தொப்பையா? குப்பையா?

தொப்பையா? குப்பையா?, Thoppaiya kuppaiya

6 பேக் வயிறுக்கு ஆண்களிடம் போட்டி, ப்ளாட்டான வயிறுக்கு பெண்களிடம் ஏகப்பட்ட டிமான்ட்… ஒரு காலத்தில் முக அழகை பராமரிக்க என்று ஊரையே கலக்கிக் கொண்டிருந்த விளம்பரங்கள் போய் இன்று உங்கள் வயிற்றை அழகாக காண்பிக்க என்று விளம்பரங்கள் தாறுமாறாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நீங்களும் அதில் ஒருவரா, இல்லையென்றாலும் இதைப் படிக்க தவறாதீர்கள்… தொப்பையா? குப்பையா? பதில் உள்ளே…


டாக்டர். சாட்சி சுரேந்தர்,

ஈஷா ஆரோக்யா

நம் விநாயகத்திற்கு வயது 36. தனியார் கம்பெனியில் உட்கார்ந்த இடத்தில் சொகுசு வேலை, இவர் பெயர் இராசியோ என்னவோ, இவரது ‘கொழுக் மொழுக்’ தொப்பை காண்பவருக்கு கட்டாயம் விநாயகப் பெருமானை ஞாபகப்படுத்திவிடும். “விநாயகா! லட்டு தின்ன ஆசையா? என்றாலே, நாவூறும் ஸ்வீட் பிரியர், நொறுக்குத் தீனி கொறிப்பதில் கணக்கு வழக்கு இல்லை; இவரது உடல் மண்ணுக்காம், உயிரோ KFC சிக்கனுக்காம்!”

தொப்பை (Central obesity) வெறும் அழகுப் பிரச்சனை மட்டுமல்ல, உங்கள் ஈரக்குலையின் தேவையற்ற கொழுப்பு, உங்கள் இதயத்துக்கே உலை வைக்கலாம்.
“நாளைலேர்ந்து கண்டிப்பா… வாக்கிங்!”னு சபதமெடுப்பதும், பின்னர் மறுநாள் எழுப்பும் 6 மணி அலாரத்தை, 15 முறை ஸ்னூஸ் செய்து, மனைவியின் நல்ல வார்த்தை அர்ச்சனைக்கு பிறகு 9 மணிக்கு பரபரவென ஆபீஸ் கிளம்புவார். முதல் மாடியிலேயே ஆஃபீஸ் இருந்தாலும் “சொய்ய்ங்கு”னு லிஃப்ட் ஏறும் உழைப்பாளி!

நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்தாலும் நெஞ்சு படபடப்பாலும், பதறியடித்து டாக்டரிடம் சென்றவருக்கோ கிடைத்தது, ஆயுள் தண்டனை! ஆம்! “வெரி ஸாரி விநாயக் சார்! 320 மில்லிகிராம்ஸ், ஹை கொலஸ்ட்ரால், ஃபாஸ்டிங் சுகர்கூட 218 மில்லிகிராம்ஸ். வேற வழியே இல்ல… லைஃப் லாங் மெடிசன்ஸ் எடுத்தே ஆகனும், இனியும் வாயைக் கட்டி, உடம்பை குறைக்கலேனா, ஹார்ட்டுக்கு நல்லதில்ல” என்ற டாக்டர், புரியாத மருந்து பெயர்களால் ஒரு பக்கக் கட்டுரையை முடித்தார்.

ஆம், என் சக சராசரி குடிமகன்களே! தொப்பை (Central obesity) வெறும் அழகுப் பிரச்சனை மட்டுமல்ல, உங்கள் ஈரக்குலையின் தேவையற்ற கொழுப்பு, உங்கள் இதயத்துக்கே உலை வைக்கலாம்.

தொப்பை ஏன்?

உடலும் ஒரு இயந்திரம்தான். இயந்திரம் இயங்க எரிபொருள் தேவை. உடல் இயங்க, உணவு எரிவதால் (செரிமானம்) உண்டாகும் ‘கலோரிகள்’ தேவை. உடலின் தேவையைவிட, அதிக அளவு உணவின் மூலம் கிடைக்கும் கலோரிகள், உடலில் கொழுப்பாய் சேமிக்கப்படுகின்றன. இது ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு தொடை மற்றும் கூபகப் பகுதியிலும் (பின்புறம்) சேர்கின்றன. இது பின்னாளில் உணவு கிடைக்காத நிலையில் கொழுப்பை எரித்து பயன்படுத்திக்கொள்ள உடல் எடுத்துக்கொள்ளும் தற்காப்பு அம்சமே.

ஆனால் இன்றோ விளம்பர/வியாபார சக்திகளால் தறிகெட்டு போய்விட்ட உணவு பழக்கங்களும், நலிந்து போய்விட்ட உடல் உழைப்பும் சேர்ந்து நவீன இந்தியர்களை, தொந்தியர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுவும், மரபணு வழியிலேயே மற்ற எந்நாட்டினரையும் விட, நம் நாட்டவர்க்கே தொப்பை ஏற்படும் வாய்ப்பு (Tendency) அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொப்பையா? குப்பையா?

தேவை இல்லாதவற்றை ஒரு வகையில், குப்பைதான் எனக் கொண்டோமேயானால் தொப்பையும் ஒரு குப்பைதானே? குப்பையைக்கூட ஒதுக்கிவிட்டு நடக்கலாம். ஆனால் தொப்பையைத் தனியாய் கழட்டி வைக்க முடியுமா என்ன?

இந்த தொப்பை (குப்பை) தொட்டியால் நம்மை அண்டும் குப்பைகளில் சில: சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் (மாரடைப்பு முதல் திடீர் மரணம் வரை), முறையற்ற மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், உளவியல் ரீதியான தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு. இதற்காக ஒருவர் வாழ்நாள் முழுவதும் செலவிடும் தொகையால் தனிமனித மற்றும் நாட்டின் வருமான இழப்பும் உண்டு.

தீர்வென்ன?

சமூக அணுகுமுறை:

உடற்பருமனை ஒரு தனி நபர் உடல் சார்ந்த நோயாய் மட்டும் காண இயலாது. ஏனெனில் இன்று உலக அளவில் 3ல் 2 மரணங்கள் தொற்று அற்ற நோய்களான (Non-communicable disease) சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயால் ஏற்படுகின்றன. இவையனைத்திற்கும் உடற்பருமன் ஓர் முக்கிய காரணியாய் உள்ளது.

நம் தேசத்தில் ஒரு பாதி மக்களுக்கு உணவுக்கு வழியில்லை; அதனால் பிரச்சனை. மறுபாதிக்கு உணவு இருந்தும், அதில் எதை, எப்படி, எவ்வளவு எடுக்க வேண்டும் என்கிற கேள்விகளுக்கு சரியான விடையில்லாததால்தான் பிரச்சனை.

இந்நிலைக்கு அதிமுக்கிய காரணம், சத்தமில்லாமல் நம்மை வளைத்துவிட்ட சர்வதேச உணவுச் சந்தையும், அந்த வர்த்தகத்தின் கோரப்பசியும்தான். கேழ்வரகு கஞ்சியும், பாசிப்பயறு சுண்டலும் சாப்பிட்டு திடகாத்திரமாய் வளர்ந்த நம் குழந்தைகள், இன்று ஐங்க் (குப்பை) உணவு (Junk food) எனப்படும் சிப்ஸ், பேக்கரி பொருள், கோலா பானம், நூடுல்சுக்கு அடிமையாக்கப்பட்டு, உருளைக்கிழங்கு போல் உருண்டு திரண்டு திராணியற்று வளர்கிறார்கள்.

“பசிக்கு மட்டுமே உண்டோம்! பண்டிகையின் போது மட்டுமே வெள்ளை அரிசி! அசைவம் அளவாய் வைத்தோம்! விரதங்கள் மேற்கொண்டோம்! ஐங்க் வகையறாக்கள் என்னவென்றே அறியாதிருந்தோம்! கூடி உழைத்தோம்! நம் பிள்ளைகள் ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடினர்!”

இவை அனைத்தையும் நாம் வேகமாய் இழப்பதால்தான் தொற்று அற்ற நோய்களின் பாரம் தாங்க முடியாததாகிறது. இந்தியாவில், 6ல் 1 ஆணும், 5ல் 1 பெண்ணும் குண்டாய் உள்ளனர். வளரும் குழந்தைகளில் 17% பேர் அதிக எடை கொண்டவர்கள்.

ஆக உடற்பருமனை வெறும் நோயாய் பாராமல், நம் கலாச்சார சிதைவின் ஒரு வெளிப்பாடாய் பார்த்து, நம் மண்ணின் வாழ்வியல் முறைகளைக் காத்து கடைபிடித்தலே நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும்.

ஈஷா ஆரோக்யாவின் மருத்துவ அணுகுமுறை:

  • வருமுன் காப்பதே நலம். அடிவயிற்றில் சிறிது கொழுப்பு சேர்ந்தாலே உஷாராய் நமது உடலை காத்துக் கொள்வதே சிறந்தது.
  • ஆங்கில மருத்துவத்தில் பல நவீன முறைகள் இருந்தாலும், உடற்பருமனுக்கான சிகிச்சையில் வெற்றி இல்லையென்பது மருத்துவர்களே ஒப்புக் கொள்வது.
  • சித்த, ஆயுர்வேத முறைகளில் பசியைக் குறைத்தும், தேவையற்ற நீரை வெளியேற்றியும் அளிக்கப்படும் சிகிச்சையில் ஓரளவு வெற்றி கிடைக்கிறது.
  • ஆயுர்வேதத்தில், “உத்வர்தனா” எனும் மூலிகைப் பொடியால் ஆன பாரம்பரிய மசாஜ் சிகிச்சை பிரபல்யம்.

எதுவாக இருந்தாலும், வாழ்வியல் மற்றும் உணவுமுறை மாற்றங்களே சிகிச்சையில் முதலிடம் பிடிக்கின்றன. தினசரி குறைந்தது அரை மணிநேர நடைப்பயிற்சி, மித ஓட்டம், யோகாசனப் பயிற்சிகள் செய்வது பலனளிக்கும். (பொதுவாக தொப்பையின் கொழுப்பை எரிக்கும் என நம்பப்படும் உடற்பயிற்சிகள் வயிற்றுத்தசையை வலுவாக்குமே தவிர தொப்பைக் கொழுப்பை எரிப்பதில்லை). பகலுறக்கம் தவிர்க்க வேண்டும். மற்றும் இரவு உணவுக்கும் தூக்கத்திற்கும் ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, ராகி, தினை, கம்பு முதலிய நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்களை வாரம் 4 நாட்களாவது சேர்ப்பது.
  • அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் சேர்த்தல்
  • “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பதற்கேற்ப கொள்ளு ரசம், சுண்டல் எடுப்பதும் நலம் பயக்கும்.
  • தேன், பூண்டு, வெந்தயம், இலவங்கம் சேர்ப்பதும் நலம்.


ஈஷா ஆரோக்யா மருத்துவமனை:

சென்னை: 044 – 42128847
சேலம்: 0427 – 2333232
கரூர்: 04324 – 249299
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert