தூக்கம் - சில தகவல்கள்! - பகுதி 3

தூக்கத்திற்காக தலையணையின் கீழ் பல மாத்திரைகள் வைத்துக் கொள்வது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. சரி, தூக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன, இதற்கு தீர்வு என்ன என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

தூக்கக் கோளாறுகள்

தூக்கம் ஏற்படும்போதோ, தூக்கத்தின்போதோ ஏற்படும் குறைபாடுகளை, தூக்கக் கோளாறுகள் எனலாம். இவற்றைக் குணப்படுத்த முடியும்.

1. தூக்கமின்மை

கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஓர் அறிகுறி வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் வீதம் நான்கு வாரத்துக்கு மேல் நீடிக்குமானால் மருத்துவரை அணுகவும்.

  • படுக்கையில் படுத்து 30 நிமிடங்கள் கழித்தே தூக்கம் வருவது. இரவில் தொடர் தூக்கமில்லாமல் இருப்பது.
  • எப்போதும் எழுந்திருக்கும் நேரத்தைவிட இரண்டு மணி நேரம் முன்பாகவே எழுந்துகொள்வது
  • இரவில் தூங்கும்போது விழிப்பு வந்தால் மறுபடியும் தூங்க 10 முதல் 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது அல்லது தூக்கமே வராமல் இருப்பது.
  • காலையில் எழுந்ததும் புத்துணர்வாக இல்லாமல் சோர்வாக இருப்பது.

இதற்கு நீங்களாகவே மருந்துக் கடையில் தூக்க மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதோ, மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைத்துள்ள தூக்க மாத்திரைகளை அவருடைய ஆலோசனையின்றி தொடர்ந்து சாப்பிடுவதோ கூடாது. இது மறுபடியும் இயற்கையாகவே உங்களுக்குத் தூக்கம் ஏற்படுவதைப் பாதிக்கும்.

2. நார்கோலெப்ஸி

இந்தத் தூக்கக் கோளாறு பல வருடங்களுக்கு பிரச்னை என்றே தோன்றுவதில்லை. இது எந்த இடமானாலும், நேரமானாலும் கட்டுப்படுத்த முடியாத அளவு தூக்கம் ஏற்படுவது.

  • பகற்பொழுதில் அதிகமாகத் தூங்கி விழுவது.
  • தசைகள் உணர்ச்சிவசப்படும்போது தளர்வடைவது.
  • தூங்கும்போது சில நொடிகள் முதல் அரை மணி நேரம் வரை அசைய முடியாமல் இருப்பது.
  • இல்லாத பல காட்சிகள் தெரிவது.
  • இந்த நோயினுடைய வீரியத்தைப் பொறுத்து பாதிப்புகள் இருக்கும். மருந்துகளின் மூலம் குணப்படுத்தலாம்.

3. தூங்கும்போது ஏற்படும் சுவாசக் கோளாறுகள்:

இதில் பல வகைகள் உண்டு. அதிகமாகக் காணப்படுவதைப் பார்ப்போம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எடை குறைத்தல், மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் கைவிடுதல், மல்லாந்து படுக்காமல் இருத்தல் போன்றவை உதவும். இதெற்கென்று உள்ள பிரத்யேகக் கருவிகளை மருத்துவரின் ஆலோசனை பேரில் உபயோகிக்கலாம்.

அ. சுவாசம் நின்றுபோதல்:

இதைக்கூட உறங்கும் நபர் சுட்டிக்காட்டும்போதுதான் தெரியும்.

10 நொடிகள் வரை அவ்வப்போது இரவு முழுவதும் சுவாசம் தடைப்படும். இதனால் விழிக்க நேரிட்டு தூக்கத்தின் தன்மை பாதிக்கப்படும்.

இந்தக் கோளாறால் முன்பு கூறிய பாதிப்புகள் மட்டுமின்றி, மறதி, மனச்சோர்வு, ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும்.

ஆ. குறட்டை:

இதனை தொண்டை மற்றும் உள்நாக்கில் உள்ள திசுக்களின் அதிர்வுடன் கூடிய ஒருவகை மூச்சுக் கோளாறு எனக் கூறலாம். மேற்கூறிய வியாதியில் 92% பேருக்கு குறட்டை பிரச்னை இருக்கும். தூக்கத்தின் தன்மை பாதிக்கப்படுவதால் பகலில் தூக்கம் ஏற்படும்.

4. தூக்கத்தில் கை கால்களை அசைத்தல்

தூக்கத்தின்போது கால்களில் முக்கியமாக கெண்டைச் சதையில் ஏதோ ஊறுவது, கூசுவது, எரிவது மற்றும் வலிப்பதுபோல் தோன்றும். கால்களை அசைத்தால் மறைந்துவிடும். கால்களை அசையாமல் அதிக நேரம் வைத்திருந்தால் இது ஏற்படும். தளர்வாக இருத்தல், காபி, டீ போன்றவை அருந்தாமல் இருத்தல் இதற்கு உதவும்.

5. தூங்கும் நேரம் மாறுவதால் ஏற்படும் கோளாறுகள்:

1. ஜெட்லெக்

ஜெட்லேக் என்று நாம் விமானத்தில் நேர வித்தியாசம் உள்ள இடங்களுக்குப் பிரயாணம் செய்யும்போது ஏற்படுவது.

நீங்கள் பிரயாணம் செய்யும்போது அதிக நீர் அருந்தவும். முடிந்த மட்டும் நன்றாகத் தூங்கவும். நீங்கள் சென்றடைந்த இடத்தின் தூக்க நேரத்துக்கு ஏற்றவாறு தூங்கவும். தூக்கம் வரவில்லையென்றால், இதற்கான மருந்துகளை, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சாப்பிடவும்.

2. ஷிஃப்ட் வேலையினால் ஏற்படும் பிரச்சினைகள்:

தூக்கப் பிரச்னை மற்றும் இதர உடல் உபாதைகள் பகற்பொழுதில் அல்லாமல் மற்ற நேரத்தில் குறிப்பாக இரவில் வேலை செய்யும்போது ஏற்படும். இத்தகைய நேரங்களில் பலகாலம் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு இதய நோய், மார்பகப் புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, ஜீரணப் பகுதிகளில் கோளாறுகள் போன்றவை ஏற்படும். மனநலக் கோளாறுகள் வரும் வாய்ப்பும் அதிகமாகும். தூக்கத்தின் தரம் பெரிதும் பாதிக்கப்படும்.

இவர்களுக்குத் தூக்கம் வர சில குறிப்புகள்:

  • தூங்கும் அறை அமைதியாக, காற்று வசதிகொண்ட இருட்டு அறையாக இருக்க வேண்டும்.
  • உடற்பயிற்சி தொடர்ந்து செய்யவும். ஆனால், படுப்பதற்கு முன் செய்வதைத் தவிர்க்கவும்.
  • நீங்கள் வேலைக்குச் செல்லும் நேரம் வரை தூங்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
  • சரிவிகித உணவு சாப்பிடவும்.
  • உங்கள் இரவு ஷிஃப்ட் முடியும் நேரத்துக்கு முன்பு காபி, வெளிச்சமான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.

தூக்க நிகழ்வுகள்:

தூக்கத்தின்போது நடப்பது, பற்களைக் கடிப்பது, பேசுவது, முனகுவது போன்றவை ஏற்படலாம். இது பல காரணங்களால் ஏற்படும். தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகவும்.

யோகா எவ்வாறு உதவும்?

  • யோகா, (பிராணாயமம், ஆசனம், தியானம்) தூக்கத்துக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும். படுத்தவுடனே தூக்கம் வரச் செய்கிறது.
  • தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது.
  • இரவில் தொடர்ந்து தூங்க முடிகிறது. நடுவில் விழிப்பு வந்தால், உடனே தூங்கச் செய்கிறது.
  • இது மட்டுமின்றி தூங்கும் நேரம் மற்றும் அளவை முறைப்படுத்துகிறது.
  • யோகா செய்பவர்கள் குறைந்த நேரம் தூங்கினாலும் சோர்வில்லாமல் புத்துணர்வுடன் இருக்க முடிவதாகக் கூறுகின்றனர்.
  • யோகப் பயிற்சியால் ஆழ்நிலைத் தூக்கம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் காலையில் புத்துணர்வுடன் இருக்க முடிகிறது.
  • ஈஷாவின் யோகா பயிற்சிகளுக்குப் பின் தூக்கம் நன்கு ஏற்படுவதாக பல நூறு தியான அன்பர்கள் கூறுகின்றனர்.

இத்தொடரின் பிற பதிவுகள்: தூக்கம் - சில தகவல்கள்!