நிறுவனம் என்ற ஒன்று இருந்தாலே பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அங்கே உடன் பணிபுரிபவர்களை கையாள்வது சுலபமான செயல் அல்ல. அதை எப்படி கையாள்வது என்று சத்குருவிடம் கேட்டபோது...

Question: சத்குரு, நான் ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறேன். அதில் பணிபுரிபவர்கள் நான் சொல்வதைக் கேட்காதபோது, நான் அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அன்பாகவா, கடுமையாகவா? அன்பாக சொல்லும்போது, எதிர்பார்த்த முறையில் வேலை நடப்பதில்லை, நான் இதனை எப்படிக் கையாள்வது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நீங்கள் அன்பை மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அன்பு என்றால், இனிமையாகப் பேசுவது, அணைத்துக் கொள்வது, முத்தமிடுவது என்ற ரீதியில் புரிந்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்தும்போது, புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்வது அவசியம். இந்த உலகிற்கு தேவைப்படுவது புத்திசாலித்தனம்தான், மென்மையான மனம் அல்ல. உங்கள் நல்ல தனங்கள்தான் இந்த உலகை ஏற்கனவே தேவையான அளவு அழித்துவிட்டது. இந்த உலகிற்கு, கெட்ட மனிதர்களை விட நல்ல மனிதர்களால் தான் அதிகக் கேடு விளைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

நான் ஒரு பண்ணை வைத்திருந்தேன். கிணற்றிலிருந்து டீசல் இன்ஜின் மூலம் நீர் இறைத்து பாசனம் செய்வது வழக்கம். ஒருமுறை அந்த இன்ஜின் ரிப்பேராகிவிட்டது. அதை சரி செய்வதற்கு அருகில் இருந்த கடையொன்றில் கொடுத்தேன். நாளை நாளை என்று சொல்லி அந்த மனிதர் 6 நாள் செய்துவிட்டார். இத்தனைக்கும் அவர் ஒரு விவசாயியும் கூட. நீர் இல்லாததால் என் பண்ணையில் பயிர் வாடுவதும் அவருக்குத் தெரியும். 6வது நாள் நான் கடுமையாகக் கேட்டபோது அவர் சொன்னார், இல்லை நீங்கள் தினமும் சிரித்துக் கொண்டே கேட்டீர்கள், எனவே அவசரம் இல்லை போலிருக்கிறது என்று நானே நினைத்துக் கொண்டேன் என்று மென்று விழுங்கினார். அடுத்தநாள், பண்ணைக்கு காலை 4 மணிக்கு சென்றிருந்தபோது, அங்கு டீசல் இன்ஜின் ரிப்பேர் சரிசெய்யப்பட்டு பொருத்தப்பட்டிருந்தது. அதாவது மிகவும் அறிவுள்ள செயல் என்றால் மகிழ்ச்சியாக, அமைதியாக, அன்பாக இருப்பதுதான். ஆனால், அதற்காக ஒவ்வொருவர் மீதும் காதலில் விழுவது அல்ல. எனவே நிறுவனத்தை முடிந்த அளவிற்கு திறமையுடன், அறிவுடன் நடத்துங்கள். இன்னொரு நிறுவனம் போல உங்கள் நிறுவனத்தை நீங்கள் நடத்தமுடியாமல் போகலாம், அது முக்கியமல்ல, உங்கள் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்றபடியாவது நடத்திச் செல்லவேண்டும், இல்லையா?

Question: என் குடும்பத்தை நிர்வகிப்பது எனக்கு பெரிய மன அழுத்தத்தைத் தருகிறது, நான் மேலும் திறமையாக என் குடும்பத்தை நடத்திச் செல்லமுடியுமா?

சத்குரு:

புழு, பூச்சி, எறும்பு போன்றவை கூட சிறிய மூளையை வைத்து இந்த விஷயத்தில் திறமையாக நடந்து கொள்கின்றன. எனவே பெரிய மூளையை வைத்திருக்கும் மனிதனுக்கு சம்பாதிப்பதும், குடும்பம் நடத்துவதும் ஒரு விஷயமாகவே இருக்கக்கூடாது. ஆனால் இயற்கையிலிருந்து நாம் மிகவும் மாறுபட்டு இருப்பதால்தான் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகிவிட்டது. சிறிய விஷயங்களில் கூட மனிதன் மிகவும் தடுமாறுகிறான். அவன் அறிவுக்கு இந்த விஷயம் மிகவும் எளிமையான ஒரு விஷயமாக இருக்க வேண்டும். இத்தனைக்கும் மனிதர்கள் மிகவும் புத்திசாலிகள் இல்லையா? ஒரே மனைவிதான்!! ஒரு மனைவியையும் இரு குழந்தைகளையும் சமாளிப்பது மனித மூளையின் திறனுக்கு மிகவும் அற்பமான ஒரு விஷயமாக இருக்கவேண்டும், இல்லையா? ஆனால் இந்த விஷயத்தில்தான் அறிவுரைகள், ஆலோசனைகள், பதற்றங்கள், பிரிவுகள் என்று ஏக களேபரம் செய்து கொள்கிறீர்கள்.

குடும்பம் என்பது இமயமலை அல்ல. இந்தக் குடும்பம் நீங்கள் விரும்பி உருவாக்கியது. ஆனால் பலரும் தங்கள் குடும்பத்தை இமயமலையையே சுமப்பது போல தங்கள் மீது சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு அற்ப விஷயத்தை கூட அறிவுபூர்வமாக அணுக முடிவதில்லை. அதை ஊதிஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். நீங்கள் ஒரு முயற்சி செய்யலாம், ஆசிரமத்திற்கோ அல்லது வேறெங்கோ சென்று நீங்கள் கற்ற யோக சாதனைகளை ஒரு வாரத்திற்கு செய்யலாம். ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்பு வரலாம், ‘ஒரு வாரமா, அப்படியெங்கே போகிறீர்கள்’ என்று. ஆனால் அப்படி 2, 3 முறை சென்று யோக சாதனைகளை செய்து வந்தால், அதற்கப்புறம் வீட்டிலேயே கேட்பார்கள், ‘அடுத்த முறை எப்போது போவீர்கள்’ என்று. ஏனென்றால் யோகப் பயிற்சிகளை செய்து வரும்போது, உங்கள் மனநிலை தெளிவாகவும், அற்புதமாகவும் மாறிவிடும். நீங்கள் எப்போதும் அப்படி இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புவார்கள், அப்படி எதிர்பார்த்துத்தானே உங்களை திருமணம் செய்து கொண்டார்கள்?