிவிடுவார்கள். முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே மனிதனின் நாட்டமாய் இருக்கிறது. உண்மையை தேடுவது, வாழ்வின் மிக உயர்ந்த பரிமாணங்களை அறிய துடிப்பதே ஆன்மீகச் செயல்முறை. இது பிரதான நீரோட்டமாய் ஆகவேண்டி இருக்கிறது. தற்சமயம் இது பெரிதாய் கவனத்தை ஈர்க்காத ஒரு அம்சமாய் இருக்கிறது. விளிம்பில் வெகுகாலமாய் நீங்கள் நின்றிருந்தால், பிறர் உங்களைப் பார்த்து நகைக்கக்கூடும், அதனை தாங்கிக்கொள்ளும் குணம் இல்லாவிட்டால், பிரதான நீரோட்டத்தில் கலந்துவிட வேண்டுமென்று விழைவீர்கள்.

"சத்குரு இது அற்புதமாய் இருக்கிறது. ஆனால், நான் இயல்பு வாழ்க்கைக்கு சென்றால்..." என்று பலபேர் என்னிடம் நீட்டிமுழங்குவது உண்டு. "என்ன? இது உண்மை இல்லையா? நான் இவ்வாறு வாழ்கிறேனே அது இயல்பு இல்லையா?" என நான் கேட்பதுண்டு. பாரிலும், அலுவலகத்திலும், வீட்டிலும் நடப்பது மட்டுமே இயல்பு என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாம் வெறும் ஏற்பாடுகள் மட்டுமே. உயிரின் அடிப்படை உங்களுக்குள் இருக்கிறது, அதுவே இயல்பானது, உண்மையானது. உண்மை என்பது ஒன்றுதான் - உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான். பொய்கள் பல கோடி. பலகோடி பொய்களை உங்களால் உருவாக்க முடியும், ஆனால், ஒரேயொரு உண்மை மட்டுமே உள்ளது. ஒவ்வொரு வீட்டையும், கிராமத்தையும், நகரத்தையும் மனித வளர்ச்சிக்கு உகந்த கண்கவர் இடமாக உருவாக்குவது மிகமிக முக்கியம்.

"கண்கவர்" என்று நாம் சொன்னாலே, லாஸ் வேகாஸ் நகரைப் போல ஆர்ப்பாட்டமாய் இருக்கவேண்டும் என்று மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். கண்களை குருடாக்கும் நியான் லைட்டுகளின் வெளிச்சத்தில் "கண்கவர்" அம்சம் இல்லை. உங்களுக்கு இருக்கும் ஒவ்வொரு நிர்பந்தத்திற்கும் உங்களை பலிகடா ஆக்குவதல்ல. உங்களுடைய நிர்பந்தத்திலிருந்து நீங்கள் வெளிவந்தால், இயற்கையின் சுழற்சியிலிருந்து வெளிவந்தால், வாழ்க்கை கண்களை கவர்வதாய் ஆகிவிடும்.

சரியான சூழ்நிலையை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும்? ஒன்று, வீடுகளை பிரதிஷ்டை செய்யலாம், முடிந்தால் நகரங்களையும் பிரதிஷ்டை செய்யலாம். நாம் எப்போது முழு உலகையும் பிரதிஷ்டை செய்யப் போகிறோம்? வெற்றுக் கனவுகளில் ஈடுபடுபவன் நானல்ல. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நம்மால் செய்யமுடியும். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் நாம் சிலவற்றை பிரதிஷ்டை செய்திருக்கிறோம். ஆனால், முக்கியமான விஷயம் மனிதர்களை பிரதிஷ்டை செய்வது. அவர்களால் சூழ்நிலையை மாற்ற முடியும். வாழ்வில் சமநிலையையும், உயிர்துடிப்பையும் வெளிப்படுத்தும் மனிதனாய் நீங்கள் மாறிவிட்டால், உலகமும் மெல்ல மாறிவிடும்.

உலகில் ஒரே ஒரு பிரச்சனைதான் உள்ளது - மோசமான மனிதர்கள் அதிகமாய் உள்ளனர். மற்ற அனைத்தும் அற்புதம். அதிக எண்ணிக்கையிலான மனிதர்களை நாம் பிரதிஷ்டை செயதால், அது உலகை மாற்றும். தற்சமயம், நாம் நமது ஈஷா யோகா வகுப்புகளின் மூலம் செய்ய முனைவது அதைத்தான். தனிப்பட்ட மனிதர்களை உயிருள்ள ஆலயங்களாய் மாற்ற நினைக்கிறோம். இது நிகழ்ந்தால், உலகில் மாற்றம் நிகழும். தங்கள் நேரம் கண்கவரும் விதமாய் அமைய ஒவ்வொரு தலைமுறையும் உழைக்க வேண்டும். ஒருமுறை செய்துவிட்டால், காலத்திற்கும் நிலைத்திருக்கும் தீர்வு என்று எதுவுமில்லை. இது நமது நேரம் - அதனை கண்களை கவர்வதாய் மாற்றிக் கொள்வது நம்மிடத்தில் இருக்கிறது. நாம் இதனை நிகழச் செய்வோம்.

Love & Grace