வெள்ளித் திரையில் பிரபலமான நடிகர் ஸ்ரீமன் உணவு சம்பந்தமாக தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத இரண்டு சம்பவங்களைக் கூறுகிறார்...

ஸ்ரீமன்:

திருப்பூருக்கு ஒரு படப்பிடிப்புக்காக நாங்கள் நான்கு பேர் இரவு சென்னையில் ரயில் ஏறினோம். நான்கு பேருக்குமே ரயிலில் ஏறும்வரை வேலை இருந்ததால் சாப்பிடவில்லை. சொல்லி வைத்தாற்போல் ரயிலிலும் சரியாக எதுவும் கிடைக்கவில்லை. காலை 3.30 மணிக்கு திருப்பூரை அடைந்தோம்.

actor sriman

எங்களை வரவேற்ற படப்பிடிப்புக் குழுவினர், ஒரு தங்கும் விடுதியில் எங்களை விட்டுவிட்டு, “பாவம் உங்க தூக்கம் கெட்டுப்போயிருக்கும். நல்லா ரெஸ்ட் எடுங்க. காலையில் காபியோடு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

அவர்களிடம், “எங்களுக்குப் பசி” என எப்படிச் சொல்வது? வயிற்றில் ‘கடமுடா’வோடு எப்படித் தூங்குவது? அவர்கள் போகும்வரை பேந்த பேந்த விழித்துவிட்டு, கிளம்பியவுடன் நாங்கள் ஒரு பக்கம் உணவைத் தேடிக் கிளம்பினோம். அந்தவேளையில் என்ன கிடைக்கும்?

அலைந்து, அலைந்து கடைசியில் ஒரு மசூதியின் வாசலில் நின்று கொண்டு இருந்தோம். அது ரம்ஜான் மாதம் என்பதால் தொழுகைக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். அதில் ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, “நீங்கள் நடிகர் ஸ்ரீமன்தானே? என்றார். நான் பரிதாபமாகத் தலையாட்டினேன். “எதற்காக இங்கே நிற்கிறீர்கள்?” என்று கேட்டார். நாங்கள் பரிதாபமாக எங்கள் சோகக் கதையைச் சொன்னோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர் சிரித்துவிட்டு எங்களைத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார். அவர் பெயர் சஜாத் ஹூசேன் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். வீட்டுக்கு அழைத்துப் போய் ஒரு விருந்து வைத்தார் பாருங்கள். பரோட்டா, புலாவ், பிரியாணி என வெளுத்துக்கட்டினோம். ஒரு இட்லியாவது கிடைக்காதா என அலைந்தவர்களுக்கு அப்படி ஓர் அறுசுவை உணவு!

அன்று அவர்கள் பரிமாறியதால் பரோட்டா அவ்வளவு சுவையாக, மென்மையாக ஏடு ஏடாக அற்புதமாக இருந்தது. இயல்பாகவே உணவு தயாரிப்பதில் ஆர்வமுள்ள நான், அதை எப்படிச் செய்தார்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். நீங்களும் செய்து பாருங்களேன்...

திருப்பூர் சாஃப்ட் பரோட்டா

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒன்றரை கப் அல்லது இரண்டு கப்
நெய் - ஒரு மேஜைக் கரண்டி
பால் - ஒரு மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

  • கோதுமை மாவுடன் முதலில் நெய், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.
  • பிறகு பால், தேவையான அளவு தண்ணீர்விட்டு சிறிது தளரப் பிசைந்துகொள்ளவும்.
  • அந்த மாவினை நன்றாக அடித்து மீண்டும் பிசைந்துவிட்டு, மாவினை ஈரத் துணியால் அரை மணி நேரம் மூடி ஊறவிடவும்.
  • ஊறிய மாவினை சிறிய சப்பாத்திகளாக 10 அல்லது 12 முறை மடித்து மடித்து மீண்டும் சப்பாத்தியாகத் திரட்டவும்.
  • இதை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய்விட்டு வாட்டி எடுத்தால், லேயர் லேயராக சூப்பர் பால் பரோட்டா ரெடி.

இதை அடித்துப் பிசைந்து மடித்துத் திரட்டுவதில்தான் இதன் சாஃப்ட் ரகசியம் உள்ளது.

இன்னொரு முறை பெங்களூர் போயிருந்தபோது தொண்டை அழற்சியால் ரொம்ப சிரமப்பட்டுக்கொண்டு இருந்தேன். அதனால் உடல்வலி, தலைவலி என வரிசையாக ஆரம்பித்தது. ஷுட்டிங்கிற்கு ஏதாவது பிரச்னையாகிவிடுமோ எனப் பயமாக இருந்தது. அப்போதுதான் என் பெங்களூர் நண்பர் சிவசங்கர் என்னை டின்னருக்கு அழைத்தான்.

“டேய், நானே ‘த்ரோட் இன்ஃபெக்ஷன்’ வந்து அவஸ்தைப்படறேன், இதுல விருந்தா?” என மறுத்தேன்.

“இதுதான் சமாசாரமா, வீட்டிற்கு வா. எல்லாம் சரியாயிடும்’’ என்றான். சரி, எப்படியாவது உடம்பு சரியானால் போதும் என அன்றிரவு அவர்கள் வீட்டிற்குப் போனேன். முதலிலேயே அவனுடைய அம்மாவிடம் என் உடம்பு பிரச்னையை அவன் சொல்லிவிட்டிருந்தான். அவர் என்னை அன்போடு வரவேற்று, எளிமையாக ஒரு சாப்பாடு போட்டார். மிளகு இஞ்சி ரசம், பருப்பு துவையல், மல்லிகைப்பூ சாதம். சுடச்சுட அந்த ரசத்தை ஊற்றிச் சாப்பிட தேவாமிர்தமாக இருந்தது. சாப்பிடும்போதே வேர்த்தது. அறைக்கு வந்து நன்றாகத் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தால் உடம்பு ‘கலகல’வென இருந்தது. முதல் வேலையாக சிவசங்கரின் அம்மாவிற்குப் போன் செய்து நன்றி சொன்னேன். படப்பிடிப்பிலும் உற்சாகமாகக் கலந்துகொண்டேன். இந்த ரசம்தான் இது.

பெங்களூர் மிளகு இஞ்சி ரசம்

recipe rasam

தேவையான பொருட்கள்:

நீர்த்தக் கரைத்த புளி தண்ணீர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று

அரைக்க:

மிளகு - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - மூன்று பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

  • அரைக்கக் கூறியுள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த விழுதை புளித் தண்ணீருடன் சேர்க்கவும்.
  • இதனுடன் உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் சமைத்து, தாளிக்கக் கூறியுள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்.
  • இறக்கிய பின் கொத்தமல்லி தழையைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.

பின்குறிப்பு: இந்த ரசம் சளி, உடல் சோர்வு, தொண்டை வலி போன்றவற்றை உடனே குணப்படுத்தும்.