உலக சுற்றுச்சூழல் தினம்… உணர்த்தும் செய்தி என்ன?

உலக சுற்றுச்சூழல் தினம்... உணர்த்தும் செய்தி என்ன?, ulaga sutruchoozhal dinam unarthum seithi enna?

ஜூன் 5ஆம் தேதியான இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த தருணத்தில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியதென்ன, தவிர்க்க வேண்டியதென்ன என்பது குறித்த ஒரு பார்வை இங்கே!

சுற்றமும் சூழலும் என்றால், சுற்றியிருக்கும் குடும்பங்களும் உறவுகளும் மட்டுமே என்ற பார்வை சிலருக்கு உண்டு; சிலரோ சுற்றியிருக்கும் தங்களது வீடு, வாகனம், சொத்துக்கள் போன்றவற்றை மட்டுமே சுற்றுச்சூழல் என எண்ணிக்கொள்கிறார்கள். உண்மையில், நம் சுற்றுச்சூழலில் இவையெல்லாம் மிகச்சிறு அங்கங்கள் மட்டுமே! மனிதன் உயிர்வாழ்வதற்குத் தேவையான மண், மரம், செடி-கொடிகள், காற்று, நீர், ஆகாயம் போன்ற அனைத்தும்தான் சுற்றுச்சூழலில் மிகப் பிரதானமான அங்கமாகின்றன. இதை அறிந்துகொள்ளாமல், நம்மில் பலர் தங்களுக்கும் இந்த பூமிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுபோல நடந்துகொள்கிறார்கள். தங்களது நாசித் துவாரத்தை சில விநாடிகள் இறுகப்பிடித்துப் பார்க்கையில், பிராணவாயு வளிமண்டலத்திலிருந்து உடலுக்கு செல்லவில்லை என்றால் நாம் உயிர்வாழ இயலாது என்பது நிச்சயம் புரியும்!

நம்மைச்சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக்கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே இருந்தது.
சத்குரு அவர்கள் இதுகுறித்து சொல்கையில், “நமது ஒருபாதி நுரையீரல் மரங்களில்தான் தொங்கிக்கொண்டிருக்கின்றது” என்று கூறுவார். நாம் வாங்கும் உள்மூச்சான ஆக்ஸிஜன் மரங்களின் வெளிமூச்சாக உள்ளது என்பதை பலரது விழிப்புணர்வில் கொண்டு வருவது இத்தருணத்தில் அவசியமாகிறது.

நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் கூட பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து, அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர். உதாரணமாக மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி என்றால் மலையையே அவர்கள் கடவுளாகத்தான் பார்த்தார்கள். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றால் கடலை தேவதையாக வழிபட்டனர். நம்மைச்சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக்கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே இருந்தது.

இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை. இந்நிலைக்குக் காரணம் என்ன என்பதை சற்று ஆராய முற்பட்டோமானால், முதற்காரணமாக நம்முன்னே தெரிவது மக்கட்தொகை பெருக்கம்தான். சுதந்திரம் பெரும் தருணத்தில் 33 கோடியாக இருந்த நம் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு மேல் தற்போது பெருகியுள்ளதைப் பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலம், நீர், காற்று மட்டுமல்ல, ஆகாயமும் கூட நமக்கு போதாமல் போய்விடக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்.

காரணங்களும் தீர்வுகளும்

மக்கட்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகியதால் இயல்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகின. இதன் கழிவுகள் அனைத்தும் காற்றுமண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்துவருகின்றன. எனவே, நாம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு முதன்மையாக செய்யவேண்டியது மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியதுமே ஆகும்.

அடுத்த படிகளாக, நாம் ஒவ்வொருவரும் இந்த காற்று மண்டலத்தில் பதிக்கும் கார்பன் கால்தடங்களை குறைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட அளவு கார்பனை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கிறான். தற்போது உள்ள நிலவரப்படி கணக்கிட்டால், நாம் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடுசெய்து நாம் விட்டுச் செல்லும் ‘கார்பன்’ கால் தடங்களைக் குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.

பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.

பொதுவாக நாம் மகிழ்வுந்து, இருசக்கர வாகனம் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். 100 பேர் 100 வாகனங்களில் செல்வதற்கு பதிலாக அனைவரும் ஒரு பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும் அல்லவா?! அதேபோல் புகை கக்கும் வாகனங்களுக்கு பதிலாக மிதிவண்டியை கூடுமானவரை பயன்படுத்தலாம். இதனால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

செய்தித்தாள் ஒன்றை, 9 முறை மறு சுழற்சி செய்ய முடியும் எனச் சொல்கிறார்கள். எனவே, செய்தித்தாள் படித்துவிட்டுக் கீழே வீச வேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறு சுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம் என சொல்லப்படுகிறது. எளிமையான வாழ்க்கை என்பது சுற்றுச்சூழலைக்காப்பதற்குத் துணைநிற்கும்.

மறுசுழற்சி, மறு பயன்பாடு என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. காடுகளை அழிப்பதில் பேப்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகவே, பேப்பர்களைப் பயன்படுத்தும்போது நிதானமாகச் செயல்படுவது நல்லது. தட்டச்சு செய்யும்போது இரண்டு பக்கங்களிலும் செய்யலாம்.

பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.
இன்று எளிதாகக் கிடைக்கக்கூடிய உலோகம் அலுமினியம். சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் அலுமினியத் தாள்கள், பாட்டில் மூடிகள், மாத்திரைகள் இருக்கும் அலுமினிய அட்டைகள், பழைய பாத்திரங்கள் ஆகியவை மீண்டும் பயன்படும் புதிய பொருட்களாக மாற்றப்படலாம். இவற்றை சேமித்து வைத்து, சேகரிப்பவரிடம் கொடுக்கலாம்.

புகைபிடித்தலைத் தவிர்க்கலாம். அது புகைப்பவரின் உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் உடனிருப்பவருக்கும் தீங்கை விளைவிக்கும். ஆண்டுதோறும் அமெரிக்காவில் புகை பிடிக்காத 4,000 பேர் புற்றுநோய் வந்து இறக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கண்ணாடி, மண்ணோடு மக்க குறைந்தது 100 ஆண்டுகள் ஆகும். எனவே, கண்ணாடியை மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பவேண்டும். நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் என்பது மண்ணில் மக்கக்கூடியதே அல்ல. பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களைக் கீழே வீசாமல் மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பலாம். பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும்போது, வீட்டில் இருந்தே பை எடுத்துச் செல்லலாம்.

இரசாயன உரங்களைத் தவிர்த்து, கால்நடை எரு, பஞ்சகாவியம் போன்ற இயற்கை ஊக்கிகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதன்மூலம், மண்வளமும் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்!

இயற்கையின் பாதைக்கு இந்திய விவசாயிகளைத் திருப்பும் முயற்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் வழிகாட்டுதலில், ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் தன்னார்வத்தொண்டர்கள் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி அளித்து வருவதோடு, அனைவருக்கும் தொடர்ந்து ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்கி வருகின்றனர்.

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம், தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert