சத்குரு:

இந்த இடம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, மிக நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக் கூடிய பிரமாண்டமான சக்தியுடன் இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தலைமுறையைச் சார்ந்த இங்குள்ள மக்கள் மிகவும் ஆனந்தத்துடனும் பெருமையுடனும் இங்கு ஈடுபட வேண்டும். ஏனெனில் இப்போது சில அனுகூலங்கள் இருக்கின்றன. இந்த அனுகூலங்கள் பிற்காலத்தில் இருக்காது. சக்திநிலை இருக்கும், வழிகாட்டுதல்கள் இருக்கும், ஆனால் இப்போதுள்ள அனுகூலங்கள் பிற்காலத்தில் இருக்காது.

துறவு என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும் ஷணத்திலேயே மக்கள் மாமியாரை துறப்பது பற்றியும் மனைவியை துறப்பது பற்றியும் அவர்களுக்கு பிடிக்காததை எல்லாம் துறப்பதைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு ஆன்மீக வழிமுறை அல்லது ஒரு ஆசிரமம் என்பது பொதுவாக துறவுக்கான ஒரு வழிமுறையாக இருக்கிறது. துறவு என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும் ஷணத்திலேயே மக்கள் மாமியாரை துறப்பது பற்றியும் மனைவியை துறப்பது பற்றியும் அவர்களுக்கு பிடிக்காததை எல்லாம் துறப்பதைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். வாழ்க்கையில் தங்களுக்கு துன்பம் தருபவற்றிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது இப்போது ஒரு ஜோக்காகிவிட்டது. புனிதத்திலும் புனிதமாக கருதப்படுகிற காசிக்கு இந்திய மக்கள் யாத்திரை செல்வது வழக்கம். காசிக்குச் செல்லும்போது நீங்கள் துறவு மேற்கொள்ள வேண்டும். நோக்கம் அதுதான். ஆனால் மக்கள் வழக்கம்போல் அதிலும் தந்திரத்தைக் கையாள்கின்றனர். இன்னமும் இந்துக்கள் மத்தியில் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. ஏராளமான இந்துக்கள் காசிக்கு பயணம் செல்லும்போது தங்களுக்கு பிடிக்காத ஒரு உணவுப் பொருளை அங்கு துறந்துவிட்டு வருவது வழக்கமாகிவிட்டது. பெரும்பான்மையோர் பாகற்காயை அங்கு துறந்துவிட்டு வருகின்றனர். உண்மையிலேயே இது நடக்கிறது. துறவு என்பது இதையோ அல்லது அதையோ விடுவது அல்ல. துறவு என்பது உங்கள் விருப்பு வெறுப்புகளை துறப்பது. உங்கள் மனத்தில் உள்ள பிரித்துப் பார்க்கும் தன்மையை துறப்பது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே இந்த நாட்டில் காலம் காலமாக ஒரு பாரம்பரியம் இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயது தாண்டிவிட்டால் அனைத்தையும் துறந்துவிட்டுச் செல்வார்கள். தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நிலை அடைந்துவிட்டால், தங்கள் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தவற்றை எல்லாம், தங்கள் சொத்து, தங்கள் வீடு, தங்கள் குழந்தைகள், தங்கள் உறவினர்கள் உட்பட அனைத்தையும் துறந்துவிட்டு சென்று விடுவார்கள். வழக்கமாக காசிக்குச் செல்வார்கள். எனவே 60 வயதைக் கடந்துவிட்டால், காசி மற்றும் இதர புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வார்கள். பொதுவாக யாத்திரையின் போதே இறந்துவிடுவார்கள். அல்லது சில நேரங்களில், வாழ்க்கை இன்னமும் அவர்களுக்கு முடியவில்லை என்றால், மிகவும் வயதாகி வீட்டிற்குத் திரும்புவார்கள். சுமார் 3000 கி.மீட்டர் தூரம் கூட சென்று அனைத்து புனித தலங்களையும் நடைப்பயணமாக தரிசித்து விட்டுத் திரும்புவதற்கு அவரவர்கள் நடையைப் பொறுத்து 12லிருந்து 20 வருடங்கள் கூட ஆகிவிடும். அதற்குள் உங்கள் வாழ்க்கையும் பொதுவாக முடிந்துவிடும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் அடிக்கடி ஒரு அழகான கதையைச் சொல்வது உண்டு. கணவன் மனைவி இருவரும் அனைத்தையும் துறந்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். கணவன் முன்னதாகவும் சில அடிகள் தள்ளி மனைவியும் போய்க் கொண்டிருந்தனர். வழியில் ஒரு வைரம் கீழே கிடப்பதைப் பார்த்த கணவன், இதை மனைவி பார்த்தால் ஒருவேளை வைரத்திற்கு ஆசைப்பட்டு துறவை விட்டுவிடலாம் என பயந்தார். எனவே தன் காலால் அந்த வைரத்தை மண்ணுக்குள் புதைக்க முயற்சித்தார். கணவன் செயலை தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட மனைவிக்கு எல்லாமே புரிந்துவிட்டது. பிறகு மனைவி கூறினார், “எப்போது உங்களுக்கு மண்ணிற்கும் வைரத்திற்கும் வித்தியாசம் தெரிகிறதோ அப்போதே உங்களுக்குள் துறவு மனப்பான்மை இல்லை”. ஒன்றை மதிப்பு வாய்ந்தது என்றும் இன்னொன்றை மதிப்பற்றது என்றும் எந்த ஷணத்தில் உணர்கிறீர்களோ, ஒன்றை புனிதமானது என்றும் இன்னொன்றை புனிதமற்றது என்றும் எந்த ஷணத்தில் உணர்கிறீர்களோ, அப்போதே உங்களுக்குள் துறவு இல்லை என்றே பொருள்.

துறவு என்பது இதையோ அல்லது அதையோ விடுவது அல்ல. துறவு என்பது உங்கள் விருப்பு வெறுப்புகளை துறப்பது. உங்கள் மனத்தில் உள்ள பிரித்துப் பார்க்கும் தன்மையை துறப்பது.

எனவே ‘துறவு’ என்று நாம் சொல்லும்போதும், ‘ஆசிரமத்தில் வாழ்வது’ என்று நாம் சொல்லும்போதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டீர்கள் என்று பொருள் அலல. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அதே தீவிரத்தோடு அதே புனிதத்தன்மையோடு ஈடுபடக்கூடிய தகுதி உடையவர் என்றே பொருள்.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் முழு முட்டாள்தனமானவை என்று பார்ப்பது அல்லது ஒவ்வொன்றையும் புனிதமாகப் பார்ப்பது. ஒன்றை புனிதமென்றும் மற்றொன்றை முட்டாள்தனம் என்றும் பார்க்கும்போது நீங்கள் அனைத்தையும் தவற விடுகிறீர்கள். ஒவ்வொன்றையும் முழு முட்டாள்தனம் என்றும் ஒவ்வொருவரையும் முழு முட்டாள்களாகவும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பிறகு நீங்கள் மக்கள் மத்தியில் வாழமாட்டீர்கள். அது ஒரு வழி. அல்லது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் புனிதமாக பார்ப்பது. அது மற்றொரு வழி. ஆனால் இந்த வழியில் நீங்கள் மக்கள் மத்தியில் வாழமுடியும். ஒன்று உங்கள் உடல் மற்றும் உங்கள் மனம் உட்பட எதனோடும் முழுமையாக ஈடுபடுவதில்லை அல்லது நீங்கள் ஒவ்வொன்றுடனும் எந்தப் பாகுபாடுமின்றி முழுமையாக ஈடுபடுகிறீர்கள். இந்த இரண்டு வழியுமே அற்புதமாக வேலை செய்யும். ஆனால் தற்போதைக்கு, உங்கள் மனநிலையையும் நீங்கள் வாழும் சமூக சூழ்நிலையையும் பார்க்கும்போது ஒவ்வொன்றையும் முட்டாள்தனம் என்று பார்ப்பதை விட ஒவ்வொன்றையும் புனிதமாக பார்ப்பதே சிறந்தது.

இரண்டுமே உண்மையானவை. இரண்டுமே அற்புதமான வழிகள். ஆனால் எதற்கு நாம் தயாராக இருக்கிறோமோ அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும், இல்லையா? ஒவ்வொன்றையும் முழு முட்டாள்தனம் என்று நீங்கள் பார்த்தால் பிறகு எதனோடும் உங்களுக்கு ஈடுபாடு இருக்காது. உங்கள் உடல், உங்கள் மனம் மற்றும் உங்கள் உணர்ச்சி ஆகியவற்றுடன் கூட உங்களுக்கு ஈடுபாடு இருக்காது. எதற்கும் முக்கியத்துவம் தரமாட்டீர்கள். அல்லது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவீர்கள். மண்ணுக்கும் வைரத்திற்கும் வேறுபாடு பார்க்க மாட்டீர்கள். இரண்டு வழிகளிலும் அது வேலை செய்கிறது. ஆனால், ஆசிரமத்தில், ஒவ்வொன்றையும் புனிதமாகப் பார்க்கும் வழியைத்தான் நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஏனெனில் மக்களுடன் சேர்ந்து வாழ அதுதான் சிறந்த வழி.

நீங்கள் என்னுடன் உட்காரும் தவறைச் செய்துவிட்டால், பிறகு நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள். விருப்பத்துடனும் ஆனந்தத்துடனும் வரலாம், அல்லது அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் வரலாம். எப்படியும் நாம் உங்களை இழுத்துக்கொண்டு போவோம்.

எனவே துறவு என்பது உங்களுக்கு வசதியில்லாததை விட்டுவிடுவதல்ல. எப்படியும் முழு உலகமும் அதைத்தான் செய்கிறது, இல்லையா? முழு உலகமும் தங்களுக்கு வசதியில்லாததை விட்டுவிட விருப்பம் கொள்கிறது. தான் விரும்பாததை ஒவ்வொருவரும் துறக்கிறார். ஒவ்வொருவரும் தனக்கு வசதியில்லாததை, தனக்கு முக்கியமற்றதை, தன் வாழ்க்கையில் அர்த்தமற்றதை துறந்து விடுகிறார். இப்படிச் செய்வது ஆன்மீகத்தைப் பொறுத்தவரையில் எந்த அர்த்தமும் இல்லாதது.

ஒருமுறை இங்கு நுழைந்துவிட்டால், இரண்டு நாட்களுக்கு மட்டும் என்னுடன் உட்கார்ந்தாலும் சரி, அல்லது மீதி உள்ள உங்கள் வாழ்க்கை முழுதும் என்னுடன் உட்கார்ந்தாலும் சரி, நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள். நீங்கள் என்னுடன் உட்காரும் தவறைச் செய்துவிட்டால், பிறகு நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள். விருப்பத்துடனும் ஆனந்தத்துடனும் வரலாம், அல்லது அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் வரலாம். எப்படியும் நாம் உங்களை இழுத்துக்கொண்டு போவோம். நீங்கள் ஆனந்தத்துடன் வருவது அனைவருக்கும் நல்லது. நீங்கள் அப்படி வருவது உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் இனிமை பயப்பதாக இருக்கும். ஆனால் நீங்கள் புலம்பக் கூடியவராக இருந்தாலும் நாங்கள் உங்களைப் பொறுத்துக் கொள்வோம். ஆனால் உங்களை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும் (சிரிக்கிறார்).