கேள்வியாளர்:

சத்குரு, பங்குச்சந்தையில் நான் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். வாழ்க்கையில் ‘எங்கே தோற்று விடுவேனோ’ என்கிற பயம் என்னை ஆட்டுவிக்கிறது. சில நேரங்களில் தற்கொலை எண்ணமும் கூட வருகிறது, நான் எப்படி இதிலிருந்து மீள்வது?

சத்குரு:

இவ்வாழ்வை ஒரு மாபெரும் சாத்தியத்திற்கான வாய்ப்பாக பார்ப்பவர்களுக்கு என்றும் தோல்வியில்லை. அப்படியில்லாமல், இவ்வாழ்வின் சராசரி விஷயங்களையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு வாழும்போதுதான், உங்களுக்கு வெற்றியும் தோல்வியும் இருக்கும்.

நாட்டில் பொருளாதார நிலை நன்றாக இருந்து நீங்கள் நிறைய செல்வம் ஈட்டும்போதே, செல்வத்தின் மீதான மோகத்தை குறைத்துக் கொண்டுவிட்டால், பின் பொருளாதார நலிவு ஏற்படும்போது நீங்கள் தியானம் செய்வதற்கும் மலைகளில் உலாவுவதற்கும் தேவையான நேரம் கிடைக்கும்!

இவ்வாழ்வை ஒரு மாபெரும் சாத்தியத்திற்கான வாய்ப்பாகப் பார்க்கும்போது, நல்லது எது நடந்தாலும், அதை உங்கள் நல்வாழ்விற்குப் பயன்படுத்துவீர்கள். ஒருவேளை கெட்டது நடந்தாலும், அதையும் உங்கள் நல்வாழ்விற்கே பயன்படுத்துவீர்கள். பொருளாதாரம் அமோகமாக இருக்கும்போது, ஒரு முட்டாளும் கூட லாபம் ஈட்டுவார். அதற்குப் பெரிதாக சாமர்த்தியம் தேவையிருக்காது. எனினும் லாபம் கிடைக்கிறது என்பதால், அவரவர் தன்னைப் பெருமையாக நினைத்துக் கொள்வர். ஆனால் இதுவே பொருளாதார நலிவு ஏற்படும்போதும் நீங்கள் வெற்றி காண வேண்டுமெனில், உங்களுக்கு வேறு அளவிலான திறன் வேண்டும்.

நாட்டில் பொருளாதார நிலை நன்றாக இருந்து நீங்கள் நிறைய செல்வம் ஈட்டும்போதே, செல்வத்தின் மீதான மோகத்தை குறைத்துக் கொண்டுவிட்டால், பின் பொருளாதார நலிவு ஏற்படும்போது நீங்கள் தியானம் செய்வதற்கும் மலைகளில் உலாவுவதற்கும் தேவையான நேரம் கிடைக்கும்! பணம் இருந்தபோதுதான் அது உங்கள் நேரத்தையும், வாழ்வையும் அபகரித்துக் கொண்டது. இப்போது அந்தப் பணக்குழாய்கள் தானாய் அடைபட்டுப்போனது. ‘நேரமே இல்லை’ என்று அவசரமாக ஓடிக் கொண்டிருந்த உங்களுக்கு இப்போது நிறைய நேரம் கிடைக்கிறது. இவ்வாழ்வை ஒரு மாபெரும் சாத்தியத்திற்கான வாய்ப்பாகப் பார்த்தால், வாழ்வில் இது போன்று எது நடந்தாலும், அதையும் நமக்குப் பயன்படக்கூடிய விதத்தில், மிக அழகாக, பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கிடைத்த வரமும் கிடைக்காத நெல்மணிகளும்!

ஒரு ஊரிலே ஒரு விவசாயி இருந்தார். அவர் விளைவிக்கும் பயிரின் தரத்தை இயற்கைச் சீற்றங்களும், காலம் தவறி வரும் வெயிலும் மழையும் பாதிப்பதை அவரால் ஏற்க முடியவில்லை. இந்நிலையை மாற்ற எண்ணி, சிவனை நாடினார். சிறப்பு சலுகையின் காரணமாக சிவனின் சந்திப்பு அவருக்குக் கிடைத்தது. சிவன், விவசாயியிடம், ‘என்ன?’ என்று கேட்டார்.

உங்கள் வாழ்வில் எவ்விதமான சூழ்நிலை வந்தாலும், அதை உங்கள் வளர்ச்சிக்கு, உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதற்கு விவசாயி, “இயற்கை என்ற பெயரில் நடக்கும் முட்டாள்தனங்கள் எனக்கு அலுத்துவிட்டது. உங்களுக்கு விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அதை நான் குறை கூறவில்லை. நீங்கள் விவசாயி அல்ல, வேடன் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதனால் விவசாயம் பற்றி அறிந்த என் கையில் இயற்கையை கொடுத்து விடுங்கள். நான் ஒரு விவசாயி என்பதால், எப்போது மழை வரவேண்டும், எப்போது வெயிலடிக்க வேண்டும், எப்போது காற்றுவீச வேண்டும் என்பது எல்லாம் எனக்குத் தெரியும். விவசாயம் பற்றி ஒன்றும் அறியாத உங்கள் கையில் இயற்கை இருப்பதால்தான், தவறான நேரத்தில் மழை பெய்கிறது, தவறான நேரத்தில் எல்லாமே நடக்கிறது. அதனால் இந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள்” என்றார். சிவனும் விளையாட்டு மனநிலையில் இருந்தார். “சரி, இயற்கை இனி உன் கையில்” என்று சிவன் சொல்லிவிட்டார்.

விவசாயி மக்காச்சோளத்தை பயிரிட முடிவு செய்தார். விரலை சொடுக்கி, “மழை” என்றார். மழை பெய்தது. தன் நிலத்தின் பதத்தை பார்த்தார். 6 அங்குலத்திற்கு நீர் நின்றவுடன், “போதும் நில்” என்றார், மழை நின்றது. அதன் பின் நிலத்தை உழுதார், பயிரினை நட்டார், 2 நாள் காத்திருந்தார். பின் தேவைக்கு ஏற்றார் போல், “மழை..! வெயில்..! இன்று நான் வயலில் வேலை செய்வதால் சற்றே மேகமூட்டமாய் இரு” என்று தேவையை அனுசரித்து கட்டளைகள் இட்டார். எல்லாம் அவர் இஷ்டப்படியே நடந்தது. அழகழகாக பயிர் வளர்ந்தது. விவசாயிக்கு கொண்டாட்டம் தாங்கவில்லை. “இயற்கை விவசாயியின் கைகளில் இருப்பதே நல்லது” என்று பெருமிதம் கொண்டார். அறுவடை செய்யும் காலத்தில், பறவைகளின் தொல்லை வேண்டாம் என்று நினைத்தார், “பறவைகள் வேண்டாம்..!” என்றார். பறவைகள் ஏதும் வரவில்லை. ஆசைஆசையாய் தம் பயிரிடம் சென்றார். ஒரு கருதினை திறந்து பார்த்தார். உள்ளே கதிர்மணிகள் ஒன்றுகூட இருக்கவில்லை. அதிர்ச்சியுற்றார். “என்ன இது? எல்லாம் சரியாகத் தானே செய்தேன். இது எப்படி நடக்க முடியும்” என்று குழம்பினார். சரியான நேரத்தில் சரியான அளவில், மழை, சூரிய வெளிச்சம் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தும் இது எப்படி நடந்தது?

அதனால் மீண்டும் சிவனிடம் சென்று, “நான் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து சரியாகவே செய்தேன், ஆனால் அவற்றில் கதிர்மணிகள் ஒன்றுகூட இல்லை. வேண்டுமென்று நீங்கள் தான் என் பயிரை நாசம் செய்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு சிவன் சொன்னார், “நீ செய்ததெல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். பொறுப்பு உன் கையில் இருந்ததால் நான் தலையிட விரும்பவில்லை. சரியான அளவு மழை, சரியான அளவு சூரியவெளிச்சம், என எல்லாமே சரியாகத்தான் செய்தாய். ஆனால் காற்று அநாவசியம் என்று, காற்றடிப்பதை நீ நிறுத்தி விட்டாய். நான் எப்போதும் காற்றை வேகமாய் வீச வைப்பேன். வேகமாய் காற்று வீசும்போது, எங்கே வேருடன் பிடுங்கி எறியப்பட்டு விடுவோமோ, இல்லாமல் போய்விடுவோமோ என்று பயந்து, இப்பூமியில் இன்னும் ஆழமாய் பயிர்கள் வேர்விடும். கதிர்மணிகளும் முளைக்கும். இப்போது எவ்வித போராட்டமும் இல்லாமல், உன் பயிர்கள் நன்றாய் வளர்ந்துவிட்டன. ஆனால் கதிர் மணிகள்தான் இல்லை” என்றார்.

உங்கள் வாழ்வில் எவ்விதமான சூழ்நிலை வந்தாலும், அதை உங்கள் வளர்ச்சிக்கு, உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது நான் எதிர்பார்த்தபடி சூழ்நிலை இல்லையே என்று தலையில் கைவைத்து ஓரமாய் முடங்கி உட்காரலாம். இந்த முடிவு உங்கள் கையில்தான் உள்ளது. இதுதான் என்றில்லை. உங்கள் வாழ்வில் எவ்வளவு கொடூரமான விஷயம் நடந்திருந்தாலும், அதையும் உங்கள் வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், உங்கள் வாழ்வில் நடக்கும் சிறுசிறு விஷயங்களையும், உங்கள் முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக நீங்கள் பார்க்க வேண்டும். இந்த சின்னசின்ன விஷயங்கள் என்பது, நீங்கள் பெரிய விஷயங்களாய் பார்க்கும் உங்கள் தொழில், கல்யாணம், குழந்தை போன்றவற்றையும் சேர்த்துதான்.

உயரிய குறிக்கோள்... உன்னத தீர்வு!

உண்பது, குழந்தை பெறுவது, பிழைப்பு நடத்துவது... இது தான் வாழ்க்கை என்றில்லாமல், வாழ்வில் உங்களுக்கென்று ஒரு உயர்ந்த குறிக்கோளை நீங்கள் வைத்துக் கொண்டால், சூழ்நிலை எப்படி மாறினாலும் உங்களுக்குப் பிரச்சனையாக இருக்காது.

இந்தக் கலாச்சாரத்தில் இதை உங்களுக்கு காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்: “வாழ்வின் குறிக்கோள் முக்தி பெறுவது. கல்யாணம், தொழில், சமூகம் என்பதெல்லாம், நீங்கள் அந்தக் குறிக்கோளை அடைவதற்கு உருவாக்கப்பட்ட சாதனங்கள். இந்த சாதனங்களை ஏற்றுக்கொண்டு போனாலும் சரி, அல்லது இவற்றையெல்லாம் உதறிவிட்டு போனாலும் சரி; நீங்கள் சம்சாரத்தில் இருந்தாலும் சரி அல்லது சந்நியாசத்தில் இருந்தாலும் சரி, உங்கள் குறிக்கோள் என்றுமே முக்தி மட்டும்தான்.”

முக்தி என்பது சந்நியாசிக்கு மட்டுமல்ல. மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்குமே முக்திதான் வாழ்வின் நோக்கம். இதை அடைய தனியாய் பயணிக்க வேண்டும் என்றால், தனியாய் பயணிக்கலாம், கூட்டமாக சேர்ந்து செல்லவேண்டும் என்றால் கூட்டமாக செல்லலாம். அது உங்கள் விருப்பம். வேகமாக செல்லவேண்டும் என்றால், தனியாக பயணிப்பது சிறந்தவழி. இல்லை கொண்டாட்டமாக செல்லவேண்டும் என்றால் பலபேருடன் சேர்ந்து பொறுமையாக, மெதுவாக செல்லலாம். இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், உங்கள் வாழ்வில் நீங்கள் என்னென்ன செய்தாலும், அனைவருக்குமே வாழ்வின் குறிக்கோள் முக்திதான். இதை நீங்கள் தெளிவாய் புரிந்து கொண்டுவிட்டால், பிறகு வாழ்வில் எது நடந்தாலும் அது நன்மைக்குத்தான். பொருளாதாரம் மேம்பட்டாலும் நன்மை. பொருளாதாரத்தில் நலிவு ஏற்பட்டால், அது உண்மையிலேயே இன்னும் நன்மை.

தோல்வி பயம் பிடித்தாட்டுகிறது என்கிறீர்கள். தோல்வியே மோசமான ஒன்று. அதோடு பயத்தையும் வேறு சேர்த்துக் கொள்கிறீர்கள். வெற்றி என்பது நீங்கள் விரும்புவதால் உங்களுக்குக் கிடைப்பதல்ல, அதற்கான தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்வதாலேயே அது உங்களுக்குக் கிடைக்கிறது. எல்லோருமே வெற்றிக்குத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, அது உங்களை வந்தடையும். “இல்லை இல்லை... என்னிடம் தேவையான தகுதியும் திறனும் இருக்கிறது. 5 வருடம் முன்பு வரை நான் நன்றாகத்தான் இருந்தேன். ஆனால், பொருளாதார நலிவு காலமாகிய இப்போதுதான்...”. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போது பொருளாதார சூழ்நிலை எல்லாம் தலைகீழாகிவிட்டது. அதை சமாளிக்க உங்களால் முடியவில்லை அல்லவா? அவ்வளவுதான் விஷயம்.

உண்பது, குழந்தை பெறுவது, பிழைப்பு நடத்துவது... இது தான் வாழ்க்கை என்றில்லாமல், வாழ்வில் உங்களுக்கென்று ஒரு உயர்ந்த குறிக்கோளை நீங்கள் வைத்துக் கொண்டால், சூழ்நிலை எப்படி மாறினாலும் உங்களுக்குப் பிரச்சனையாக இருக்காது. இன்று நீங்கள் ஆடம்பரமான விருந்து உண்கிறீர்கள், ஆனால் நாளையே வெறும் காய்ந்து போன ரொட்டிதான் கிடைக்கிறது என்றால்கூட அதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியும். உண்மையில், ஆடம்பரமான விருந்து உண்பது ஆரோக்கியமானதல்ல. இன்று ஆரோக்கியமாக வாழ்வதற்காக, பலர் மிகச் சாதாரணமான உணவை தேர்வு செய்து உண்கின்றனர். குறைவான உணவு, சிறிய வீடு, சிறிய கார் இருந்தாலே உங்களுக்குப் போதுமானது. கார் எதற்கு, நடந்து செல்வது கூட அற்புதமானதுதான். நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும். ஆம், கோவையில் ஒருவர் சமீபத்தில் 100 வயதைக் கடந்தும் நல்ல ஆரோக்கியமாக, சுயமாக தன் வேலைகளை செய்துகொள்ளும் வகையில் இருந்தார். இவரை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் இவரது பேட்டியை நான் நாளிதழ் ஒன்றில் படித்தேன். அதில், “உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியக்காரணம் என்ன?” என்று அவரைக் கேட்டிருந்தனர். அதற்கு அவர், “நான் ஒரு வாக்-கிங்(Walk-King), தினமும் நடக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இன்று எனக்கு 100 வயதாகிறது, இன்றும் நான் நடக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

ஆவலிலிருந்து அறிவிற்கு