ஒரு வேளைச் சோற்றுக்கு அல்லாடும் பெரும் கூட்டம் ஒரு புறம்; "ச்சும்மா try பண்றேன்" என்கிற பெயரில் தட்டு நிறைய மீதம் வைத்து விட்டுச் செல்லும் கூட்டம் மறுபுறமும் இருக்க, இந்த ஏற்ற தாழ்வை சரி செய்யக் கொடி பிடிக்கவோ கோஷம் போடவோ தேவையில்லை. இந்த இளைஞர்களைப் போல் ஒரு பரிசோதனை மேற்கொண்டால் போதும். அந்தப் பரிசோதனை...

“அம்மா சமையல் போரு! நண்பர்களுடன் சேர்ந்து பீட்ஸா கார்னர் போகலாமா?“ என்று கூறும் கல்லூரி மாணவரா நீங்கள்? அல்லது “மனைவி சமையல் வேஸ்ட் எங்க ஆபீஸ் கேண்டீனே மேல்” என்று புலம்பும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை சேர்ந்தவரா?

ஏழ்மையை சுவாசித்து பார்க்கலாமே என்ற யோசனை மிகவும் சுவாரசியமான பயணத்திற்கு இவர்களை அழைத்துச் சென்றது.

இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி... இந்திய கலாச்சாரத்தின் விதையிலிருந்து வளர்ந்த இளம் விழுதுகள் இரண்டு, தாங்கள் பிறந்து வளர்ந்த அமெரிக்க நாட்டின் வெற்றிகரமான வாழ்க்கையைத் தாண்டி தாய் மண்ணைப் பற்றி தெரிந்துகொள்ள, இங்கு வந்தனர்.

துஷார் ஹரியானாவை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வங்கி முதலீட்டு பிரிவில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தார். பின்னர் அன்னை பூமிக்கு ஏதோ செய்திட வேண்டும் என்று இந்தியா திரும்ப முடிவு செய்தார்.

இளம் வயதிலேயே குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடியேறிய திரு. மாட் தனது MIT படிப்பிற்கு பின் தாய்நாட்டிற்கு சேவையாற்றிட எண்ணி இங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

ஒரே எண்ணம் கொண்ட இவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட இடம் பெங்களூரு நகரம். அங்கே ஒரு ப்ராஜக்ட் செய்ய எண்ணி இணைந்த இருவரும் ஒரே அறையை பகிர்ந்து கொண்டதோடு அவர்கள் எண்ணங்களையும் மனம் மாற்றிக் கொண்டனர்.

இந்தியாவிற்கு சேவை செய்ய வந்த இவர்களுக்கு இந்தியா பற்றி என்ன தெரியும்? இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே பல கோடி மக்கள் இருப்பது தெரியும்!

ஒரு விபரீத சோதனையை மேற்கொள்ள ஆயத்தமாயினர். சராசரி இந்தியனாக வாழ்ந்து ஏழ்மையை கொஞ்சம் சுவாசித்து பார்க்கலாமே என்ற இவர்களது யோசனை மிகவும் சுவாரசியமான பயணத்திற்கு இவர்களை அழைத்துச் சென்றது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இந்த வீர விளையாட்டை பொறுமையாக விளையாடிய இவர்கள் வறுமைக் கோட்டை தொட்டுவிடவும் தீர்மானித்தனர்.

வெளிநாட்டு வாழ்க்கை, செல்வ வளம், உயர்தரமான கல்வி, மனதினில் ப்ராஜக்ட், கைகளில் ஐ-பாட், கனவினில் உலகையே வெல்லும் ஆசை கொண்ட 26 வயதே ஆன இந்த இளைஞர்கள் நம் நாட்டின் நிலையை அறிந்திட தீவிரமான பயணத்தை மேற்கொண்டனர்.

சராசரி இந்தியனின் வாழ்க்கைப் பயணம் இதோ துவங்கியது. ஒரு சராசரி இந்தியனின் மாத வருமானம் ரூ.4500. இதில் மூன்றில் ஒரு பகுதி வீட்டு வாடகைக்கு வேறு கொடுத்திட வேண்டும். ஒரு நாள் செலவுக்கு ரூ.100 மட்டுமே மிஞ்சி நிற்கும்.

அமெரிக்காவின் சொகுசு வாழ்க்கை பழகிப் போன இவர்கள் சிக்கனமான உணவைத்தேடி இந்திய தெருவீதிகளை சுற்றி வந்தனர். ஒரு நாளைக்கு வெறும் நூறு ரூபாய்! உணவகங்களில் சாப்பிடுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாமிசமெல்லாம் கனவில் மட்டும்தான். பாலும் தயிரும் கூட விலையுயர்ந்த பொருட்களாக தெரிந்தன இவர்களுக்கு. ரொட்டி வாங்கி சாப்பிடலாம், ஆனால் நெய்யோ வெண்ணையோ கிடையாது.

சாப்பாட்டு பிரியர்களான இவர்கள் உணவை ரசித்து சமையல் செய்வதிலும் வல்லவர்கள். புரதச் சத்து மிகுந்த சோயா நகட்ஸ் விலை குறைவாக கிடைத்தது, இவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை அளித்தது. அதனைக் கொண்டு பல ரெசிப்பிகளை முயற்சி செய்து உருவாக்கினர். வேறு சில நாட்களோ வெறும் பார்லி ஜி பிஸ்கட்டில் ஓடியது.

பார்லி ஜி பிஸ்கட்- அட 25 பைசாவில் 27 கலோரிகள் கிடைக்கிறதே! மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், வறுமையினால் வாழ்வு மிகவும் சுருங்கிப்போனது. சில நேரங்களில் பேருந்துக் கட்டணம் கூட கடினமாகிப்போக, செல்ல வேண்டிய இடத்திற்கு நடராஜா சர்வீஸ், நடந்தே சென்றனர்.

குளு குளு ஏசி பழகிப்போன இந்த குமரர்கள், மின்விசிறியையும் மின்விளக்கையும் கூட அளந்து, அளந்து உபயோகப்படுத்தினர். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம், அதற்கு மேல் அனைத்தையும் அணைத்துவிட்டு ஆதிவாசி வாழ்க்கை!

அடுத்ததாக இவர்கள் துவக்கியது ‘சிக்கன குளியல் திட்டம்.’ ஒரு லைப்பாய் சோப்பை இரண்டு துண்டுகளாக வெட்டி ஆளுக்கு ஒரு துண்டு என்று ஆனந்தமாக பகிர்ந்து கொண்டார்கள்.

கடை கடையாக ஏறி இறங்கி அங்கு விற்கும் பொருட்களை கண்களால் மட்டுமே பார்த்துவிட்டு நம்மால் வாங்க முடியாது என்ற ஏக்கத்துடன் வீடு திரும்பினர். சினிமாவுக்கெல்லாம் போக முடியாது என்பது பரவாயில்லை. ஆனால் மருத்துவ செலவு இல்லாமல் இருந்தாலே போதும் என்று எண்ணிக் கொண்டே நாட்களை கடத்தினர்.

ஆனால் இது ஒரு ஏழையின் வாழ்வு கிடையாது. ஒரு சராசரி இந்தியனின் வாழ்க்கைதான். இந்த வீர விளையாட்டை பொறுமையாக விளையாடிய இவர்கள் வறுமைக் கோட்டை தொட்டுவிடவும் தீர்மானித்தனர்.

தேவார்மிர்தமாக ஒரு வேளை உணவு உண்டால் மாலையில் கருப்பு தேநீரை கிராமத்து அழகோடு சேர்த்து ரசித்தனர்.

ஒரு நாளைக்கு ரூ. 100 என்பதிலிருந்து திடீரென ஒரு நாளைக்கு ரூ. 26 க்கு குதித்தனர். கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத இந்த சிறிய தொகையில் தங்கள் பரிசோதனையை கேரளாவின் கருக்காச்சல் கிராமத்திற்கு மாற்றினர்.

அவர்கள் மனம் நாள் முழுக்க உணவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அரைகுறையாக வெந்த அரிசியில் கொஞ்சம் கிழங்கும் வாழைப்பழமும் கலந்து தேவார்மிர்தமாக ஒரு வேளை உணவு உண்டால் மாலையில் கருப்பு தேநீரை கிராமத்து அழகோடு சேர்த்து ரசித்தனர். அலைபேசியும் இணையதளமும் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் நிலைக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் பெரும் விபரீதமே நடந்திருக்கும்.

தீபாவளி அன்று இந்த பரிசோதனையை முடித்துக் கொண்ட இவர்கள் சகஜ நிலைக்கு திரும்பியதை எண்ணி துள்ளிக் குதித்தனர். அன்றைய இரவை விருந்து உணவோடு கொண்டாடினர். ஆனால் அந்த உணவு அவர்களுக்கு ஆனந்தத்தை மட்டும் கொடுக்கவில்லை. பெரும் வலியையும் கொடுத்தது.

“நாங்கள் இந்த பரிசோதனையிலிருந்து வெளியே வந்துவிட்டோம். ஆனால் இந்த ஏழ்மை நிலையிலிருந்து வாழ்நாள் முழுக்க வெளியே வர முடியாத 400 மில்லியன் மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். பிழைப்பிற்காக வாழ்நாள் முழுதும் போராடும் இவர்கள் பசியையே வாழ்வாக உணர்கிறார்கள். விடுமுறையை கொண்டாட விலையுயர்ந்த ஹோட்டல், அழகு சேர்க்க பிராண்டட் பொருட்கள் என இன்னும் என்னென்னவோ தேவையில்லாத செலவுகள் இனி தேவையா என எங்களுக்குள் ஆழமான கேள்வி எழும்பியுள்ளது," என்கின்றனர்.

"எங்களுக்கு இவ்வளவு வசதியும் வாய்ப்பும் கிடைத்ததற்கும் வேறு சிலருக்கு அடிப்படை வசதிகூட இல்லாததற்கும் என்ன காரணம்? இதை நினைத்து நாங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டுமா? இல்லை! நம்மோடு வாழும் இந்த மனிதர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. சுகமான வாழ்க்கையும் வேளைக்கு கிடைக்கும் உணவையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இனி எங்கள் மனம் ஒத்துழைக்காது.

பசி மிகக் கொடுமையானது. பசியில் வாடும் மனிதன் தன் வயிற்றுப் பசிக்காக எதையும் செய்யத் துணிவான் என்பது எங்கள் அனுபவத்தில் உண்மையாகிவிட்டது. நம் தேசத்தின் நிலையை பார்க்கும்போது, அனைவருக்கும் சரிவிகித உணவு கிடைத்திட, உணவு குறித்த ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டியது அவசியம் என்பது புரிகிறது. நம்மோடு வாழும் இந்த ஏழை எளிய மனிதர்களை புரிந்து கொண்டால்தான் இங்கு ஜனநாயகம் மலரும்,” என்று இவர்கள் தான் கண்டதை உருக்கத்துடன் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.

கிடைக்கும் உணவின் மதிப்பு, அது இல்லாமல் போகும்போது புரிந்து கொள்வதைவிட, அது நம் கைகளில் இருக்கும்போதே உணர்ந்து உண்போம்!

Alex Proimos @ fotopedia