'எத்தனைதான் திட்டமிட்டாலும், வாழ்க்கை நான் விரும்பும்படி நடக்கமாட்டேன் என்கிறது. என்னதான் செய்வது?' என்று புலம்புகிறவரா நீங்கள்? இதே கேள்வியை ஒருவர் சத்குருவிடம் கேட்க, சத்குரு அளித்த பதில் இங்கே...

Question: என் வாழ்வில் ஒவ்வொன்றையும் நான் திட்டமிட்டுத்தான் செய்கிறேன். ஆனால் எத்தனை திட்டமிட்டாலும் நான் விரும்பும்படி எதுவும் நடப்பதில்லை. நான் என்ன செய்வது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

திட்டம் என்பது மனதில் உருவாக்குவது. ஆனால் கைகளில் என்ன இருக்கிறதோ, அதை வைத்துத்தான் நீங்கள் வேலை செய்யமுடியும். எவ்வளவு நேரம் திட்டமிடுவது, எவ்வளவு நேரம் வேலை செய்வது என்பதெல்லாம் அவரவரின் வாழ்வைப் பொறுத்து ஒவ்வொருவரும் முடிவுசெய்ய வேண்டும். நீங்கள் செயற்திட்டக் குழுவின் அங்கமாக இருந்தால் திட்டமிடுவதை மட்டுமே நீங்கள் செய்வீர்கள்... ஏனெனில் அதுமட்டும்தான் உங்கள் வேலை. அதற்குத் தேவையான செயல்களைச் செய்து, அதை நிறைவேற்றுவது வேறொருவரின் வேலை.

திட்டங்கள் வேண்டும்தான். ஆனால் அந்தத் திட்டத்தின்படி மட்டும் உங்கள் வாழ்க்கை நடந்தால், நீங்கள் மிகவும் பரிதாபமான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில், வாழ்க்கை என்பது நீங்கள் கற்பனை கூட செய்திராத விதத்தில் நடக்கவேண்டும்.

உங்கள் வேலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், வாழ்வைப் பொறுத்தவரை நீங்கள் இந்தநொடியில், இந்தக்கணத்தில், இப்போது மட்டும்தான் எதையும் செய்யமுடியும். இப்போது தான் சாப்பிடமுடியும், இப்போது தான் சுவாசிக்கமுடியும், இப்போது தான் வாழமுடியும். திட்டமிடுவதும் கூட, நீங்கள் இப்போதுதான் செய்யமுடியும். நீங்கள் நாளை பற்றி திட்டமிடலாம், ஆனால் 'நாளைய நாளை' திட்டமிட முடியாது.

வாழ்க்கை நாம் திட்டமிட்டபடிதான் நடக்கவேண்டுமா?

திட்டம் என்பது நம் மனத்தில் உருவாகும் ஒரு யோசனை... அவ்வளவுதான். அதுவும் அது நாம் ஏற்கனவே அறிந்திருப்பவற்றில் இருந்தே தோன்றுகிறது. என்னவொன்று, அது கடந்தகாலத்தின் மேம்படுத்தப்பட்ட அச்சு. அதாவது கடந்தகாலத்தின் ஏதோவொரு நிகழ்வை எடுத்து, அதை மெருகேற்றுவது போன்றது. இது வாழ்வை வாழ்வதற்கு பரிதாபமான வழி. அப்படியென்றால் வாழ்வில் திட்டமிடக்கூடாதா? அப்படியல்ல. திட்டங்கள் வேண்டும்தான். ஆனால் அந்தத் திட்டத்தின்படி மட்டும் உங்கள் வாழ்க்கை நடந்தால், நீங்கள் மிகவும் பரிதாபமான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில், வாழ்க்கை என்பது நீங்கள் கற்பனை கூட செய்திராத விதத்தில் நடக்கவேண்டும்.

வாழ்வின் சாத்தியங்கள் கணக்கிலடங்காது. அந்த அளவிற்கு யாருமே திட்டமிட முடியாது. உங்கள் திட்டங்களை காப்பீட்டுத்திட்டம் போல் வைத்துக்கொள்ளுங்கள்... ஆனால் வாழ்வை அதன்வழியில் நடக்க அனுமதியுங்கள். இப்போது இருக்கும் நிலையில் அது வழங்கும் சாத்தியங்களை ஆராய்ந்து பாருங்கள். எப்படிப்பட்ட கதவுகள் வேண்டுமானாலும் திறக்க வாய்ப்பிருக்கிறது. இதுவரை எந்த மனிதருக்கும் நிகழ்ந்திராத ஏதோவொன்றும் கூட உங்களுக்கு நிகழலாம்.

ஆனால் நீங்கள் திட்டமிட்டபடி வாழ்க்கை நடக்கும்போது, இதுவரை இவ்வுலகில் நடந்த அதே அபத்தமான விஷயங்கள்தான் உங்களுக்கும் நடக்கும்... புதிதாக எதுவும் நடக்காது. ஏனெனில் திட்டம் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததிலிருந்தே வருகிறது. கடந்தகாலத்தில் நீங்கள் சேகரித்த விஷயங்கள் மற்றும் அனுபவங்களிலிருந்து வருகிறது.

எதைத் திட்டமிடுவது, எதைப்பற்றி சிந்திக்காமல் அதன்போக்கில் விட்டு ஆனந்தமாய் வாழ்வது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஒரு சமநிலையும், வாழ்க்கை பற்றிய புரிதலும், விவேகமும் தேவைப்படுகிறது.

எந்த அளவிற்குத் திட்டமிடுவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எவ்விதத் திட்டமும் இல்லாமல் இருந்தால், நாளை என்ன செய்வதென்றே உங்களுக்குத் தெரியாது. அதனால் எதைத் திட்டமிடுவது, எதைப்பற்றி சிந்திக்காமல் அதன்போக்கில் விட்டு ஆனந்தமாய் வாழ்வது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஒரு சமநிலையும், வாழ்க்கை பற்றிய புரிதலும், விவேகமும் தேவைப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்களின் திட்டங்கள் ஆழமான தொலைநோக்கின் காரணமாய் உருவானவையல்ல. எதிர்பாராததை சந்திக்க அவர்களுக்கு இருக்கும் பயத்தால் உருவானவை. வாழ்வில் மனிதர்களுக்கு இருக்கும் ஒரே துயரம், வாழ்க்கை அவர்கள் விரும்பும் விதத்தில் நடக்கவில்லை என்பதுதான். காலையில் காஃபி வேண்டும் என்று நினைத்தீர்கள், அது வரவில்லை, உடனே துயரத்தில் ஆழ்கிறீர்கள். ஆனால் அதே சமயத்தில் அங்கு அதிஅற்புதமான ஒரு சூரியோதயம் நடந்துகொண்டிருக்கிறது... அதைத் தவறவிடுகிறீர்கள். நீங்கள் நினைத்தது போல் உங்களின் ஏதோவொரு அற்பமான திட்டம்தான் வேலை செய்யவில்லை, ஆனால் பிரம்மாண்டமாக வேறொன்று நடந்துகொண்டிருக்கிறது.

இந்த அண்டவெளியின் விஸ்தாரத்தில், உங்களைச் சுற்றி நிகழும் வாழ்வெனும் நாட்டியத்தில், உங்கள் திட்டம் மிகவும் சிறியது. அதற்கு இத்தனை முக்கியத்துவம் தராதீர்கள். நாளை காலை என்ன செய்வது என்று தெரிவதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும்தான், ஆனால் அத்திட்டத்தின்படியே உங்கள் வாழ்க்கை நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். இதெல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாழ்க்கை எப்போதுமே உங்கள் திட்டம், கற்பனை, எதிர்பார்ப்புகள் என எல்லாவற்றிகும் அப்பாற்பட்டு நடக்கவேண்டும் என்றே கனவு காணுங்கள்.